தமிழ் இசைச் சங்கம்
ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை-600 108
பண் ஆராய்ச்சியின் நாற்பத்து நான்காம் கூட்டம்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
22 – 12 – 1993
தொடக்கவுரை-1
அண்ணாமலை அரசர் செழுங்குடியைச் சார்ந்த செல்வப் பெருமக்களே!
பண்ணோடு பாடி தமிழ் மரபு வளர்க்கும் ஓதுவாமூர்த்திகளே!
தமிழிசை ஆர்வலர்களே!
இசை, நடனம், ஓவியம், சிற்பம் முதலிய மனங்கவரும் கலைகளையும் இருவடிவங்கள் மருவிய பகுதிகளாக இந்நாளில் ஆர்வலர்கள் கற்கின்றனர்.
கலை தொடர்பான கொள்கைத் தெளிவை ஒரு பகுதியாகவும், செயல் விளைவை மற்றையதாகவும் கருதுகின்றனர்.
இசையைப் பொறுத்த மட்டில் செயல்விளைவு என்பதாக – இசையிலக்கியங்களாகிய பாடல்களையும் மொழி சாராத இசைவடிவங்களையும் குறிக்கலாம்.
பாடல் வழிப்படும் இலக்கணம் இசையியல் எனப்படுகிறது.
தொன்மை வாய்ந்தது தமிழிசை என்றாலும் இந்நாளில் இந்திய இசை என்ற நிலையில் ஆராயும்போது தொன்மையும் கட்டமைப்பும் வனப்பும் வாய்ந்த தேவாரத் திருமுறைப் பாடல்களையே இசைக்கென வாய்த்த செழுஞ் செல்வங்களாகக் கொள்ள வேண்டும்.
இசையும் தாளமும் சொற்களும் (சாகித்தியமும்) இயைந்த பண் சுமந்த பாடல்களை இசைமொழியில் இந்நாளில் ‘’இசையுருப்படிகள்’’ என்பர்.
இந்திய இசைவரலாற்றில் நமக்குக் கிட்டிய உருப்படி வடிவங்களில் தேவாரத் திருமுறைப் பாடல்களே முதன்மையான – முழுமையான ‘’ஆதி’’ உருப்படிகளாக அமைந்துள்ளன.

Add a Comment