மிதியடி- எவ்வளவு மேன்மையான பெயர்!
காலணி, நடையன், செருப்பு என்று தான் வழக்கில் சொல்கிறோம். காலணி அங்காடி என்று ஒரு பலகையும் நாம் பார்த்ததில்லை. நேற்று புதுக் காலணி வாங்கக் கடைக்குச் சென்றிருந்தேன். என்னுடைய காலில் ஏற்பட்ட காயத்தின்மேல் செருப்பின் தோல் படியக்கூடாது என்று அலைந்தோம். முனிவர்கள் அணிவது போன்ற பாதக்குறடு தேடினோம். கேரளத் தோழர்கள் தொடங்கிய கடையில் மென்மையான மிதியடி பாதக்குறடு போன்ற அமைப்போடு கிடைத்தது. எந்த மாற்றத்தையும் அங்கே இருந்த பெண்மணி இசைவோடு மாற்றிக்கொடுத்தார்கள். அந்தக் கடைக்குப் பெயர் மிதியடி என்பதேயாகும். மலையாளத்தில் மிதியடி என்றால் காற்செருப்பு என்று பொருளாம். தமிழ்நாட்டில் எங்கும் காணாத இனிய பெயர் மிதியடி என்ற வகையில் ஓர் அங்காடி அமைந்திருப்பது வாழ்த்துக்குரியது.
முனைவர் ஔவை நடராசன்

Add a Comment