வளர்தமிழின் வரலாற்றுச் சுடர்கள்
(ஔவை நடராசன் ஆற்றிய உரை அலைகளின் ஒலிவடிவம்)
சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித் துறை நடத்திய தனிப்பெருஞ்சுடர்கள் என்னும் இரண்டுநாள் தேசியக் கருத்தரங்கில் நிறைவுப் பேருரை ள்: 26.03.2014
பதிவு
போ. ஜான்சன்
முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்
தொலைநிலைக்கல்வி நிறுவனம், தமிழ்ப்பிரிவு
சென்னைப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் அரங்க இராமலிங்கமும் பேராசிரியர் அரசும் இந்த ஆண்டோடு தன் பணியை நிறைவு காண்கிறார்கள். அவர்கள், மனம் நிறைவு தருகின்ற வகையில் பணியாற்றியதோடு அவர்கள் ஆற்றிய பணிகள் எல்லாம் எவ்வளவு மகிழ்வுடைய பணிகள் என்று நான் கண்டிருக்கிறேன். அதைப் பாராட்டுகின்ற வகையில், அவர்களுடைய நிறைவு நிகழ்ச்சியாக, இந்த இலக்கிய நிகழ்ச்சியை அவர்கள் நடத்துவது பாராட்டத்தக்கது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் புகழ்வாய்ந்த பெரும் துறைகள் என்று சொன்னால், வரலாற்றுத் துறையைத்தான் சொல்லவேண்டும். வரலாற்றுத்துறையைச் சார்ந்த பெரும் பேராசிரியர்கள் பி.டி. சீனிவாச ஐயங்கார், வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் ஆகியோர் எழுதிய கட்டுரைகள்தான் தமிழகத்தினுடைய பெருமையை உலகத்திற்கே எடுத்துக்காட்டியவை. அந்த நாளில் வரலாற்றுத்துறை பெற்ற புகழை, அறிவியல் துறைகள்கூடப் பெறவில்லை. தமிழ்மொழிக்கு என்று ஒரு தனித்துறையே இல்லை. தெலுங்கு, கன்னடம், மலையாளம் இப்படித் தமிழோடு சேர்த்து ‘கீழ்த்திசை மொழிகள்’ என்றவொரு பெயரிட்டு அந்த மொழிகளுக்கெல்லாம் ஒரு கொத்தாக ஆசிரியர்கள் என்றுதான் அமைத்திருந்தார்கள்.
அறிஞர்கள் கே.என்.சிவராசப்பிள்ளை, அனவரதவிநாயகம் பிள்ளை இருவரையும் கண்டதில்லை. எஞ்சிய பேராசிரியர்கள் அனைவரையும் நான் பார்த்திருக்கிறேன். பழகியிருக்கிறேன். சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே முதன்முதலில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதாமல் அறிவினுடைய பெருமிதத்தால் டி.லிட்., என்ற பெருமிதப் பட்டம் பெற்றவர் அறிஞர் சேதுப்பிள்ளைதான். அது ஒரு பெரிய சிறப்பு, துணைவேந்தர் திரு. ஏ.எல். முதலியார் அவர்கள் ‘எனக்குத் தமிழைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் தமிழை இந்தப் பல்கலைக்கழகத்திற்குத் தெரியவைத்த பெருமை சேதுப்பிள்ளையைத்தான் சாரும்’ என்று அப்போது சொல்லி அவருக்கு அந்தப் பட்டப் பேற்றினை வழங்கினார்கள். அது ஒரு பெருமிதமான பட்டம் வழங்கிய விழா. அந்த விழாவின்போது, சேதுப்பிள்ளை அவர்கள் பேசவில்லை.
பல்கலைக்கழகப் படிப்பாகத் தமிழ் முதுகலை என்ற படிப்பு அப்போது இல்லை. அவரை எந்த வகையிலும் தம்மைத் தமிழ் மாணவர் என்று அவர் தம்மை அழைத்துக்கொண்டதில்லை. தமிழ் முதுகலைக்கல்வி இல்லாத நிலையில் தான் அவ்வப்போது மேடையில் பேசிய தமிழ்ப்பொழிவுகளும், நெல்லையில் அவர் வழங்கிய தமிழ் கருத்துக்களையும் கேட்டதால், நாட்டு மக்கள் சேதுப்பிள்ளையினுடைய செந்தமிழ்ச் செல்வத்தினுடைய பெருமைகளைச் செவிமடுத்த திறத்தினால் சொல்லுக்கு அழகு சேதுப்பிள்ளை என்று சொல்லி, அவரைப் பெருமிதமாக அழைத்துவந்து தலைமை தாங்க வைத்தார்கள். அந்தப் பெருமை பிறகு வந்தவர்களுக்கு எப்படி வந்தது என்பதைவிட, இலங்கையிலிருந்து, அவருடைய புகழைக் கேட்ட மாத்திரத்திலேயே, அழைத்து வந்து அவரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குத் துறைத்தலைவராக, இருக்க வேண்டுமென்று விபுலானந்தரைக் கேட்டுக்கொண்டார். விபுலானந்தர் தமிழ் மாணவர் இல்லை. விபுலானந்தர் ஓர் அறிவியல் மாணவர். அறிவியல் மாணவராக இருந்த விபுலானந்தருடைய ஆற்றலையும் பெருமையையும் கேட்டதனால் அண்ணாமலை அரசர் அழைத்து வந்து விபுலானந்தரைத் தலைமை தாங்கச் சொன்னார்கள். தமிழ்த்துறைக்கே பெருமை என்னவென்றால், இலக்கியப் புலமை என்பதோடு, தமிழ் மக்களுடைய வாழ்வியலில் தம்மை ஆட்படுத்திக்கொண்டு, தமிழ் மக்களோடு நெருங்கிப்பழகுவதும், தமிழ் மக்களின் மனங்களை உணர்வதும், தமிழ் மக்களுடைய போக்குகளுக்கெல்லாம் தம்மை ஆட்படுத்திக் கொள்வதனால் புகழும், பிற்காலங்களில் இகழும் பெற்றவர்கள் தமிழ்த்துறை ஆசிரியர்கள்தான்.
சேதுப்பிள்ளை அவர்கள், மிகத்துணிவாக, அப்போதைய அரசைப்பற்றி அவர் கண்டனக் கடிதங்கள் எழுதியிருக்கிறார். சேதுப்பிள்ளையா அப்படி எழுதுகிறார்? என்று சொன்னால், அவரைத் தமிழ்ச்சொற்களையும் இந்திச் சொற்களையும் ஒன்றாக இணைத்து, சொற்களைக் கண்டறிய வேண்டும் என்ற ஒரு வாய்ப்பு தந்தபோது, இந்திச்சொற்களுக்கும் தமிழ்ச்சொற்களுக்கும் இணை வராது. தமிழச் சொற்களுடைய தனித்தன்மை என்பது வேறு. இந்தியில் கலப்பது என்பது இந்த நாட்டிற்கு இழிவு தருவது என்று சொன்னவர் சேதுப்பிள்ளை.
சேதுப்பிள்ளை, ரொம்ப (மிகவும்) இனிமையாகப் பேசுவார்கள். நான் பச்சையப்பன் கல்லூரியில் இருந்தபோது, நான் அவரை அழைத்து பேசவைத்தபோது,
இன்று பொங்கல் விழா
பழம் பானைகள் எல்லாம் விடைபெறும்
புதிய பானைகளில் பொங்கல் நடைபெறும்
என்று சொன்னார்.
அவர் பேசுகிற பொழுதே, இலங்கை என்னும் அந்த கலங்குஇல் மா நகரில், இலங்கை வேந்தன் கண்களில் கொண்ட கனலால், சீதை அழுத கண்ணீர் புனலால் என்று அவர் எடுத்துப்பேசுகின்ற தமிழினடைய இனிமை நம்மைப் பெரிதும் ஈர்க்கவல்லது. அது அடுக்குத் தமிழ் என்று நாம் சொல்வதற்கில்லை. அதுவொரு அழகுதமிழ். மோனை அழகு முழுதும் கலந்த வகையில் தமிழின் பெருமையைச் சொல்வதாகும்.
ஊர் என்றால் அந்த ஊர்களுக்கு ஏன் பேர் வந்தது என்பதைப் பற்றிய உணர்வை நமக்கு முதலில் ஊட்டியவர் அவரே. அதுவரையில் நாம் சிந்தாதிரிப்பேட்டை என்றோ சைதாப்பேட்டை என்றோ அழைப்பதற்கெல்லாம் என்ன காரணம் இருக்க முடியும் என்று எவரும் அந்நாளில் எண்ணிப்பார்த்ததில்லை. எனவே, ஊரினுடைய பெயர்களுக்கெல்லாம், காரணங்கள் உண்டு என்று கண்டறிந்து, ‘நண்பர் இரவீந்திரன் அவர்கள் சொன்னதுபோல்’ ஆய்வு என்பது அவரவர் விரும்பிய தலைப்பில் அவர்களே விருப்பமாகச் செய்வது. இன்னொருவர், ஒருவர் கருத்தைத் திணிப்பதற்காக ஆய்வு செய்வது என்கிற போக்கு, பின்னாளில் கல்விக்காக வந்தது. எனவே, அவர்களாகவே விரும்பிக்கொண்டு ‘ஊரும் பேரும்’ என்று சொல்லி அதையும் ஆங்கிலத்தில் ‘The Place Names’ என்றுதான் எழுத ஆரம்பித்தார்.
சேதுப்பிள்ளை அவர்களுடைய சிறப்பு, அவர் அணிந்திருந்தது எப்போதும் ஒரு டையும் சட்டையும் தான். அவருடைய நாற்காலியின் பின்னாலே அந்தக் கோட்டு இருக்கும். துணைவேந்தரிடத்தில் நெருங்கிப்பேசிய தமிழ்ப்பேராசிரியர் என்று சொன்னால் சேதுப்பிள்ளை ஒருவர்தான். மு.வ. கூட “நான் அவரைப் பார்த்துப் பேசியதே ஒரு முறை இருமுறைதான்” என்று சொல்லுவார் துணைவேந்தர் ஏ.எல். முதலியாரை.
எப்போதாவது கூப்பிட்டு விடுவாரோ என்பதற்காக எப்போதும் கோட்டை அணிந்தபடியே துரையரங்கனார், பலநேரம் வந்து உட்கார்ந்திருப்பார். எனவே, அப்போது துணைவேந்தர்களுக்கு ஏ.எல். முதலியார் அவர்களை மனதில் நினைத்தபடிதான் தமிழ்த்துறை ஓரத்தில் ஒதுங்கியிருந்தது. சேதுப்பிள்ளை சொல்லுவார், “வடபால் தடமுனை போந்தது எங்களிடம்” என்று நகைச்சுவையாக.
மு.வ. கூட, ஒருமுறை ஆய்வு மாணவராக அங்கே வந்திருந்து, பிறகு அவரை அங்கேயே பணியாற்றச் சொன்னபோது, “உப்புக்காற்று என் உடலுக்கு உதவாது” என்று சொல்லித் திரும்பி வந்துவிட்டவர் பச்சையப்பன் கல்லூரிக்கு.
பேராசிரியர் சேதுப்பிள்ளை அவர்களைத் தொடங்கிப் பார்த்தால் திருவாய்மொழி அவருக்கு நன்றாக வரும் என்று தெரிந்ததனால் பு.ரா. புருடோத்தம்ம நாயுடு அவர்களை அந்தத் தலைப்பிலே ஆய்வு செய்யச்சொன்னார். துரையரங்கனார் பணியாற்றியபோது அவரைத் திருமுறைகளைப் பற்றி ஆராயுங்கள் என்று தலைப்பு தந்ததும் சேதுப்பிள்ளைதான்.
என்னோடு படித்த மாணவர் என்று சொன்னால் நண்பர் அமீது என்பவர் படித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் படித்து முடித்து வந்திருந்தார். அவருக்குக் கம்பராமாயணத் தலைப்பைத் தந்தார். குமரவேலனுக்குப் பரதன் என்ற தலைப்பை ‘நீ தொடங்கு!’ என்று சொல்லிக் கம்பராமாயணத் தலைப்புகளையெல்லாம் விரும்பித்தந்து அவரவர்கள் விரும்பும்படி ஆய்வுசெய்வதற்கு ஒரு பணி செய்தார்கள்.
இரவீந்திரன் அவர்கள் சொன்ன கருத்து, பயிற்றுவிப்பது, பணிக்கு என்று பணியைச் செய்வது, பணத்துக்கு என்று பணியாற்றுவது, படைப்புத் தொழிலோடு பணியாற்றுவது என்று ஒரு மூன்று வகையாகப் பிரித்துச் சொல்லலாம். பேராசிரியர்கள் பலபேர் படைப்புத் தொழிலோடு பணியாற்றுவது என்பது அரிது.
படைப்புப் பண்பினாலேயே உயர்ந்து நின்று பேராசிரியராகத் திகழ்ந்த பெருமை மு.வ. அவர்களைத்தான் சாரும். அவர் பல்கலைக்கழகத்திற்கு வருவதற்கு முன்னாலேயே அவருடைய படைப்புக்கள் நாட்டு மக்களின் நெஞ்சங்களையெல்லாம் ஒரு பெரிய மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியவை. ‘மணப்பரிசு’ என்று மற்றவர்களுக்கு வழங்குவது என்றால் மு.வ.வினுடைய நூல்களைத்தான் தேடிவழங்குவார்கள். அவருடைய பெருமிதம் படைப்புத் தொழிலோடு வந்தது.
ஆங்கில நாட்டிலும் சொல்கிறார்கள். பணிக்காகவே பணியைச் செய்வது என்பதனால், தான் எடுத்துக்கொண்ட பணியை ஆழமாகச் செய்து கொண்டிருப்பது என்றவகையில் சிலரும், இது ஒரு வாய்ப்பாகக் கிடைத்தது என்று இருந்தவர்களுக்கு நடுவில், மு.வ. என்னைப் பேராசிரியராக ஏன் அமர்த்துகிறீர்கள் என்று எண்ணிக்கொண்டு ஒரு வருத்தத்தோடு வந்தவர்.
இன்னும் சொன்னால் நண்பர் இரவீந்திரன் சொன்ன கருத்துக்கள் பல ஆராயத்தக்கன. மாணவர்களை அமரவைத்துக் கற்றுக் கொடுப்பது என்பதைக் கல்லூரிகளிலே ஆசிரியர்கள் கற்றுத்தருவது போல, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கற்றுத்தர வேண்டா! என்ற கருத்து இருந்தது. அதனால் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வகுப்பு எடுக்கிற வாய்ப்பே இல்லை. ஆனால் பல ஆண்டுகள் கழிந்த பிறகுதான் முதுகலை படிக்கிற மாணவர்கள் இரண்டு கல்லூரிகளிலும் முதுகலை படிக்கிற வாய்ப்பு இருப்பதுபோல, ஏன் திங்களுக்கு ஒரு முறை அல்லது வாரத்திற்கு ஒருமுறை ஒரு வகுப்பினைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் நடத்தலாம் என்ற கருத்தை, சேதுப்பிள்ளை அவர்கள் வகுப்புக்கு வந்து எடுத்து நான் பார்த்ததில்லை. ஆனால் துரையரங்கனார், சேனாவரையம் வகுப்பு எடுப்பதற்காகப் பல்கலைக்கழக வகுப்புக்கு வந்து எடுத்தார். வந்த மாணவர்கள் முதுகலை மாணவர்கள் என்று ஒரு பத்துப் பேர்தான் வருவார்கள்.
ஆனால் ஆய்வுத்துறையிலேயே நுழைந்துநின்று தன்னுடைய கருத்துக்களை வழங்க வேண்டும் என்பதற்காகப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், இன்னும் சொன்னால் கல்லூரிப் பேராசிரியர்களை விட இரண்டு மடங்கு ஊதியம் அதிகம் பெற்றவர்கள். எனவே, பல்கலைக்கழகத்தினுடைய அமைப்பு முறைக்கும் துறைகளின் அமைப்பு முறைக்கும் அப்போது தொடக்க நிலையாக இருந்ததால், எல்லாத் துறையுமே ஆங்கில முதுகலையைப் பார்த்துப் பாடங்களை அப்படியே அமைத்துக்கொண்டோம். ஆங்கில முதுகலையில் மொழியியல் இருக்கிறது என்றால் உடனே அதனை Philology என்று ஒரு பாடம் வைத்தார்கள். ஆங்கில இலக்கியத்தில் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் முதுகலையில் நான்கு பாடங்கள் உண்டு. நான்கு நாடகங்கள் உண்டு. தமிழில் அப்படி நான்கு நாடகங்கள் இல்லையே என்றபோது, நற்றிணை முழுவதும் படிக்கலாம். சிலப்பதிகாரம் முழுவதும் படிக்கலாம் என்று ஓர் இலக்கியத்தை வரையறுத்தார்கள்.
திறனாய்ந்து தெளிகின்ற முறை என்பதைத் தமிழ் உலகத்திற்கு ஆங்கில இலக்கியத்தில் அதைப் பாடமாக வைத்தபிறகுதான், திறனாயும் போக்கு தமிழுக்கு வந்தது. அதற்கு முன்னால் உரையாசிரியர்கள் தங்கள் கருத்துக்களைச் சொல்லும்போது ஏதுக்களாலும், எடுத்துக்காட்டுக்களாலும் வாதிட்டு மறுப்பதனாலும் தாங்கள் திறனாய்வுடையவர்கள் என்பதைக் காட்டினார்கள். எனவே ஆங்கிலப் பாங்கிலேதான் தமிழ் வளர்ப்பது என்கிற போக்கு வந்ததனால், பேராசிரியர் இரவீந்திரன் அவர்கள் சொன்னதுபோல பயிற்றுவிக்கின்ற இடமாகத்தான் பல்கலைக்கழகம் மாறியதே தவிர, ஆய்வுக்கு என்று ஒரு ஆழ்ந்த களமாக இல்லை என்ற கருத்தை நாம் முழுவதுமாக மறுப்பதற்கு இல்லை. கல்லூரிகளிலும் மாணவர்கள் முதுகலை படிக்கிறார்கள். பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் முதுகலை படிக்கிறார்கள் என்று இரண்டுபேரும் ஒத்தநிலையிலே இருந்து பாடம் நடத்துவது என்று சொன்னால், அப்படிப்பாடம் நடத்துகிற பாங்கினை, மாற்றிச் சிந்திக்கின்ற பழக்கத்தை நாம் எப்படி அமைத்துக்கொள்வது என்பதை எல்லாம் எண்ணிப்பார்க்கலாம்.
இந்தப்பன்னிரு ஆசிரியப் பெருமக்களை நினைக்கிறபொழுது, அவர்களுடைய ஆற்றல், அவர்களுடைய திறமை, அவர்களை நாடுபோற்றிய திறம் இதையெல்லாம் நாம் எண்ணிப்பார்த்தால் வியப்படையலாம். இரவீந்திரன் அவர்களே, எதிர்க்கட்சியில் தலைவராக இருந்தவர் துணைவேந்தராக இருந்தவர். டாக்டர் இலட்சுமண சாமி முதலியார், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தபொழுது நாடாண்ட காங்கிரஸ் இயக்கத்தினுடைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். அவர் எழுந்து பேசிய கருத்துக்களைக் கேட்டபொழுதெல்லாம் முதல்வராக இருந்த பக்தவத்சலம் அவர்கள் சொல்வார்கள். “அவர் பேசுவதைக் கேட்பதற்காகவே அவர் எதிர்க்கட்சியிலேயே இருக்கவேண்டும்” என்று சொன்னார். ஆனால் ஆளுகிற கட்சிக்கு மாற்றாகக் கருத்தை எடுத்துக் கடுமையாகச் சொன்னார் என்பதற்காக ஒரு பேராசிரியரை நாம் வேலையிலிருந்து விலக்கியதையும் நீங்கள் கேட்டறிந்திருப்பீர்கள்.
இந்தச் சிக்கல் எல்லாம் தமிழ்த்துறைக்குத்தான் வரும். காரணம் தமிழாசிரியர்கள்தான் எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்றுக் கொள்ளமுடியும். அவர்களுக்கு அரசியலும் ஒன்றுதான். இலக்கியமும் ஒன்றுதான். நாடகமும் ஒன்றுதான். வாழ்வியலும் ஒன்றுதான். எங்கே எதுநடந்தாலும், உடனே மனம் துடிப்பது தமிழ்ப்பேராசிரியருக்குத்தானே தவிர, தாவரவியல் பேராசிரியருக்கு அதைப்பற்றி ஒரு கவலையும் வராது. இதை உணர்ந்து கொள்ளுகின்ற பழக்கம் என்பது மெல்லமெல்ல வரவேண்டும். எனக்கு ஒருபெரிய மகிழ்ச்சி என்னவென்றால் ஒரேநாளில் பழமையான சிந்தனைகளுக்கும் முழுமையான சிந்தனைகளுக்கும் இடந்தருகின்ற அரங்க. இராமலிங்கமும் புதுமையான சிந்தனைகளுக்கும் புரட்சிப் போக்குகளுக்கும் இடந்தருகின்ற அரசு அவர்களும் ஒத்தவர்கள். இரண்டுபேரும் ஒன்றாகப் பிரிகிறார்கள் என்றால் இனிமேல் பல்கலைக்கழகத்தில் பழமைக்கும் இடமிருக்கும், புதுமைக்கும் இடமிருக்கும் என்று இரண்டையும் வைத்திருக்கிறார்கள் என்றுதான் நான் எண்ணி மகிழ்வதுண்டு.
சிந்தனைகள் வளர்ப்பது என்ற வகையில் டாக்டர் இராசமாணிக்கனார் அவர்கள், மதுரை தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிவிட்டு, மனம் உடைந்துபோய் திரும்பியபோது, அவருடைய தகுதியைக் கண்டு அரவணைத்துக்கொண்டது சென்னைப் பல்கலைக்கழகம். அறிஞர் மா. இராசமாணிக்கனார் அப்போது வரும்போதே ஐம்பது தாண்டிய நிலையில்தான் என்றாலுங்கூட, அவரைப் போற்றித் தகுதி வாய்ந்தவர்களைத் தேடி அழைத்து வைத்துக்கொள்வது என்ற வகையில் சென்னைப் பல்லைக்கழகம் மிகச்சிறந்த பணிகளை ஆற்றியது.
பல்கலைக்கழத்தில் எனக்குத் தெரிந்து அறக்கட்டளைப் பொழிவுகளுக்கு ஆக்கம் தந்து திங்களுக்கோர் அறக்கட்டளைச் சொற்பொழிவை நடத்தியதோடு, நாட்டில் பேசப்படுகின்ற கருத்துக்கள் எல்லாவற்றையும் அந்தப் பொழிவுகளில் கேட்கலாம் என்று, அகலக்கதவுகளைத் திறந்த பெருமை டாக்டர் சஞ்சீவி அவர்களைத்தான் சாரும். இது முதலில் வியப்பாக இருக்கும். இல்லையென்றால் சிங்கார வேலரைப்பற்றிய சிந்தனை நமக்கு வந்திருக்காது; அயோத்திதாசர் என்ற அறிஞனைப் பற்றிய கருத்து தெரிந்திருக்காது இன்னும் மாறி மாங்குடி மருதனாரும் மார்க்சியச் சிந்தனையும் என்று ஒரு தலைப்பிடலாமா? என்று என்னிடத்தில் கேட்டார்கள். எனவே அறிஞர் சஞ்சீவி அவர்களுக்கு இலக்கியப் புலமையோடு நாட்டு மக்களோடு தமிழியலில் நாம் இணைந்திருக்க வேண்டும் என்பதற்காக அவர்பெற்ற பங்கு இருக்கிறதே அதுவொரு மிகப்பெரிய பங்காகும். ஆனாலும் பாருங்கள்! ஒரு தமிழ்ப்பேராசிரியருக்கு ஒரு இடையூறு வருமானால் எஞ்சிய ஆசிரியர்கள் ஒன்றுபட்டுத் தமிழ்ப்பேராசிரியருக்கா இந்தத்தடை? என்று யாருமே கேட்கவில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் சிறப்பு.
இளைஞராக இருந்து, ஆசிரியர் சங்கத்துக்காகவே அல்லும் பகலும் உழைத்து, தான் கற்ற கல்வியும் பெற்ற திறமும் ஒரு புறம் இருந்தாலும் மக்களிடையே பெறவேண்டிய மதிப்பும் சிறப்பும் எந்நாளும் மாசுபடலாகாது என்ற வகையில் நின்றவர்தான் இளைஞர் செல்வராசன். இப்படியெல்லாம் வேறுதுறைகளையும் பார்த்தால், தமிழ்த்துறைக்குத்தான் ஒரு பெரிய பங்கு இருந்திருக்கிறது. டாக்டர் சி.பா. அவர்கள் தாம் ஆற்றிய தலைமைப் பணியினால் சிறந்ததோடு, பணிவினாலேயே பெருமை பெற்றவர். என்றும் பணியுமாம் பெருமை என்பதற்குச் சான்று வேண்டுமென்றால் சி.பா.தான். அவர் தன்னுடைய பணிவினாலேயே தன்னுடைய அடக்கத்தினாலேயே தன்னுடைய புலமை வளத்தினாலேயே மிகப்பெருமிதமான ஒரு வாழ்க்கையை வாழ்வதைக்காட்டிலும் அடக்கமாகப் பலருக்கு அடங்கி வாழ்வது சிறப்பு என்ற கருத்துடையவராக இருந்தார். அடங்கி வாழலாம் என்கிற கருத்துடைய பேராசிரியர் ஒரு வழிகாட்டினார். பிறரை அடக்கி வாழலாம் என்பதற்கு வழிகாட்டியாக, சஞ்சீவி அவர்களையும் கண்டோம். எனவே, தமிழ்ப்பேராசிரியர்களுடைய வரிசையைக் கண்டால், இன்றும்கூட சங்க கால வேந்தர்களின் காலவரலாற்று நிரல்களைக் கண்டறிவதற்கு ஒரு வேதமாக விளங்குகின்ற நூல் என்பது கே.என். சிவராஜப்பிள்ளை எழுதிய கட்டுரைகள்தான். ஏனென்றால் அதற்கு முன்னால் வேந்தர்களின் காலவரிசையைப் பற்றிய கருத்து நமக்கு இல்லை.
பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, நேர்முகமாகப் பல்கலைக்கழத்தில் பணியாற்றவில்லை என்றாலுங்கூட அவர் அகராதித் துறையில் பணியாற்ற வந்தபோது மட்டுமின்றித் தன்னுடைய கருத்தைத் தான்விரும்புகின்ற வகையில் தான் உணர்ந்த வகையில் எடுத்துச்சொல்லுகிற சிறப்பு அவருக்கு இருந்தது. பலநேரங்களில் அதுவொரு எதிர்ப்பான கருத்தாக இருந்தபோதுங்கூட அதைநாம் ஏற்றுக்கொள்ளுகிற அளவுக்கு அவர் எடுத்துச்சொல்லுகிற திறம் இருந்ததே, வாதிடுகின்ற வல்லமையில் வையாபுரிப்பிள்ளை அந்தக் கருத்துக்களை வலியுறுத்திக் காட்டியிருக்கிறார்.
ஒரு நிகழ்ச்சியை மட்டும் நான் நினைவு கூர்கிறேன். பேராசிரியர் மு.வ. அவர்களும், ஒரு கூட்டத்தில் பேசுகிறபொழுது ரொம்ம(மிக) அழககாகச் சொன்னார்கள். “நடுநிலைமை என்பது இலக்கிய ஆராய்ச்சியில் இருப்பது ரொம்பவும் (மிகவும்) அரிது. இலக்கிய ஆய்வாளர்கள் தங்கள் கருத்துக்களை எண்ணுகிறபோது ஒருபக்கம் சார்ந்துதான் எழுதுவார்கள். அப்படி ஒருபக்கம் சார்வது என்பதுதான் இயல்பு. அப்படி ஒருபக்கமும் சாராமல் நடுநிலைமை என்று இதுவரை வந்த கருத்துக்களுக்கெல்லாம் முரணான கருத்துக்களைச் சொல்லுகின்ற ஆய்வுத்திறம் என்பது ஒருவகையில் புதுமையான ஆய்வுதான். இதை நண்பர் வையாபுரிப்பிள்ளை தொடங்கினார்” என்று சொன்னார். அந்தநேரம் பார்த்து அந்தக்கூட்டத்தில் அப்போது சேதுப்பிள்ளை தலைமை தாங்கினார். அவர் சொன்ன விடை எனக்கு இன்றைக்கும் அப்படியே மனதை உருத்துகிறது. “வரதராசன், நடுநிலைமையைப் பற்றிப் பேசியது எனக்கும் ரொம்ப (மிகவும்) பிடிக்கும். நடுநிலைமை என்பது இலக்கியத்தில் வருவதற்கு முன்னால், எந்த இலக்கியத்தை எவர் தொடுகிறார் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். தொடுகிறவன் நோயாளியாக இருந்தால் எடுத்த இலக்கியமும் பழுதுடையதாக இருந்தால் அங்கே நடுநிலைமைக்கு இடமே இருக்காது” என்றார். இது அவர் எந்த அடிப்படையில் சொன்னார் என்பதற்கு அழகான ஒரு உவமை சொன்னார். என்ன உவமை சொன்னார் என்றால் நோயாளிக்கு மருந்து தருவதற்காக மருத்துவர் வருகிறார் என்றால், இனிமையாகப் பேசி, பரிவாக உரையாடி, கனிவோடு பேசி, தேன்கலந்த சொற்களால்தான் இந்த மருந்தையும் கலந்து தரவேண்டும். அப்படிக் கலந்து தருவதுதான் மருந்து என்றே பெயர். நான் மருந்து தரவந்திருக்கிறேன் என்பதற்காகக் குழந்தையினுடைய காலையும் கையையும் கட்டிவிட்டு, வாயை இரண்டுபேர் பிடித்துக்கொண்டு திற என்று சொல்லி மருந்து ஊற்றினால் அது எப்படி இலக்கியத் திறனாய்வு ஆகும்” என்று கேட்டார். இதைக் கேட்டபிறகு சொன்னார், “ஆய்வு செய்யத் தொடங்குவதற்கு முன்னால், அந்தப் பொருளில் தோய்வு உங்களுக்கு இருக்கிறதா? அந்தப் பொருளின்மீது உங்களுக்குக் காதல் எவ்வளவு தூரம் இருக்கிறது? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். எனக்குக் காதல் இருந்ததால்தான் கம்பராமாயணத்தில் பற்று வந்தது. கம்பராமாயணக் காதல் தான் என் தமிழ்க்காதலாக விளங்கியது” என்றார். இதையெல்லாம் இப்போது எண்ணிப்பார்த்தால் இலக்கிய ஆய்வுத் திறனைப் பற்றி எப்படிப்பட்ட முடிவுகளையெல்லாம் சொல்லியிருக்கிறார்கள் என்று நினைக்கத்தோன்றுகிறது.
துரையரங்கனார் அப்படி நெருங்கிப் பழகமாட்டார். அவர் நெருங்கிப் பழகவில்லையென்றாலுங்கூட எந்த நேரத்திலும் ஐயம் கேட்கவந்தால், “நீ இதுவரை என்ன படித்து இருக்கிறாய்?” என்று கேட்பார். ஐயம் கேட்கிறவருக்கே கொஞ்சம் மனம் அலுத்துப்போகும். ஆனாலும், தான் அந்த ஐயத்தைத் தீர்க்கவேண்டும் என்பதற்காக, ஒன்று சொல்லவிரும்புகிறேன். பல்கலைக்கழகப் பேராசியராக இருந்தபோதுங்கூட அவர் சிந்தாதிரிப்பேட்டையில், வேதாந்த சங்கத்தில் அந்திவேளையில் வகுப்பெடுக்க வருவார். அறிஞர் சேதுப்பிள்ளை அவர்களின் இல்லத்திலும் கூட மாலைவேளையிலும் மாணவர்கள் அறுவர், எழுவர் என்று இருப்பார்கள். அவர்களுக்குக் கற்றுத்தருவதும் மகிழ்ச்சியாக இருக்கும்.
பேராசிரியர் துரையரங்கனார் எல்லாத்துறையிலும் ஆர்வங்காட்டினாலும் கூட, இலக்கணத் துறையிலே தம்முடைய பெரும் புலமையை எடுத்துக்காட்டினார். நமக்குத் தெரிந்த வரையில் ‘காமம்’ என்ற சொல், விலக்த்தக்க ஒரு சொல்லாக நினைப்பதோடு அதுவொரு குறைவுடைய சொல் என்றுதான் நினைத்தோம். அதுவொரு தமிழ்ச்சொல் என்று என்னால் நினைக்க முடியாமல்தான் நான் அப்போது இருந்தேன். ஆனால் காமம் என்பது, கமம் நிறைந்தியலும் என்கிற தொல்காப்பிய நூற்பாவை எடுத்துக்காட்டி மனநிறைவினால் பிறப்பதுதான் காமம். மனம் பொங்கித் ததும்புவதும் காமம் என்று சொல்லி, இந்தச் சொல்லை இழிவு என்று சொன்னால் காமகோடி பீடம் என்பதற்கு என்ன பொருள் என்று கேட்டார். பாருங்கள்! இப்படியெல்லாம் அந்தப் பேராசிரியர்கள் கமம் நிறைந்தியலும் அப்படித் தமிழ்ச்சொற்களை, அரசன் தமிழ்ச்சொல்லா? என்று எழுதியிருக்கிறார். துரையரங்கனார் மிகத்துணிவாகத் தன்னுடைய கருத்தை எடுத்துப்பேசுவார். துணிவாக எடுத்துப்பேசுவது மட்டுமில்லாமல் இந்த இலக்கணங்களின் நுணுக்கங்களை எடுத்துக் காட்டுவதில் மிகவல்ல திறமையோடு அவர் திளைக்கிறார்.
ஒன்று நினைவுக்கு வருகிறது. சேதுப்பிள்ளை அவர்களுடைய அறைக்கு அடுத்த அறையிலேதான் இந்திமொழியினுடைய பேராசிரியர் அறை இருந்தது. இந்தி மொழித்துறைப் பேராசிரியர் உங்களுக்கெல்லாம் தெரிந்தவர். நமக்கெல்லாம் மிக அன்புடையவராகப் பழகியவர். டாக்டர் சண்டராஜு நாயுடு அவர்கள். நாங்கள் அந்தப் பல்கலைக்கழகம் பக்கம் செல்லும்போதேல்லாம் அவர் (நாயுடு அவர்கள்), நீர் அருந்துவதற்காக, (ஒரு பானையில் தண்ணீர் ஊற்றி வைத்து வெட்டிவேர் எல்லாம் வெட்டி மணக்கச் செய்திருக்கிற நீர் சேதுப்பிள்ளை அறையில் இருக்கும்) சண்டராஜு நாயுடு அங்கே வந்து நிற்பார். அவர் அப்பொழுது தண்ணீர் குடித்தபோது, மாணவர்களைப் பார்த்துச் சொன்னார், “பாருங்கள்! இந்தி வளர்வதானால் தமிழ் தண்ணீர் ஊற்றினால்தான் வளரும்” என்று தெரிகிறதல்லவா?
இந்த வகையில் பார்த்தால் சென்னைப் பல்கலைக்கழகத்தினுடைய பேராசிரியர்கள் பெரும்புகழ் வாய்ந்தவர்கள். தமிழ் இலக்கியத்தோடு மட்டுமில்லாமல் தமிழ்நாட்டு அரசியலிலும் தமிழ்நாட்டு வாழ்வியலிலும் தமிழ்நாட்டுப் பண்களிலும் அவர்கள் கண்டெடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
மு. வரதராசனார் எழுதிய மொழிப்பற்று, நாட்டுப்பற்று என்ற நூல்கள் எல்லாம் இன்று நீங்கள் படித்தாலும் கூட, நாட்டின் மீது கொண்டிருந்த நாட்டத்தை ஒரு தமிழாசிரியர் என்றைக்கும் மறக்கலாகாது என்பதற்கு வழிகாட்டிய பெருமை, எங்கள் தமிழ்த்துறைப் பேராசிரியர்களைத்தான் சாரும். நீங்கள் என்றும் எண்ணிப்பார்க்கலாம். ஒரு துறையினுடைய வளர்ச்சி என்பது அந்தத் துறைக்குத் தலைமை தாங்கிய பெருமக்களைக் கொண்டுதான் மதிப்பிடத்தக்கதாகும். அவர்கள் சுட்டிக்காட்டிய வழிமுறைகள் என்பது, ஆளாளுக்கு, போக்குக்கு ஏற்ப மாறுபடும். அப்படி மாறுபடுகின்ற நேரத்திலும் கூட நான் அந்தப் பேராசிரியர் அப்படிப்பட்ட ஒரு பெரும்பொறுப்பில் இருந்தபோது அவருடைய ஆற்றலையும் திறமையையும் அறிந்து கொள்ளுகின்ற ஒரு பழக்கத்தை மாணவர்கள் பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற நல்லெண்ணத்திலேதான், பேராசிரியர்களையெல்லாம் நினைவு கூர்கிற வகையில், அரங்க. இராமலிங்கம் நடத்திய இந்த நிகழ்ச்சி, இரவீந்திரன் சொன்னதுபோல அல்லது நண்பர் மாதவன் சொன்னதுபோல வேறு எந்த இடத்திலும் இப்படித் தங்கள் துறையினரை முன்னோர்களை நினைத்துப் பாராட்டிய பழக்கம் இல்லை.
தந்தை தவவலியாலும்
முந்தை சார்ந்த புலவர் தவவலியாலும்
இந்தநாள் வரை காலன்
என்னை ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சினன்
என்பது பாரதியாருடைய பாடல். அது தமிழ்த்துறைக்கு எவ்வளவு பொருந்தும் பாருங்கள்.
முந்தையோருடைய தவவலியும்
மொழிசார்ந்த புலவர்களுடைய தமிழ்வலியும் சேர்ந்தால்
இந்தநாள் வரை காலன்
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சினன்
என்று நான் வாழ்ந்தேன் என்று தமிழ்த்துறை எவ்வளவு பெருமிதமாக எண்ணிப்பேசியது என்பதை நாம் எண்ணிப்பார்த்து மகிழலாம்.
நண்பர்களே! மொழி என்பது இலக்கியங்களோடு இணைந்தது என்றாலுங்கூட நம்முடைய ஊனிலும் உணர்விலும் கலந்த ஓர் உணர்ச்சியாக இருக்கிறது. எனவேதான் இப்போது கூட சொல்கிறார்கள். மாணவர்கள் ஆர்வத்தோடு தமிழ்கற்க வரவில்லையே! தமிழ்கற்க வருகிற மாணவர்கள் கூட ஏன் கற்க வருகிறார்கள் என்றால் வேறுதுறை கற்பதற்கு வாய்ப்பில்லை என்பதால் தானே வருகிறார்கள் என்கிற ஒரு பேச்சுக்கு நான் இடந்தருவதை எப்படி மாற்றிக்கொள்வது என்பது எனக்கு இன்னும் விளக்கமாக இல்லை.
அவங்க! நன்றாகச் சொன்னார்கள், பல்கலைக்கழகம், ஆய்வு நிறுவனம், அறிவு நிறுவனம், கலைநிறுவனம் எதுவானாலும் College, University, Institute, Center என்று பெயர் வைக்கிறார்கள். ஐளெவவைரவந-க்கும் ஊநவெநச-க்கும் என்ன வேறுபாடு. கல்லூரிக்கும் பல்கலைக்கழகத்திற்கும் என்ன மாறுபாடு. தனியாக ஒரு பல்கலைக்கழகம் என்று அமையும்போது அந்தத் தனித்தன்மைக்கு என்ன பெருமைப்பாடு. என்றெல்லாம் கல்வித்துறையில் ஆய்வுத்துறையில் பல புதுமைகளை எல்லாம் மாணவர்களாகிய நீங்கள்தான் செய்துகாட்டவேண்டும்.
இந்தப் பன்னிருவருடைய போக்கையும் நீங்கள் எடுத்துப்பார்த்தால் தெரியும். பன்னிரு வகையாக அவர்கள் செய்திருக்கின்ற ஆய்வுப் புலங்களால் நீங்கள் பல்வேறு துறைகளிலும் பங்கு கொள்ளுகிற திறம் வாய்ந்தவர்களாகத்தான் தமிழ்ப்புலமையையும் வளர்த்துக் கொள்ளவேண்டும். அது எப்படிப் பன்மொழிப்புலமை பெறுவதா என்றால், வேங்கடராஜுலு ரெட்டியாருக்குப் பன்மொழிப்புலமை தானாக வந்தது. உங்களுக்கும் பன்மொழிப்புலமை என்பதைப் பல்திறப் புலமை என்று சொல்லுகிறேன்.
இன்று நீங்கள் இலக்கியத்தைக் காணும்பொழுது மனவியல் படிக்கின்ற மாணவர்கள் இருக்கிறார்கள். அறிவியல் படிக்கின்ற மாணவர்கள் இருக்கிறார்கள். பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பல்கிப் பெருகிவருகின்றன. இப்படிப் பெருகிவருகின்ற துறைகளில் பங்கு பெறுகின்ற மக்கள் அவர்கள் எப்படிச் சிலப்பதிகாரத்தை அணுகலாம், சிலப்பதிகாரத்தை அவர்கள் வழியாக நாம் எப்படி அணுகலாம் என்று இரண்டு மூன்று துறைகள் இணைந்து பார்க்கின்ற ஒத்துப்பார்க்கின்ற ஒரு ஒப்பியல் நோக்கத்தோடு புதுமைகள் கண்டறிகிற திறத்தை நாம் வளர்த்துக்கொள்ளவேண்டும்.
ஆங்கில இலக்கியங்களுடைய வளர்ச்சியைக் காணுகிறபோது, நமக்கு ஒரு பெரிய அதிர்ச்சி ஏற்படுகிறது. காரணம் ஆங்கில இலக்கியத்தில் இன்றும் கூட ஷேக்ஸ்பியருக்கு என்றே ஒரு துறை என்றும், வேர்ட்ஸ்வொர்த்துக்கென்றே ஒரு துறையென்றும், மில்டனுக்கென்றே ஒரு துறையென்றும் வைத்துக்கொண்டு பல்லாயிரக்கணக்கான நூல்கள் வந்தபிறகும் கூட திறனாய்வு, திறனாய்வுக்குத் திறனாய்வு, திறனாய்வில் வராத தெளிவுபாடு என்றெல்லாம் எழுதுகிறார்கள்.
எனவே, மாணவ நண்பர்களே! நீங்கள் தமிழ்கற்கும்போதே வேறுதுறை புலமையையும் ஒன்றாக வளர்த்துக்கொண்டால்தான் நாம் தமிழை அதோடு, அந்தக்கருத்தோடு இழைத்துக்காட்டி, ஒரு புதுமையை, பெருமையை, நலத்தை, வளத்தை மொழிக்குக் காட்டமுடியும். அந்த வகையிலேதான் பேராசிரியர்களுள் மு.வ. அவர்கள் நாட்டு மக்களுடைய மனத்தைக் கவருகின்ற அளவுக்கு, தான் எழுதிய நெடுங்கதைகளால், சங்க இலக்கியத்தின் சாறுபிழிந்தது போலத்தானே காட்டினார். சங்க இலக்கிய ஆர்வம் பொதுவாக எப்படி வரும் என்று சொன்னால், நெஞ்சில் ஒரு முள் படித்தால், தானாக வரும்.
நெடுங்கதைகளில் கையெழுத்திடுகிற போது, நாங்களெல்லாம் அப்போது மாணவர்களாக இருந்தபோதுகூட யாருக்காவது கையெழுத்திடுவது என்று சொன்னால் ‘நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்’ என்று சொல்லக் கற்றுக்கொண்டது மு.வ. அவர்கள் எழுதிய நெடுங்கதைகளால்தான். எனவே கதை உலகத்தையும் கூட தமிழ் உலகம் கவர முடியும் என்பதற்கு மு.வ. வழிகாட்டியிருக்கிறா; வரலாற்றுத் துறையிலே புகுந்து புதுமைகளைக் கண்டறிய முடியும் என்பதற்கு டாக்டர் இராசமாணிக்கனார் வழிவகுத்துக் காட்டியிருக்கிறார்; திருமுறைகளையெல்லாம் எப்படிப் புதிய நோக்கத்தில் அணுகமுடியும் என்பதற்குத் துரையரங்கனார் வழிகாட்டியிருக்கிறார்; வடமொழியினுடைய ஈட்டுச்சொற்களுக்கு எல்லாம் தென்தமிழ்ச்சொற்களைத் தேன்போல் எப்படி மொழிபெயர்த்துக் காட்டுவது என்பதை புருஷோத்தம நாயுடு எடுத்துக்காட்டியிருக்கிறார்; வரலாற்றுத் துறையில் மாந்தவியல் வரைவு கருத்துக்களை, சிவராஜப்பிள்ளை சுட்டிக்காட்டியிருக்கிறார்; அறநூல்களின் ஆட்சித்திறத்தை அனவரதவிநாயகம் பிள்ளை காட்டியிருக்கிறார்; வாழ்வில் ஏற்படுகின்ற மாற்றங்களுக்கு ஏற்ப கருத்துப்புதுமைகளை எல்லாம் நாம் எப்படியாவது பாராட்டி மகிழவேண்டும். புதிய கருத்துக்களைப் பழைய வடிவத்திலேயே சொல்லிக்கொண்டு இருப்பதனால் பயனில்லை. ஏன் ஒப்பிட்டுக்கண்டு, மாற்றுக் கருத்துக்களையெல்லாம் சொல்லலாம் என்பதற்கு வையாபுரியார் வழிகாட்டியிருக்கிறார்.
