சேக்ஸ்பியரின் சொல் ஆளுமைத் திறன்
(05-04-2015 நாளிட்ட ‘இந்து’ ஆங்கில நாளிதழில் Literary Review பகுதியில் In Many Words எனுந் தலைப்பில் வெளியான -திரு. வி.எஸ். ரவி கட்டுரையின் தமிழாக்கம்)
மனிதனுடைய பழக்க வழக்கங்கள், உணர்வெழுச்சிகளின் ஒவ்வொரு பான்மையையும் ஊடுருவிப் பார்க்க வல்லவர் என்பதனால் சேக்ஸ்பியர் உலக மதமேதைகளிலெல்லாம் தலைசிறந்து விளங்குகிறார். அவர் தன்னுடைய நாடகங்களில் சற்றேறத்தாழ ஒரு மில்லியன் சொற்களைப் பொதிந்து வைத்துள்ளார். அவற்றுள் 27870 சொற்கள் வெவ்வாறானவை; வரலாற்றிலேயே மிகச் சிறந்த சொல்லாளுமைத் திறன். எண்ணிக்கையில் மிகுந்த அவர் அறிந்திருந்த சொற்றாகுதி இயல்கடந்த திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு! கி.பி.1623 ஆம் ஆண்டு வரையிலும் ஆங்கில மொழிக்குக் கிடைத்திருந்த சொல்வளத்தின் நாற்பது விழுக்காடு எனில் மிகையாகாது. இத்தனைக்கும் அவர் அத்தனை சொற்களை அறிந்திருந்தமைக்கு உதவும் வகையில் அகராதி ஒன்று கூட அவரிடம் இருந்ததில்லை.
இதனை இன்னமும் விரிவானதொரு பார்வையில் முன்வைக்கப் முற்படுவோமானால், சராசரியானதொரு மனிதன் பேசுவதற்கும் எழுதுவதற்கும் அறிந்திருக்கக் கூடிய சொற்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்திலிருந்து மூவாயிரம் வரை இருக்கக் கூடும். வேண்டுமானால் ஐயாயிரம் சொற்கள் வரை ஒருவரால் அடையாளம் கண்டு கொள்ள முடியலாம். மிகப்பெரிய எழுத்தாளர்களைப் பொறுத்தவரை இந்த மதிப்பீடு ஒன்றரை மடங்கிலிருந்து இரண்டு மடங்கு வரை கூடுதலாக இருக்கலாம். மில்டன் அறிந்திருந்த சொற்றொதொகுதியின் எண்ணிக்கை பத்தாயிரம் என்றும் ஹோமர் ஒன்பதனாயிரம் சொற்களைக் கையாண்டதாகவும் அறிகிறோம். மன்னர் ஜேம்ஸ் பைபிள் எட்டாயிரம் சொற்களைக் கொண்டது. வெப்ஸ்டரின் மூன்றாம் உலகளாவிய அகராதி 4,50,000 சொற்களையும் ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதி 6,15,000 சொற்களையும் தொகுத்துள்ளன. இன்றைய நிலையில் ஆங்கில மொழி இருபது லட்சம் சொற்களைக் கொண்டு கோலோச்சுகிறது. அதனையடுத்து, ஜெர்மன் மொழி 1,86,000 சொற்களையும், ருசிய மொழி !, 36,000 சொற்களையும், பிரெஞ்சு மொழி பரிதாபமாக 1,26,000 சொற்களையும் கொண்டுள்ளன. அவ்வாறு நோக்கும் பொழுது 16ஆம் நூற்றாண்டைய சேக்ஸ்பியர் தற்கால ஜெர்மன் மொழியில் உள்ள மொத்தச் சொற்களைப் போல ஐந்து மடங்கு சொற்களைப் பயன்படுத்தியுள்ளார் எனலாம்.
