அம்மூவனார்-6
டாக்டர் ஔவை நடராசன்
அகப்பொருட் கோவைக்கே யன்றி அந்தாதி யிலக்கியத்திற்கும் வழிகாட்டியவர் அம்மூவனார். கோவைபட அமைந்த இத்தொண்டிப் பாடல்களே அந்தாதிபடவும் அமைந்துள. இரு புதுமைக்கும் இடனாக ஒரே பத்துப்பாடல்களை யாத்தார் ஆசிரியர். சங்க விலக்கியத்தின் மொழிநடைக்கு மாறான இவ்விரு புதிய கூறுகளையும் ஐங்குறு நூற்றின் பழையவுரைகாரர் அன்றே கண்டு எழுதியுள்ளார்
அம்மூவனார் நெய்தலறிஞர் இந்நிலையிலும் இரங்கற்பொருளே நெய்தலுக்கு உரியது எனினும், புணர்தல் இருத்தல் ஊடல் என்ற புறவுரிப் பொருள்களை நெய்தற் சூழ்நிலையில் வைத்துப் பாடியுளர்.
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி நெய்தல் சிதைக்கும் துறைவன்
நல்லன் என்றி யாயின்
பல்லிதழ் உண்கண் பசத்தல் மற்றெவனோ, (ஐங். 170)
என்பது கணவனது பரத்தொழுக்கம் பற்றித் தலைவி புலந்துகூறும் பாட்டு இது நெய்தல் நிலத்து மருதவொழுக்கம் கூறுவது. புணர்தலுக்கு மலைப்பாங்கும். ஊடலுக்கு வயலிடமும், இருத்தலுக்குக் காட்டுச் சார்பும் சூழ்நிலையாக அமைதல் வேண்டும் என்பது புலனெறி வழக்கம். இவ்வழக்கம் இலக்கியக் கற்பனைக்குச் சிறக்கும் என்பது கருதி நம் முன்னோர் வகுத்தனர். ஊடல் ஓரிடம் கூடல் ஓரிடம் நடை முறையில் இல்லை. இயலாது என்பது வெளிப்படை அம்மூவனார் இயல்புநெறிப் புலவர் போலும்! அவர் பாட்டுக்கு நெய்தல்வாழ் மக்களே பெரும்பாலும் தலைமக்கள் ஆதலின் எல்லா உரிப்பொருளுக்கும் களமாக ஒரு திணையையே கொண்டனர். பரத்தையைக்கூட “நெய்தலங் கண்ணி‘ (ஐங் 135) என்று குறிப்பர்.
மூவன் என்பது மூப்பன் என்றும் அழைக்கப்படலாம். இந்நாளில் மூப்பனார் என்பது சாதிப் பெயராக வழங்குகிறது. அம்மூவன் என அடையொடு இடம் பெறுதலால் இக்காலத்தில் அம்மு, திம்மு, திப்பு என்னும் பெயர்கள் மக்களுக்கு இடப்பெற்று வழங்கியது போலும் ! எனவே அம்மூவன் என்பதே இயற்பெயராகும் எனக் கொள்ளலாம்.

Add a Comment