POST: 2015-03-04T19:24:10+05:30

அம்மூவனார்-4
டாக்டர் ஔவை நடராசன்

என்னும் ஐங்குறுநூற்றுச் சிறப்புப் பாயிர வெண்பாவும் இவர் இன்னராதலை வலியுறுத்தும். மேலெடுத்துக் காட்டிய இவருடைய பாடலால் மலை நாட்டின் கடற்கரையில் மாந்தை, தொண்டி என்பனவும், பாண்டிநாட்டின் கடற்கரையில் கொற்கை என்பதும் மலையமானாட்டில் கோவலூர் என்பதும் இவர் காலத்தில் சிறந்த நகரங்களாக இருந்தனவென்று தெரிய வருகின்றன. “பெண்ணையம் பேரியாற்று நுண்ணறல்“ என அகநானூற்றில் பெண்ணையாறு இவராற் பாராட்டப்பட்டுள்ளது.

தலைவன் தன் நாட்டையும் கொடுத்துத் தலைவியை மணக்கத் துணிந்தனன் என்று தலைவியின் பெறற்கருமையை இவர் பாராட்டுகிறார். ஐங். 147, இக் கருத்தே அகநானூறு 280 –ஆம் செய்யுளிலும் வந்துள்ளது.

‘கடலினும் நட்புப் பெரிது‘ (184) எப்பொழுதும் மொழியத் தக்க சொற்கள். ‘மெல்லிய இனிய மேவரு தகுந‘ (குறுந். 306) ‘நல்கூர்த்‘ தோர்வயின் நயனில ராகுதல் தகாது‘ (குறுந். 327) என்பன இவர் எடுத்துக் காட்டும் சில நீதிகளாகும்.

ஐங்குறுநூறு தொண்டிப்பத்து முழுவதையும் ஒரு செய்யுளின் ஈற்றடியிலுள்ள சொற்களைக் கொண்டு அதற்கடுத்த செய்யுளை இவர் தொடங்ப் பாடியிருக்கும் நயம் படித்து மகிழ்வதற்குரியதாகும்.

குறுந்தொகையில் பலவிடங்களில் இவர் பெயர் அம்மூவன் என்றே காணப்படுகிறது.

இவர் பாடிய பாடல்களாக 127 பாடல்கள் எட்டுத்தொகை நூல்களில் உள்ளன. அவை நற்றிணை-10, குறுந்தொகை – 11, ஐங்குறுநூறு இரண்டாம் நூறாகிய நெய்தல் செய்யுள்-100, அகநானூறு-6, 127 ஆம் அகச் செய்யுட்களின் ஆசிரியராகிய அம்மூவனார். அகத்தினைப் பாட்டெண்ணிக்கையில் இரண்டாமவராக இலங்குபவர் ‘புறத் தொழா மாந்தர்‘ என்பது போல, இவர் புறப்பாட்டு யாதும் பாடியதில்லை. வரலாற்றுக் குறிப்பு இவர் பாடல்களில் சாலச் சிறிது களவில் கற்பில் பலதுறை பற்றியும் பல மாந்தர்கள் பற்றியும் பாடலாக்கிய விரிவுச் சிறப்பு உடையர் அம்மூவனார். அகநானூறு நற்றிணை குறுந்தொகை ஐங்குறுநூறு என்ற சங்க அகத்தொகை நான்கே. இந்நான்கினும் இவர் பாடல்கள் தொகுக்கப் பெற்றுள என்பதும் ஒரு சிறப்பு.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *