திருக்குறள் திறமும், திருவள்ளுவர் சிலையும்
பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன்
• தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர்.
• உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்களின் அன்பு மகன் சொல்வேந்தர்.
• தமிழுக்காக பல நாடுகளுக்குச் சென்று வந்தவர்.
திசை எட்டும் திருவள்ளுவர் சிலைகளை, திருக்குறள் நெறியைக் கடல் கடந்த நாடுகளிலும் நிறுவி உலக மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் ஒருமை உணர்வை வளர்க்க வேண்டும் என்பது… அண்ணல் செவாலியர் டாக்டர். வி.ஜி.சந்தோசத்தின் தனி விருப்பமாகவும் உலகத் தமிழ்ச் சங்கத்தின் உயரிய நோக்கமாகவும் அமைந்துள்ளது. அந்த வகையில் உலகின் திலகமாகத் திகழும் ஆஸ்திரேலிய நாட்டின் அழகு நகரமாகிய சிட்னி மாநகரில், திருவள்ளுவரின் திருவுருவச் சிலையை நிறுவும் விழாவை உலகத்தமிழ்ச் சங்கத்தின் 13 ஆம் மாநாடாகவும் நடத்தி மகிழ வேண்டும் என்ற மனச்செம்மை ஆஸ்திரேலியத் தமிழர்களுக்கு உயிரோடு ஒன்றிய நல்லுணர்வாகும். திருவள்ளுவர் திருவுருவச் சிலையைத் தமிழகத்தின் தென்குமரியில் வனப்புற வடித்துச் சிட்னிமாநகரின் திருக்கோயிலுக்கு ஏந்தி வருவது வரலாற்றுப் பெருமிதம் வாய்ந்த நிகழ்ச்சியாகும். இது தமிழகத்திற்கும் தமிழினத்திற்கும் தாங்கொணாப் புகழையும் தருவதாகும். தென்குமரியில் கிடைத்த திண்ணிய கற்பாறையில் இச்சிலை உருவாகி திருவள்ளுவர் நெடுந்தோற்றத்தைக் கண்ணைக் கவரும் வகையில் காட்டுகிறது. இந்நிலையில் திருக்குறளின் திறத்துக்கு உரையெழுதித் திருக்குறளின் பொருளுடைமைக்குப் பொலிவேற்றும் வகையில் பரிமேலழகரின் விளக்கத்தில் ஒரு துளியைக் காணலாம்.
தமிழ்மொழிக்குப் பெருமை நல்கும் நூல்களில் தொல்காப்பியம், திருக்குறள் என்ற இரு நூல்கள் தலைசிறந்தனவாகும். தொல்காப்பியம் எழுத்தும் சொல்லும் பொருளுமாகிய மூவகை நெறியில் தமிழருடைய எண்ணமும் உணர்வும், ஒழுக்கமும் வாழ்வும், பண்பாடும் கலையும் மிளிரும் இலக்கியப் பாங்கை உரைக்கின்றது. எழுத்தும் சொல்லும் தமிழரிடையே நிலவிய அறமும் பொருளும் இன்பமுமாகிய சிந்தை, சொல், செயல் ஆகிய கூறுகளைத் திருக்குறள் குறட்பாக்களால் உரைக்கின்றது. திருக்குறள் தொல்காப்பிய விதிகளுக்குக் காலத்தாலும் கருத்தாலும் பொருளாலும் நடையாலும் பெரிதும் இயைந்து நிற்பதாகும். தமிழ்த் தொன்னூல்களுக்கு உரைகண்ட ஆசிரியருள் நுண்மாண் நுழைபுலச் செல்வராய், தமிழ் மரபோடு வடநூல் மரபும் பல்வேறு சமய நுண்பொருள்களையும் மருந்து நூல், பொருள் நூல், உலகியல் நிலைகளையும் நன்குணர்ந்த சான்றோராய் விளங்கியவர் பரிமேலழகர். திருக்குறளுக்குப் பரிமேலழகர் உரையே தனித்த ஒரு நூலாகவே திருக்குறளோடு உடன் வைத்துப் பயிலத்தக்க பண்புடையது. பலர் புகழும் பாங்குடையது.
வள்ளுவர்சீர் அன்பர்மொழி வாசகம் தொல்காப்பியமே
தெள்ளுபரி மேலழகர் செய்தவுரை – ஒள்ளியசீர்த்
தொண்டர் புராணம் தொகுசித்தி ஓராறும்
தண்டமிழின் மேலாந் தரம் .