ஆங்கில இலக்கிய வரலாற்றிலேயே மிகப் பெருமளவில் சேக்ஸ்பியருடைய எழுத்தாக்கம் எடுத்தாளப்பட்டுள்ளது. அவருடைய நாடகங்கள் ஐம்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆக்ஸ்போர்டு மேற்கோள்கள் தொகுப்பில் இருபதாயிரம் மேற்கோள்கள் அடங்கப்பெற்றுள்ளன. சேக்ஸ்பியர் மட்டிலும் அறுபது பக்கங்களில் (பத்து விழுக்காடு) தனியாட்சி புரிகிறார். ஆங்கில மொழிக்கு அவர் 1,700 புதிய சொற்களை உருவாக்கிக் கொடுத்துள்ளார். உறைவிடம் (accommodation), காற்றில் உலவுகின்ற (aerial), அரசியல் கொலை (assassination) , அடிப்படையற்றது (baseless), படுக்கையறை (bedroom), குற்றம் கடிதல் (castigate), இயற்கைப் புணர்ச்சி (courtship), மனமுடைதல் (dishearten), தாறுமாறாக்குதல் (dislocate), ஊரறியச் செய்தல் (அலர்) (exposure), நிகழ்வுகள் நிறைந்தது (eventful), பெருந்தகைமை (generous), திருகு (gnarled), விரைவு (hurry), நடுவுநிலை (impartial), பாகுபடுத்தவொண்ணாதது (indistinguishable), நகைக்கத்தக்கது (laughable), செய்யாமை (lapse), நினைவுகூரத்தக்கது (monumental), எண்ணிறந்தது (multitudinous), வழக்கொழிந்தது (obscene), கல்விச் செருக்கு (pedant), கூர்ந்தாய்தல் (perusal), ஒளிருதல் (radiance), நம்பகத்தன்மை (reliance), போலிப் புனிதத்தன்மை (sanctimonious), இனிமையற்றது (seamy), பயனற்றது (useless) போன்ற சொற்களை முதன்முலாக ஆங்கில மொழியில் பயன்படுத்தியவர் சேக்ஸ்பியர் என்கிற உண்மை அவருடைய நூல்களைக் கற்றறிந்த மேதைகளைத் தவிர பரவலாக அறியப்படவில்லை. அவர் உருவாக்கிய பெரும்பாலான சொற்றொடர்களும் சொல்லாடல்களும் இன்றைக்கு அன்றாடப் புழக்கத்தில் உள்ளன. அவ்வகையில் சிலவற்றைக் குறிப்பிடலாம். ‘சுருங்கக் கூறல் அறிவாற்றலின் ஆன்மா’ (brevity is the soul of wit), ‘அதுதான் சிக்கல்’ (there’s the rub), ‘ஆள் பாதி ஆடை பாதி’ (the apparel oft proclaims the man), ‘கொள்வோனும் இல்லை கொடுப்போனும் இல்லை’ (neither a borrower or the lender be), ‘ஆம்பலை அழகுறுத்தியாங்கு’ (paint the lily), ‘மாந்தத் தன்மையின் அன்பமுதம்’ (milk of human kindness), ‘ஈவிரக்கமற்ற கொடூரக் கொலை’ (the most unkindest cut of all), ‘பொன்மனம்’ (heart of gold), ‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ (all that glitters is nit gold), ‘வாய் கிழியும் வரை சிரி’ (laugh yourself into stitches), ‘தீங்கிழைத்தோன் என்பதைக் காட்டிலும் பெரிதும் தீங்கிழைக்கப்பட்டவன்’ (more sinned against than a sinner), ‘காதல் வேட்கைக்குக் கருவியிசை தான் உணவென்றால்’ (if music be the food of love), ‘தீய கூட்டணி’ (bad bedfellows), ‘பேந்த விழிக்கும் பேதைகள்’ (blinking idiots), ‘ஒரே பாய்ச்சலில் தேக்கநிலையை மாற்று’ (break the ice with one fell swoop) போன்றவை.
அவர் துணிச்சலாக, ‘சொர்க்கத்தை முத்தமிடும் நரகம்’ ‘முடிவற்று நீளும் நாட்கள் கொண்ட உலகம்’ ‘பெருமை வண்ணக் கோல ஏப்ரல்’ போன்ற ஒரு சில சொல்லாடல்களை உருவாக்கினார். ‘பொறாமை உணர்வு’ (green-eyed), ‘எள்ளி நகையாடத் தக்கது’ (laughing stock), ‘கல் மனம்’ (stony heart), ‘பேச்சற்ற நிலை’ (tongue tied), ‘கடலளவு மாற்றம்’ (sea change), ‘மலையெனப் பெருகும் ஆவல்’ (towering passion), ‘பலன் நாடாத பெரும் பணி’ (yeoman’s service), ‘நீள்முடி கொண்டவன்’ (long haired), ‘காதல் விவகாரம்’ (love affair) போன்ற ஏராளமான இணைச் சொற்களையும் வடித்தார். இவை போன்ற பற்பல தொடர்கள் அவருடைய நாடகங்களிலும் கவிதைகளிலும் விரவிக்கிடக்கின்றன.
அவர் கையாண்ட தொடர்களில் சில புகழ்வாய்ந்த நூலாசிரியர்களால் தமது நூல்களுக்குத் தலைப்புகளாகப் பெருமையுடன் சூட்டப்பட்டுள்ளன. ஃபால்க்னெர் தன்னுடைய புதினங்களுள் ஒன்றிற்கு மேக்பெத் நாடகத்திலிருந்து ‘கூச்சலும் கோபாவேசமும்’ (Sound and Fury), என்கிற தொடரினைத் தலைப்பாகக் கொடுத்துள்ளார். ராபெர்ட் ஃப்ராஸ்ட்டினுடைய ‘வெளியேறு, வெளியேறு’ (Out Out), ரோஸ் மெக்காலேயின் ‘பேதையால் பிதற்றப்பட்டது’ (Told by an Idiot) ஆகிய நூல் தலைப்புகளும் மேக்பெத் நாடகத்திலிருந்து எடுத்தாளப்பட்டவை தாம். மேலும் பல்வேறு சொற்றொடர்கள் அதே நாடகத்திலிருந்து எடுத்து நூலாசிரியர்களால் தமது நூல்களுக்குத் தலைப்புகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ராபெர்ட் ஸ்டோனின் நூலுக்கான தலைப்பு ‘போரிடும் நாய்கள்’ (Dogs of War) ஜுலியஸ் சீஸரிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. அதே போல, ஜான் கன்தருடைய ‘வெள்ளத்திலிருந்து எடுக்கப்பட்டது’ (Taken at the Flood), லேன்ஸ் ஹில்லினுடைய ‘மனிதனாற்றுகின்ற தீங்கு’ (The Evil that men Do), ஃபோர்டு மெடாக்ஸ் ஃபோர்டு எழுதிய ‘அதுவே பாடும் பறவை’ (That was the Nightingale), ஃபெரெடெரிக் ரொனால்ட்ஸின் ‘வளமையின் கோமாளி’ (Fortune’s Fool), ஃபிலிப் கே. டிக் இயற்றிய ‘பொருந்தாத காலம்’ (Time out of Joint), ஓக்டென் நாஷ் ‘மலர்ப் பாட்டை’ (The Primrose Path), டொரோத்தி பார்க்கருடைய ‘கிணற்றைப் போல ஆழமானதல்ல’ (Not so Deep as a Well) ஆகிய அனைத்துமே சேக்ஸ்பியருடைய ஆக்கங்களிலிருந்து எடுத்து ஆளப்பட்டவை.
