POST: 2015-05-05T08:13:31+05:30

சேக்ஸ்பியரின் சொல் ஆளுமைத் திறன்-7

ஆல்டஸ் ஹக்ஸ்லேயின் ‘துணிச்சல்மிகு புத்துலகு’ என்கிற படைப்பாக்கத்திலும்,
ஜான் ஸ்டெய்ன்பெக்கினுடைய ‘வெறுப்பூட்டும் பனிக்காலம்’ என்ற நூலின் தலைப்பிலும்,
நோயெல் கோவர்ட்ஸினுடைய ‘பகட்டும் சூழ்நிலையும்’ என்கிற படைப்பிலும்
சேக்ஸ்பியரின் சொல்லாளுமை மிளிருவதைக் காண்கிறோம். அப்பட்டியல் முடிவற்று நீளுகிறது.

எந்தவொரு மொழியியல் வரலாற்றிலும், எந்தவொரு எழுத்தாளருக்கும் கிட்டாத தனிப்பெருஞ் சிறப்பு! புகழ்பெற்ற செஞ்சொற்பிறப்பியல் வல்லுநரான ஏர்னெஸ்ட் வீக்லே, ஆங்கிலமொழியின் சொற்றொடரியல் வளமைக்கு சேக்ஸ்பியருடைய பங்களிப்பு உலக வரலாற்றில் எந்தவொரு மொழிக்கும் எந்தவொரு எழுத்தாளரும் ஆற்றியதைப் போல பத்து மடங்கு உயர்ந்ததாகும் எனக் கருத்துரைத்துள்ளார்.

என்னைக் கேட்டால் அது கூட குறைத்துச் சொல்லப்பட்ட கூற்று என்பேன். சொல்வளத்தில் விரிந்து பரந்து கோலோச்சுவதும், சொற்களுக்கிடையே நிலவுகின்ற உறவுமுறைகளை உற்றறியும் திறனும் மேதைமையைக் கணிப்பதில் தலையாய காரணிகளாக விளங்குகின்றன. அந்த வகையில் சேக்ஸ்பியர் மற்றெவரைக் காட்டிலும் விஞ்சி நிற்கிறார்.

அறிவியல், வரலாறு, கணிதவியல், செவ்விலக்கியங்கள், சமூகவியல், உளவியல், சட்டம், லத்தீன், பிரெஞ்சு அரசியல், இசை, கலை ஆகிய அனைத்துப் புலங்களிலும் அவர் ஈட்டியுள்ள அறிவாக்கம் அவரைப் பல்புலக் களஞ்சியமாகத் திகழச் செய்கிறது. மனித மூளையின் ஒவ்வொரு புலத்துடனும் தொடர்புடைய அனைத்து நூல்களையும் கற்றதன் வாயிலாகவும், தன்னைச் சுற்றிலும் நாலா பக்கங்களிலும் வாழ்ந்த அனைத்துத் தரப்பு மக்களுடைய பழக்க வழக்கங்கள், வாழ்வியல்முறைகள் ஆகியவற்றை உன்னிப்பாகக் கவனித்துத் திரட்டிய பட்டறிவின் வாயிலாகவும் ஈட்டியவற்றைத் தனது நாடகங்களில் கவின்மிகு சொற்றொடர்களாகவும் கலை ஒளிர் சொல்லாடல்களாகவும் சேக்ஸ்பியர் வடித்துத் தந்துள்ளார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *