விருந்தினர் பக்கம்-2
பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசன் ருக்கிறார்.
சுதந்திர உணர்ச்சி பொங்கிக் கொண்டிருந்த நேரத்தில் விடுதலை வேட்கை ததும்ப பாடிய பாடல்.
புரட்சிக்கவிஞருடைய நடையில் சொல்வதென்றால்,
‘புதுநெறி காட்டிய புலவன்
எனக்கு வாய்த்த தலைவன்’
என்று பாடுகிறார்.
‘பைந்தமிழ்த் தேர்ப்பாகன்
செந்தமிழ்த்தேனீ
சிந்துக்குத் தந்தை
குவிக்கும் கவிதைக் குயில்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு
நீடுதுயில் நீக்க பாடிவந்த நிலா
காடுகமழும் கற்பூரச் சொற்கோ
கற்பனையின் ஊற்று
கதையின் புதையல்
அறம்பாட வந்த அறிஞன்
மறம் பாடவந்த மறவன்
மண்டும் மதங்க அண்டாத நெருப்பு
அயலார் எதிர்ப்புக்கு அணையாத விளக்கு
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்
தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
பாரதியால் தமிழ் தகுதி பெற்றதும்’
என்று பாடியிருக்கிறார். இதைவிட பாரதிக்குப் புகழ்ப்பாடல்களை நம்மால் சொல்லமுடியாது
இன்றைய நாள் அவருடைய பிறந்த திருநாள். 133-ஆவது திருநாளை நாம் பெருமிதமாக நினைக்க
கடமை பட்டிருக்கிறோம். கவிஞர்கள் என்று சொன்னாலேயே, ஆங்கிலத்தில் என்ன சொல்வார்கள் என்றால், அவர்களுக்கு ஒரு பெண்மை இருக்கும் என்பார்கள். அது அவர்களிடம் உள்ள பழக்கம். அவர்கள் பைரனை, ஷெல்லியை, மில்டனை எல்லாம் நினைத்துச் சொல்லியிருக்கிறார்கள். நான் நினைக்கிறேன். மில்டனுக்கு என்ன பெயர் தெரியுமா? Lady of the College. அப்படியிருப்பார்கள். ஆனால் பாரதியாரைப் பார்த்தாலேயே அந்த முறுக்கிய மீசையும், வாய்திறந்தால் பொங்குகின்ற ஆசையும், தலையில் கட்டியிருக்கிற முண்டாசையும் நினைத்துப் பார்த்தால் ஒரு வீரம் செறிந்த, ‘வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ’ என்று பேசுகின்ற அந்தக்குரல் நம் காதில் ஒலித்துக்கொண்டிருப்பதுபோலவே இருக்கிறது.
பாரதியாரை நாம் நினைப்பதற்கு தமிழகத்தில் நாம் தேசிய மாகவி என்று நாம் அழைக்கின்ற பெருமை பாரதியாரைத்தான் சாரும். பாரதியார்தான் பல புதுமைகளைச் செய்துகாட்டியிருக்கிறார்.
நான் ஒன்று சொல்கிறேன். நாமெல்லாம் இப்போது பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அறிவு பரப்புகின்ற இடங்களிலேயெல்லாம் முதற்பாடலாகப் பாடுகின்றோமே ‘நீராருங் கடலுடுத்த…..’ இந்தப் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்து என்று மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய பாடல். அப்போதுதான் தமிழ்த்தாய் என்று சொல்கின்ற வழக்கம் வந்தது. தமிழண்னை, தமிழணங்கு என்று சொல்வார்கள். இந்த அடிப்படையிலே பாருங்கள். இந்திய நாடு முழுவதையும் ஒன்றாகப் பார்க்கிற பாரதமாதா, பாரதஅன்னை, பாரதஅன்னைக்கு தசாங்கம் என்றெல்லாம் பாடுகின்ற சுதந்திரதேவி என்று சொல்லுகின்ற உணர்வை பாரதியார்தான் முதன்முதலாக ஏன் இந்திய நாட்டிலேயே பாடிக்காட்டியவர் என்று பெருமிதமாகச் சொல்லலாம்.
