POST: 2015-08-18T12:16:22+05:30

தமிழ் இசைச் சங்கம்
ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை-600 108
பண் ஆராய்ச்சியின் நாற்பத்து நான்காம் கூட்டம்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
22 – 12 – 1993

தொடக்கவுரை-2

வால்மீகியின் இராமாயணத்தை லவ குசர்கள் இசையமைத்துப் பாடியதாகக் கூறுவர். அத்தொல்லிசை எவ்வாறிருந்தது என்றறிய இயலவில்லை.

பதிற்றுப்பத்து, பரிபாடல் முதலிய பழந்தமிழ்ப் பனுவல்களும் இசைப்பாட்டேயாகும். ஒப்பில்லாத அப்பாடல்களைப் பாடும் முறையைத் தெளிவாக நாம் அறிந்துகொள்ள முடியவில்லை.
இந்நிலையில் தேவாரத் திருப்பாடல்களே நமக்கு வாய்த்த தமிழிசைக் கருவூலங்களாகத் திகழ்கின்றன. இன்றைக்கு 1,300 ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய தேவாரப் பாடல்கள் பண்ணமைவோடு திருக்கோயில்களால் காக்கப்பட்டு வந்தன. ‘’வேறு திசை ஆடவர்கள் கூடி இசை தேரும் எழில் வேதவனமே’’ என்று திருஞானசம்பந்தர் கூறியதை எண்ணி மகிழலாம்

எனவே, இந்திய இசை ஆராய்ச்சி என்று தொடங்கினாலும் தேவாரப் பாடல்களே இசையிலக்கணத்துக்கு உரைகல்லாக ஒளிரும்

எனவே, திருமுறைகளின் தொன்மையும் திண்மையும் கருதி, தேவார இசை ஆராய்ச்சியில் அனைத்து மொழிப் புலவர்கள் ஊக்கம் காட்டுவது வரவேற்கத்தக்கதாகும்.

இந்த நூற்றாண்டின் தொடக்கம் வரை இசையரங்குகளில் தமிழ்ப்பாடல்களுக்குத் தக்க இடம் இல்லாமலேயே இருந்தது.
தேவார இசைச்செல்வம் நம்மிடையே இருந்தும், கருநாடக இசையரங்குகளின் இறுதியில் `துக்கடா` என்னும் பெயரில் ஓரிரண்டு தமிழ்ப்பாடல்களே பாடப்பட்டன.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *