POST: 2015-02-20T09:26:43+05:30

திருக்குறள் திறமும், திருவள்ளுவர் சிலையும்

பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன்

• தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர்.
• உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்களின் அன்பு மகன் சொல்வேந்தர்.
• தமிழுக்காக பல நாடுகளுக்குச் சென்று வந்தவர்.

திசை எட்டும் திருவள்ளுவர் சிலைகளை, திருக்குறள் நெறியைக் கடல் கடந்த நாடுகளிலும் நிறுவி உலக மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் ஒருமை உணர்வை வளர்க்க வேண்டும் என்பது அண்ணல் செவாலியர் டாக்டர். வி.ஜி.சந்தோசத்தின் தனி விருப்பமாகவும் உலகத் தமிழ்ச் சங்கத்தின் உயரிய நோக்கமாகவும் அமைந்துள்ளது.

அந்த வகையில் உலகின் திலகமாகத் திகழும் ஆஸ்திரேலிய நாட்டின் அழகு நகரமாகிய சிட்னி மாநகரில், திருவள்ளுவரின் திருவுருவச் சிலையை நிறுவும் விழாவை உலகத்தமிழ்ச் சங்கத்தின் 13 ஆம் மாநாடாகவும் நடத்தி மகிழ வேண்டும் என்ற மனச்செம்மை ஆஸ்திரேலியத் தமிழர்களுக்கு உயிரோடு ஒன்றிய நல்லுணர்வாகும். திருவள்ளுவர் திருவுருவச் சிலையைத் தமிழகத்தின் தென்குமரியில் வனப்புற வடித்துச் சிட்னிமாநகரின் திருக்கோயிலுக்கு ஏந்தி வருவது வரலாற்றுப் பெருமிதம் வாய்ந்த நிகழ்ச்சியாகும். இது தமிழகத்திற்கும் தமிழினத்திற்கும் தாங்கொணாப் புகழையும் தருவதாகும். தென்குமரியில் கிடைத்த திண்ணிய கற்பாறையில் இச்சிலை உருவாகி திருவள்ளுவர் நெடுந்தோற்றத்தைக் கண்ணைக் கவரும் வகையில் காட்டுகிறது.

இந்நிலையில் திருக்குறளின் திறத்துக்கு உரையெழுதித் திருக்குறளின் பொருளுடைமைக்குப் பொலிவேற்றும் வகையில் பரிமேலழகரின் விளக்கத்தில் ஒரு துளியைக் காணலாம்.

தமிழ்மொழிக்குப் பெருமை நல்கும் நூல்களில் தொல்காப்பியம், திருக்குறள் என்ற இரு நூல்கள் தலைசிறந்தனவாகும். தொல்காப்பியம் எழுத்தும் சொல்லும் பொருளுமாகிய மூவகை நெறியில் தமிழருடைய எண்ணமும் உணர்வும், ஒழுக்கமும் வாழ்வும், பண்பாடும் கலையும் மிளிரும் இலக்கியப் பாங்கை உரைக்கின்றது. எழுத்தும் சொல்லும் தமிழரிடையே நிலவிய அறமும் பொருளும் இன்பமுமாகிய சிந்தை, சொல், செயல் ஆகிய கூறுகளைத் திருக்குறள் குறட்பாக்களால் உரைக்கின்றது. திருக்குறள் தொல்காப்பிய விதிகளுக்குக் காலத்தாலும் கருத்தாலும் பொருளாலும் நடையாலும் பெரிதும் இயைந்து நிற்பதாகும்.

தமிழ்த் தொன்னூல்களுக்கு உரைகண்ட ஆசிரியருள் நுண்மாண் நுழைபுலச் செல்வராய், தமிழ் மரபோடு வடநூல் மரபும் பல்வேறு சமய நுண்பொருள்களையும் மருந்து நூல், பொருள் நூல், உலகியல் நிலைகளையும் நன்குணர்ந்த சான்றோராய் விளங்கியவர் பரிமேலழகர். திருக்குறளுக்குப் பரிமேலழகர் உரையே தனித்த ஒரு நூலாகவே திருக்குறளோடு உடன் வைத்துப் பயிலத்தக்க பண்புடையது. பலர் புகழும் பாங்குடையது. தமிழில் தகைசான்ற நூல்கள் என்று பட்டியலிட்டு வகைக்கொன்றாகக் காட்டும்
வள்ளுவர்சீர் அன்பர்மொழி வாசகம் தொல்காப்பியமே
தெள்ளுபரி மேலழகர் செய்தவுரை – ஒள்ளியசீர்த்
தொண்டர் புராணம் தொகுசித்தி ஓராறும்
தண்டமிழின் மேலாந் தரம்.
என்ற வெண்பா நாமறிந்தது. திருக்குறள், தொல்காப்பியம், திருத்தொண்டர் புராணம் எனப் பல நூல்களைத் தொகுத்த புலவர், தனிநூலுக்கு ஒப்பாகப் பரிமேலழகர் உரையையும் நிறுத்தி உரைப்பது. பரிமேலழகர் உரையைப் பழங்காலப் பெருமக்கள் எத்தகைய மதிப்போடு போற்றினர் என்பதைக் காட்டும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *