POST: 2014-10-26T22:38:45+05:30

ராஜ் டி.வி. வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி
Mile Stones (Achiever’s Story)

(சொல்வேந்தர் அறிஞர் முனைவர் ஔவை நடராசன் அவர்களுடன் நேர்முகம்)
…

தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த அனுபவம் பற்றிப் பகிர்ந்துகொள்கிறீர்களா?

நான் அரசுச்செயலாளராகத் தொடர்ந்த நேரத்தில்தான், மாண்புமிகு புரட்சித்தலைவி அவர்கள் அப்போது முதலமைச்சராக வந்திருந்தார்கள். நான் தமிழ்வளர்ச்சித் துறையின் கோப்புகளையெல்லாம் எடுத்துக்கொண்டு காணும்போதெல்லாம், அவர்கள் என்னைக் கண்டிருக்கிறார்கள். அவர்கள் தான் என்னை அழைத்துச் சொன்னார்கள். தமிழ்ப்பல்கலைக்கழகத்தை எப்படியாவது செம்மையாக்கவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். நீங்கள் நாளையே துணைவேந்தராகச் செல்லலாம் என்றார்கள். பாருங்கள், அப்படி உடனே துணைவேந்தராகச் செல்லலாம் என்று சொல்லமுடியாது. அதற்கென்று ஒரு குழு அமைத்து, அந்தக் குழுவில் மூன்று பெயர்கள் தெரிவு செய்து, அந்தத் தெரிவு செய்த பெயர்கள் ஆளுநருக்குச் சென்று, ஆளுநர் அந்தப்பெயரைக் குறித்த பிறகு வரும். ஆனால் ஆட்சித் திண்மையினுடைய ஒரு அடையாளம் என்றால், அவர்கள் சொன்னார்கள், சொன்னது உடனே அப்படியே நடந்தது. அப்படித்தான் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு நான் சென்று சேர்ந்தேன்.

தமிழ்ப்பல்கலைக்கழகம் என்பது, ஒரு தனி மொழியினுடைய செம்மைக்காக, தமிழோடு தொடர்புடைய ஒரு இருபதுக்கும் மேற்பட்ட துறைகளைக் கண்ட ஒரு உயர்ந்து ஓங்கிய பல்கலைக்கழகம். அறிஞர் பெருமக்கள் பலர் துணைவேந்தர்களாக இருந்திருக்கிறார்கள்.

தமிழ் இலக்கிய உலகின் மணிவிளக்கு என்று நான் மகிழ்ந்து பாராட்டுகின்ற வி.ஐ. சுப்பிரமணியம் அவர்கள், பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பெரும்பேராசிரியர் அகஸ்தியலிங்கம் அவர்கள், சென்னைப் பல்கலைக்கழகப் பெரும் பேராசிரியர் சி. பாலசுப்பிரமணியம் அவர்கள் என்ற வரிசைக்குப் பிறகு நான் அந்தப் பொறுப்பில் இருந்தேன். மூன்றாண்டுகளில் பல்கலைக்கழகத்தை மகிழ்ச்சியாக வைத்திருந்தேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *