“வேந்தர் பெருமானே, நீயோ, குளிர்ந்த நீரையுடைய காவிரிக்குத் தலைவன். நின் அருகிலுள்ள அரசர் பெருந்தகையாகிய இவனோ, தமிழ் வளர்க்கும் பாண்டியர் குடியுள் ஏறு போல்வோன். நீ அறந்தங்கும் பேரூராகிய உறையூரின்கண் வீற்றிருக்கின்றாய். இவனோ, தமிழ் பொருந்திய மதுரையின்கண் அரசு வீற்றிருக்கும் குளிர்ந்த செங்கோலையுடைய வேந்தன். நீவிர் இருவீரும் கண்ணன், பலதேவன் என்னும் இரண்டு பெருந்தெய்வங்களும் கூடி நின்றாற்போலப் பகைவர்க்கு அச்சந்தரும் தோற்றத்துடன் நண்பு செய்து ஒழுகுகின்றீர். ஆதலால், இந்த நட்பைக்காட்டிலும் தமிழகத்திற்கு இனிமை தருஞ் செயல்கள் எவையேனும் உளவோ? இவ்வாறே ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்து ஒழுகுவீராக! இப்பொழுதுள்ள நட்பினின்றும் வேறுபடாதிருப்பீரானால், கடல் சூழ்ந்த இவ்வுலகவுரிமை முழுவதும் உமது கையகத்தது ஆகும். உங்கள் ஒற்றுமைத்திறத்தைக் கண்டு பொறாமையுற்ற அயலார் சிலர், உங்களைத் தனித்னியே அணுகி, நன்மை தருவனபோலவும், நீதியொடு பொருந்தினபோலவும், நும் முன்னோருடைய பழைய ஒழுக்கத்தை விரித்துரைப்பனபோலவும், அமைந்த சொற்களை வசனையாகச் சொல்லி, உங்களை வேறுபடுத்தி, இகல் விளைத்தற்குச் சமயம் பார்த்துத் திரிகின்றார்கள். ஆதலால், அவர்களுடைய பொறாமை விளைக்கும்.தீயசொற்களைக் கேளாது இன்றே போல என்றும் நண்பினாற் கூடி வாழ்வீராக ! நும்முடைய வேல் போர்க்களத்தின்கண் வென்று மேம்படுக ! நுமக்குப் பகையாயினாருடைய குன்றுகள் புலியும் கயலும் ஆகிய அடையாளங்களைச் சேரப் பொறிக்கப்பெற்ற சிகரங்களையுடையன ஆகுக !“ என்பது, அப்பாடலால் புலவர் கூறிய அறிவுரையாகும்.

Add a Comment