அடுத்ததாக, ஆல்டஸ் ஹக்ஸ்லேயின் ‘துணிச்சல்மிகு புத்துலகு’ என்கிற படைப்பாக்கத்திலும், ஜான் ஸ்டெய்ன்பெக்கினுடைய ‘வெறுப்பூட்டும் பனிக்காலம்’ என்ற நூலின் தலைப்பிலும், நோயெல் கோவர்ட்ஸினுடைய ‘பகட்டும் சூழ்நிலையும்’ என்கிற படைப்பிலும் சேக்ஸ்பியரின் சொல்லாளுமை மிளிருவதைக் காண்கிறோம். அப்பட்டியல் முடிவற்று நீளுகிறது. எந்தவொரு மொழியியல் வரலாற்றிலும், எந்தவொரு எழுத்தாளருக்கும் கிட்டாத தனிப்பெருஞ் சிறப்பு! புகழ்பெற்ற செஞ்சொற்பிறப்பியல் வல்லுநரான ஏர்னெஸ்ட் வீக்லே, ஆங்கிலமொழியின் சொற்றொடரியல் வளமைக்கு சேக்ஸ்பியருடைய பங்களிப்பு உலக வரலாற்றில் எந்தவொரு மொழிக்கும் எந்தவொரு எழுத்தாளரும் ஆற்றியதைப் போல பத்து மடங்கு உயர்ந்ததாகும் எனக் கருத்துரைத்துள்ளார். என்னைக் கேட்டால் அது கூட குறைத்துச் சொல்லப்பட்ட கூற்று என்பேன். சொல்வளத்தில் விரிந்து பரந்து கோலோச்சுவதும், சொற்களுக்கிடையே நிலவுகின்ற உறவுமுறைகளை உற்றறியும் திறனும் மேதைமையைக் கணிப்பதில் தலையாய காரணிகளாக விளங்குகின்றன. அந்த வகையில் சேக்ஸ்பியர் மற்றெவரைக் காட்டிலும் விஞ்சி நிற்கிறார். அறிவியல், வரலாறு, கணிதவியல், செவ்விலக்கியங்கள், சமூகவியல், உளவியல், சட்டம், லத்தீன், பிரெஞ்சு அரசியல், இசை, கலை ஆகிய அனைத்துப் புலங்களிலும் அவர் ஈட்டியுள்ள அறிவாக்கம் அவரைப் பல்புலக் களஞ்சியமாகத் திகழச் செய்கிறது. மனித மூளையின் ஒவ்வொரு புலத்துடனும் தொடர்புடைய அனைத்து நூல்களையும் கற்றதன் வாயிலாகவும், தன்னைச் சுற்றிலும் நாலா பக்கங்களிலும் வாழ்ந்த அனைத்துத் தரப்பு மக்களுடைய பழக்க வழக்கங்கள், வாழ்வியல்முறைகள் ஆகியவற்றை உன்னிப்பாகக் கவனித்துத் திரட்டிய பட்டறிவின் வாயிலாகவும் ஈட்டியவற்றைத் தனது நாடகங்களில் கவின்மிகு சொற்றொடர்களாகவும் கலை ஒளிர் சொல்லாடல்களாகவும் வடித்துத் தந்துள்ளார்.
சேக்ஸ்பியருடைய கவித்துவத்தின் தனிச்சிறப்பு ஆங்கிலமொழியிலுள்ள அனைத்து அணி வகைகளையும் உள்ளடக்கியுள்ளது. அத்தகைய அணி நயங்கள் சேக்ஸ்பியரால் மட்டிலுமே அறியப்பட்டவையாகத் தென்படுகின்றன. சுருங்கக் கூறி விளங்க வைக்கும் முதுமொழி (Aphorism), மறைமுகமாகக் குறிப்பிடுதல் (Allusion), மோணைத் தொடை (Alliteration), அந்தாதித் தொடை (Anaphora), சொல்வரிசைகளைத் தலைகீழாக மாற்றிக் கூறல்(Anastrophe), உருவகக் கதை (Allegory), இரட்டுற மொழிதல் (Amphibologia), முடிவு விழைவதைக் குறிப்பிடும் சொல்லணி (Anacoenosis), ஆரவார மொழி (Bombast), கவிதையின் இயற்கையான ஒலி நிறுத்தம் (Caesura), அடைமொழி (Epithet), ஒருசொல் பன்மொழி (Equivocation), உயர்வு நவிற்சி (Hyperbole), முரண் தொடை (Irony), குறைவு நவிற்சி (Litotes), பொருள் ஆகுபெயர் (Metonymy), உருவகம் (Metaphor), நகைப்புண்டாக்கும் சொல் குளறுபடி (Malapropism), புதிய சொல், சொற்றொடர் ஆக்கம் (Neologism), சொல் முரணணி (Oxymoron), முரண்பாடு போலத் தோன்றும் மெய்யுரை (Paradox), இருசொல் இயைபணி (Parallelism), தலைமைப் பொருள் குன்றாத நயச்செருகல் (Parenthesis), கல்விச் செருக்கு (Pedantry), மறுப்பை எதிர்நோக்கி உரிய பதிலினை முன்கூட்டியே உரைத்தல் (Prolepsis), உயர்திணைப் பண்புகளை அஃறிணைக்கு ஏற்றிச் சொல்லுதல் (Personification), சிலேடை நயம் (Pun), அறிவுக் கூர்மையுடன் பதிலிறுத்தல் (Repartee), கூறியது கூறல் (Repetition), வஞ்சப் புகழ்ச்சி (Sarcasm), தனிமொழி (Soliloquy), உவமை (Simile), சினையாகுபெயர் (Synecdoche) போன்ற அணிநலச் சிறப்புகள் விரவிக் கிடப்பதைக் காணலாம்.
மேற்கண்ட அணிநலன்களில் சில பெரிதும் தெளிவற்றவை. மில்டன், கீட்ஸ் உட்பட ஏனைய கவிஞர்களால் புரிந்து கொள்ளவொண்ணாதவை. சேக்ஸ்பியருடைய நூல்களைக் கற்றுத் துறைபோகிய மேதைகளும், திறனாய்வாளர்களும், கவிஞர்களும், இலக்கண வல்லுநர்களும் அத்தகைய சிக்கலார்ந்த அணிநலன்களைப் புரிந்து கொள்வதில் மூளையைப் பிராண்டிக் கொண்டிருக்கின்றனர். சேக்ஸ்பியருடைய நுண்மாண்நுழைபுலத்திற்கு மட்டும் அத்தகைய அரிய அணிநலன்கள் எவ்வாறு எட்டின என்பதை அறிவியல் வல்லுநர்களாலும் விளக்க இயலாது. அத்தகைய மதிநுட்பத்தின் வீர விளையாட்டுக்கள் நம்மை சேக்ஸ்பியல் ஒரு மனிதப்பிறவி தானா அல்லது மானுட இயல் கடந்த தனிப்பெரும் பிறவியா என வியக்க வைக்கிறது. தி குயென்ஸி இவ்வாறு போற்றிப் புகழ்ந்ததில் வியப்பொன்றுமில்லை. ‘‘ஓ, பேராற்றல் மிக்க பெருங்கவிக்கோ! உனது படைப்புகள் கலையழகுடனும் கவிநயத்துடனும் படைக்கப்பட்ட ஏனைய பெரும் புலவர்களுடைய படைப்புகளைப் போன்றவை என எளிதாகச் சொல்லிவிட இயலாது. பகலவனின் பேரொளிப் பிழம்பு, ஆரவாரிக்கும் அளப்பரிய பெருங்கடல், விண்ணெங்கும் வாரி இரைக்கப்பட்ட விண்மீன் கூட்டம், பூத்துக் குலுங்கும் வண்ண மலர்த் தோற்றம், பொழிந்துறைந்த பனித்திரள், பெய்யெனப் பெய்த மழை, மரஞ்செடிகளின் இலைகளில் திரண்ட திவளைகள், சுழன்றடிக்கும் சூறாவளி, பெருங்குரலெடுத்துறுமும் இடியேறு போன்ற இயற்கைத் திருநடனங்களை ஒத்தவை; புலனனைத்தையும் அடக்கி ஒடுக்கி முழுச் சரணடையும் பொழுது மட்டிலுமே மூளைக்கு எட்டக் கூடியவை!’’
சேக்ஸ்பியருடைய மூளை எனும் வேதியல் கிண்ணத்திலிருந்த ரசவாதச் செயல்முறை அவர் தன்னைச் சுற்றிலுமிருந்த மக்களிடையே கண்ட வாழ்க்கை இலக்குகளை எட்டும் பேராவல், கையறுநிலை, பொறாமை, பேராசை, கவிதைச்சுவை ததும்பும் காதல், மகிழ்ச்சி, துயரம் ஆகிய உணர்வெழுச்சிகளை சாகா வரம் பெற்ற நாடகங்களாக வளம் கொழிக்கும் இலக்கியப் பொன்னேடுகளாக மாற்றமுறச் செய்தது.ஆகவே மனித வாழ்நிலையில் அவருடைய நாடகங்களில் காண முடியாத உணர்வெழுச்சி, செயல்பாடு, சூழமைவு என்று எதுவுமே இல்லை.
ஹங்கேரிய மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவரும் ஆங்கிலத்தில் திளைத்துக் களித்தவருமான ஆடம் ஜேம்ஸ் பேக்கர் எழுதுகிறார், ‘‘வேறெந்த மொழியும் அதைப் போல இல்லை. ஒலியமைப்பிலும், ஆற்றொழுக்கான போக்கிலும், எளிய பொது அறிவுத்திறனிலும் அதனை நெருங்குவதற்கு எம்மொழியாலும் இயலாது.’’ அவர் மேலும் கூறியுள்ளார், ‘‘ஆங்கிலம் விண்ணுலகத்தாரால் கண்டுபிடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. தேவதைகள் பேசக் கூடிய பலவித மொழிகளுக்கும் அது பொது மொழியாகத் திகழ்ந்திருக்க வேண்டும்!’’
அவருடைய குறிப்புரையை நமது சூழ்நிலைக்கேற்ப சுருட்டி வளைப்போமானால், இப்படிக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும், ‘‘ஆங்கிலம் சேக்ஸ்பியருக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட மொழி என்பது உண்மை. அது இறையாற்றலுக்கே பொது மொழியாகத் திகழ்ந்திருக்க வேண்டும்!’’
ஒரு தொடரிலிலுள்ள எழுத்துக்களைக் கொண்டு மற்றொரு தொடரை உருவாக்க வல்ல பரவலாக அறியப்பட்ட தொடர்கள் மூன்று உள்ளன. அவை நமது கட்டுரைக்குப் பொருத்தமானவை. Has Will a peer, I ask me? (என்னை நானே கேட்கிறேன், வில்லுக்கு இணை உண்டா?) I swear he’s like a lamp. (நான் உறுதியளிக்கிறேன், அவர் ஒரு நந்தா விளக்கு) We all make his praise. (நாம் அனைவரும் அவருடைய புகழைப் பாடுகிறோம்) மேற்கண்ட ஆங்கிலச் சொற்றொடர்கள் ஒவ்வொன்றிலும் (William Shakespeare என்கிற அவருடைய பெயருக்கான எழுத்துக்கள் அடங்கியுள்ளன; ஒவ்வொன்றும் ஆழ்ந்த உண்மையைப் பகருகின்றன.
சேக்ஸ்பியர் தான் எழுதிய ஒவ்வொரு எழுத்திலும் ஒவ்வொரு சொல்லிலும் பேரொளி வெள்ளமாகப் பெருக்கெடுக்கிறார். மனித நாகரிகம் தோன்றிய காலந்தொட்டு வேறு எந்தக் கவிஞனுக்கோ, நாடக ஆசிரியருக்கோ இப்படியொரு புகழாரம் சூட்டிவிட முடியாது.
(வள்ளுவன், இளங்கோ, கம்பன் போன்ற தமிழ்ச் சான்றோர்காள், மன்னிப்பீராக!)

Add a Comment