என்ற வெண்பா நாமறிந்தது. திருக்குறள், தொல்காப்பியம், திருத்தொண்டர் புராணம் எனப் பல நூல்களைத் தொகுத்த புலவர், தனிநூலுக்கு ஒப்பாகப் பரிமேலழகர் உரையையும் நிறுத்தி உரைப்பது. பரிமேலழகர் உரையைப் பழங்காலப் பெருமக்கள் எத்தகைய மதிப்போடு போற்றினர் என்பதைக் காட்டும்.
பரிமேலழகர் சங்க இலக்கியங்களில் எட்டுத் தொகையுள் ஒன்றாகிய பரிபாடலுக்கும் உரை வரைந்தார். எனினும் திருக்குறள் உரை போலப் பரிபாடல் உரை வளமும் வனப்பும், திட…்பமும் நுட்பமும் செறிந்ததில்லை. அதனால் பரிமேலழகர் உரைதானோ என்று ஐயுறுவோரும் உண்டு. எனவே பரிமேலழகர் உரை என்றால் திருக்குறள் உரை ஒன்றையே நினைக்கும் நிலை தோன்றியது. இத்தகைய சிறப்போடு மிளிர்வதால் பரிமேலழகர் உரையின் தனிப் பாங்கை அறிந்து மகிழ்வதில் அறிஞர்களுக்கு ஆர்வம் பெருகியது.
செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
`சிறிது` ஈயப்படும் என்பது எவ்வாறு பொருந்தும் என்று தாமே வினவிக்கொண்டு அதற்கு விடை கூறும் நிலையில் வயிற்றுணவு மிகுமானால், இடையூறு உண்டாகும் என்று நினைத்தார். ஆகவே வயிற்றுணவு பெரியதாயவழி – வயிற்றுணவு மிகுமானால் அது நோயும் காமமும் விளைவித்தலின், திருவள்ளுவர் ‘‘சிறிது’’ குறித்ததே பொருத்தம் என்று கருதினார். ‘‘சிறிது என்பது ஏன்? சிறிதும் இல்லையானால் நோய் முதலியன குறையும் அல்லவா? என்று வினவினால் அதற்கும் விளக்கம் தருவாராய்’’ அது தானும் பின்னிருந்து கேட்டற் பொருட்டு என்பதாயின், அவ்வாறு கேட்பதற்குரிய வலிமையும் தெளிவும் தருவது வயிறு. அவ்வயிற்றுக்குத் தருகின்ற உணவை இழிந்தோர்க்குச் சொல்வது போல ‘‘ஈயப்படும்’’ என்று வைப்பது பொருத்தமோ என்ற வினாவும் பிறக்கும். இதனை நினைத்துப் பரிமேலழகர் பொருத்தம் காட்டுவாராய், ‘‘ஈதல் வயிற்றது இழிவு தோன்ற நின்றது’ என்று கூறினார். உணவு மிகுமானால் காமமும் நோயும் தோன்றலால் ‘‘ஈயப்படும்’’ என்று எழுதியது பொருந்தும் என அமைதி காண்கிறார்.
சொல்வன்மை அதிகாரத்தில் கேட்டார்ப் பிணிக்கும் தகைமைத்து என்பதனை விரித்துப் பொருள் விளக்கும்போது அக்குணங்களாவன வழுவின்மை, சுருங்குதல், விளங்குதல், இனிதாதல், விழுப்பயன் தருதல் என்றிவை முதலாயினென்று காட்டும் பரிமேலழகர் தம் உரையையும் அவற்றுக்குச் சான்றாகுமாறு வரைந்தார். இதன் நலம் பாராட்டிய நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கண்கவர் வனப்பிற்றாயதோர் படிவமமைக்கும் ஓவியப் புலவன் ஏற்புடைய வண்ணங்களை இடனறிந்து அளவானுய்க்குமாறு போலப் பரிமேலழகரும் அவ்வவ்விடங்கட்கு ஏற்ற சொற்களை மிகை, குறையின்றி அளவானே பெய்து அணிநலம் விளங்கத் தம் உரையை யாத்தார். அதனால் அவரது உரையின் கண் உள்ள ஒவ்வொரு சொல்லும் நல்லியற் கவிஞர் நாவிற் குறித்தமர்ந்த நாமச் சொல்லெனவே விளங்கும் பெற்றியன கற்பார்க்குச் சான்றோரது செஞ்சொற் கவிதையைப் போன்றே இவ்வுரையாலும் ஒருகாலைக்கொருகால் இன்பம் மிகுதல் ஒருதலை எனப் போற்றுகின்றனர். எனவே ‘‘பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ, பாரிலுள்ள நூலெல்லாம் வள்ளுவர் செய் நூலாமோ, நூலின் பரிந்துரை எல்லாம் பரிமேலழகன், தெளித்த உரையாமோ, தெளி’’ என்று பாராட்டும் பழம்பாட்டும் நிலவுகிறது. நூல்களைப் பயின்று தெளிவுறப் பொருளறிந்து கொள்வதற்கு உதவும் அரும்பணியே உரைவரையும் நலப் பணியாகும். அருஞ்சொற்களுக்கும் சொற்றொடர்களுக்கும் பொருள் உரைத்தலும் அவற்றிற்குப் பொழிப்புரைத்தலும் ஒரு வகை. அவற்றுள் முதல் வகையை அரும்பதவுரை, கண்ணழித்துரை, பதவுரை என்றும் பின்னதைப் பொழிப்புரை என்றும் கூறுவர். உரைக்கப்பட்ட உரையின் கண் அடங்கிய கருத்துகளை வினா,விடை வாயிலாக விளக்கி நூலாசிரியர் உள்ளக்குறிப்பை உய்த்துணர்ந்து நூலின் சொற்பொருளமைவுக்கு மாறுபடாவண்ணம் அறிவாராய்ச்சி நெறியில் தெளிய உரைத்தலும் ஒரு வகை. தொல்காப்பியம் முதலிய இலக்கணங்கட்கும் இலக்கியங்கட்கும் உரையாசிரியர் தோன்றி, உரையெழுதியது ஆயிரம் ஆண்டுகளில் நிகழ்ந்த செயல் வகையாகும். அதற்கு முன்னே நிலவிய உரைகளைப் பற்றி முழுவதுமாக அறிய முடியவில்லை. எனினும், இறையனார் களவியலுக்கு நக்கீரர் கண்ட உரை பழைமை வாய்ந்தது. அதனையும் தொல்காப்பியம், திருக்குறள் முதலிய நூல் உரைகளையும் ஒப்ப வைத்து நோக்கும்போது, உரையாசிரியர் வழிவழியாக மேற்கொண்டிருந்த மரபொன்று வெளிப்படுகிறது.
எடுத்தோத்து, இலேசு, உத்தி என்ற மூன்று நெறிகளால் இலக்கண இலக்கியங்கட்கு உரை காண்பது அம்மரபு. பிற்கால நூல்களான நன்னூல், நேமிநாதம், யாப்பருங்கலம் முதலிய இலக்கண நூல் உரைகளில் அம்மரபு புலனாவது போல், இலக்கியங்கட்கு எழுதிய உரைகளில் தெளிவாகக் காணப்படுவதில்லை. பருந்தும் அதன் நிழலும் போன்று நூலோடு இயைந்து செல்லும் பழைய உரை முறையை மறவாது கடைப்பிடித்ததொன்றே, பரிமேலழகர்க்குச் தனிச் சிறப்பையும், உரைவளத்துக்கு உயர்ந்த அழகையும் வழங்கியது.
எடுத்தோத்து, இலேசு, உத்தி என்ற மூன்றாலும் பொருள் காணும் மரபு நூலாசிரியன் உள்ளக் கருத்தை ஆழ அகழ்ந்து கண்டு, அறிவு நெறியால் ஆராய்ந்து தெளிவிக்கும் திறமும் அருமையும் வாய்ந்ததாகும். வினா-விடைகளால் நுண்ணறிவோடு நுழைந்து தெளிவு பெறும் பயிற்சியைக் கல்வி முறையிலேயே மாணவர் கடைப்பிடிக்குமாறு கற்றுத் தருவது ஆசிரியர் கடனாகும். கல்வி பயில்வோரிடையே காரண காரிய முறையில் ஆராய்ந்து உண்மை காணும் உரம் உருவாகும்.
இவ்வகையால் பரிமேலழகர் இம்முறையைக் கடைப்பிடித்து உண்மை உரை காண்பதில் வெற்றி பெற்றுள்ளார். எனினும், வேற்றுமொழி மரபும் தமிழ் மரபும் வேறு வேறு இயல்பின என உணர்த்தும். சில குறட்பாக்களில் இடர்ப்பட்டு அல்லற்படுகிறார். அவற்றை மறுப்பதும் உரைப்பதும் தமிழறிந்தார் தலைக்கடனாகும். அதுபற்றி அவரது உரை மாண்பும் அழகும் பெரிதாகக் குன்றுவதில்லை என்றே நாம் போற்றலாம்.
பெருந்தகை, அருந்தமிழ் உரைநடைக்கு அழகு சேர்த்த பெருந்தகை ஆறுமுக நாவலர் பதிப்பிலும் உரைநலத்திலும் இந்நலங்களெல்லாம் மலிந்து கிடப்பதைக் கண்டு மகிழலாம். இன்றும் நாவலர் பதிப்பு நலங்கெழுமிய பதிப்பாக ஒளிர்கிறது.

Add a Comment