என்னுடைய நண்பர் அமெரிக்காவிற்குப் போயிருந்தார். தன்னுடைய பேரனைப் பார்க்க. பேரனை அழைத்துக்கொண்டு நியூயார்க் நகரத்தில் அந்த விடுதலைச் சிலை இருக்கிறது. அந்தச் சிலையைப் பார்த்த உடனேயே அந்த இளம்பிள்ளை இந்த ஊர் கோயில்களைப் பார்த்து வழிபட்ட பழக்கம் இருப்பதனால் தன் இரண்டு கைகளையும் கும்பிட்டு அந்தச் சிலையை வணங்கினான். அது பெரிய கதை. பிரெஞ்சு நாட்டு மக்கள் அன்பளிப்பாகத் தந்தது. உடனே அவர் உடம்பு சிலிர்த்துப் போய், ‘சுதந்திரதேவி நின்னை தொழுதிட மறக்கிலேனே’ இது பாரதியாருடைய தொடர். இந்த நாட்டினுடைய விடுதலையை ஒரு அன்னை வடிவமாகப் பார்த்து ‘சுதந்திரதேவி நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே’ என்று பாடி இந்த நாட்டு உணர்ச்சிக்கு நம்முடைய நரம்புகளில் முறுக்கேற்றி நரம்புகளை இரும்பாக்கி நரம்பையெல்லாம் உணர்வாக்கி என்று சொல்லுவதுபோல பாரதியாருடைய பாடல்தான் ஒரு முழுமையான இந்திய வடிவத்தையே காட்டுகிறது.
வாழிய செந்தமிழ் இது நமக்குத் தெரியும். நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம். நம்மோடு கூட இருக்கிறவர்களுக்கெல்லாம் பெயர் உண்டு. வாழ்க நற்றமிழர் இது எங்கு போய் முடிகிறது என்றால் வாழிய பாரத மணித்திருநாடு. வாழிய செந்தமிழ் இது ஒரு பெரிய உரிமை. வாழ்க நற்றமிழர் என்பது உரிமை. இது இரண்டும் கலந்த பெருமை என்பது இந்திய நாட்டு ஒருமை. என்று ஒரு புது நாட்டு உணர்ச்சியை. அதற்கு முன்னால் சங்க இலக்கியங்களில் இப்படி இந்திய நாடு முழுவதையும் காண்கின்ற ஒரு வழக்கம் இருந்ததில்லை. அவர்களுக்கு நாட்டின் எல்லையைச் சொல்வதிலேகூட பல இடங்களில் வேறுபட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அந்தப் பற்று இருந்தது. பாரியினுடைய மலைக்குப் பெயர் பறம்புமலை. அந்தப் பறம்பு மலை தந்த அன்பும், அது விளைந்த விளைச்சலையும் கண்டு அதனுடைய வறம்பில்லாத அன்பை நினைத்துக் கபிலர் இந்த மலையை விட்டு நீங்கும்போது அந்தக் கல்லைப் பார்த்து,
‘ஈண்டு நின்றோற்கும் தோன்றும்
சென்று நின்றோற்கும் தோன்றும் மன்ற
நீ பட்டாங்கு ஈயும் பெருவளம் படுதி நட்டனை மன்னோ!’
எனவே கல்லையும் புல்லையும் பார்த்து கூட இது எங்கள் பகுதியிலே இருந்த கல், எங்கள் பகுதியிலே வளர்ந்த புல் என்று நினைக்கின்ற பழக்கம் போல, பாரதியாருக்கு மனம் எவ்வளவு விரிந்து ‘மன்னும் இமயமலை எங்கள் மலையே’ என்பார்.

Add a Comment