ஆய்வே வாழ்வு என்ற நிலையில், கல்விக்கடலாகத் திகழ்ந்தவர் அறிஞர் க.த. திருநாவுக்கரசு என்றால் மிகையாகாது. மேலும் தொடர்வதென்றால் மென்மையான சாயலோடு புகழ்பெற்ற இன்னாசி ஆகியோர; செய்த தமிழ்ப்பணி பாராட்டத்தக்கது. பெரும் தகைமையாளர்கள் அறிஞர் பொற்கோ, திருக்குறள் திலகம் இ. சுந்தரமூர்த்தி, அகராதிச் சுரங்கம் வ. ஜெயதேவன், ஆய்வாளர் மு. சண்முகம்பிள்ளை, திருக்குறள் சிந்தனையாளர; கு. மோகனராசு என்று நான் அடுக்கிப் பேசுவதென்றால் நெடியபொழுதாகும். இப்படி எண்ணிப்பாருங்கள். ஒரு பெரிய அகன்ற விரிந்த ஒரு தமிழ் உலகத்திற்கே சான்றாக விளங்குகின்ற விளக்குகளைக் கொண்ட பெருமை வாய்ந்தது தமிழ்த்துறை என்று நான் மகிழ்ச்சியோடு சொல்ல விரும்புகின்றேன். எவ்வளவு பெருமையாக இருக்கிறது. சொற்கோவாகத் திகழ்ந்த சேதுப்பிள்ளை அவர்கள் தலைமை தாங்கியது தமிழ்த்துறை. நமக்குப் பொற்கோவாக இருந்து அதே பல்கலைக்கழத்திற்குத் துணைவேந்தராக வரும் தகுதியினையும் ஒரு தமிழ்ப்பேராசிரியர் தரமுடியும். இந்தப் பெருமிதத்தைக் காணும்போதுகூட தமிழ்த்துறையில் உள்ளவர்கள் என்று பார்த்தால், அவர்கள் தமிழ்த்துறைக்குப் பிறகு துணைவேந்தர்களாக, ஏன் நாடாளும் வேந்தர்களாக வருகின்ற காலம் கூட வரவேண்டும் என்பதுதான் நம்முடைய விருப்பம். ஏனென்றால் நாம் அப்படிப்பட்ட கருத்துக்களைச் சொல்லிப் பழகியிருக்கிறோம். வேந்தனிடத்திலே புலவர் போய் இடித்துக் கூறுவதும், புலவர் சொல்லை வேந்தன் தலைமேற் கொண்டிருப்பதும், தமிழ் மரபு. வாழ்க்கையில் வருகின்ற செல்வங்களை வளர்ச்சிக்காகத் தரமுடியும் என்பதற்காக செந்தமிழ்ச் செல்வர் சேதுப்பிள்ளை அவர்கள் தன்னுடைய அன்னையின் பெயரால், சொர்ணாம்பாள் நினைவு என்று சொல்லி ஒரு பெருந்தொகையைத் தந்த முதல் புரவலர் சேதுப்பிள்ளை அவர்கள் தான்.
எனவே, நண்பர்களே தமிழினுடைய பல்வறு கிளைகளை, அந்தக் கிளைகளில் படந்ததிருக்கின்ற அழகை எடுத்துக்காட்டுகின்ற பல்வேறு துறைபெருமக்களை நீங்கள் இந்தப் பன்னிருபேரை ஆராய்கின்ற நிலையில் நின்றிருக்கிறீர்கள். எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி என்னவென்றால் எதிர்காலத்தில் அரசினுடைய வழியில் ஓர் ஆயிரம் பேரும் (நான் சொல்வது அரசின் வழியில் என்பது நம்முடைய பேராசிரியர் அரசு வழியில்) அரங்க இராமலிங்கத்தின் வழியில் மேடையில் முழங்குவதோடு தன்னுடைய பழமைக்கருத்துக்களையும் கூட மற்றவர்கள் கேட்டு மகிழ்கின்ற வகையில் எப்படிச் சொல்லிக்காட்ட முடியும் என்பதற்கு, இலக்கியத்தை எப்படித் துணையாக்க முடியும் என்று வழிகாட்டிய அரங்க இராமலிங்கம் அவர்களையும் நான் வாழ்த்துகிறேன். நீங்கள் தொடங்கியதனால் தமிழ்த்துறையில் புதுமை மலரக்கண்டேன். நான் கண்ட வகையில் இத்தகைய புதுமைகளை, இத்தகைய மறுமலர்ச்சியை இத்தகைய மாற்றங்களைத் துணிந்து இந்தப் பல்கலைக்கழத்தில் செய்ய முடியும் என்பதற்கு வழிகாட்டிய வகையில் பேராசிரியர்களை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்.
அறிஞர் பாலு அவர்கள் இளையவராக இருந்தாலுங்கூட அடுத்தநிலையிலும் இதே வழியை நாம் தொடர்ந்து எப்படியாவது நாம் கடைபிடிக்க வேண்டும். சிலநேரங்களில் தொடர்ந்து கடைபிடிக்க முடியாமல் போனால் துறைகளினுடைய பெருமை குறைந்துவிடும். ஒரு காலத்தில் டி.வி. மகாலிங்கம் என்பவர் எழுதிய நூல்தான் தொல்பொருள் ஆய்வுத் துறையினருக்கு ஒரு பெரிய நூலாக இருந்தது. இப்போது தொல்பொருள் ஆய்வுத் துறை என்ற படிப்பே கூட வாய்ப்பு இல்லாமல் குறைந்துவிட்டது. இன்னும் சொன்னால் கிரேக்க நாட்டினுடைய அரசனும் அரசியும் சென்னை மாநகருக்கு வந்து நாங்கள், சென்னை மாநகருக்கு ஏன் வந்தோம் என்று கேட்டால், சென்னைப் பல்கலைக்கழகத்துத் தத்துவத்துறைப் பேராசிரியரிடத்தில் நாங்கள் படிக்க வந்திருக்கிறோம் என்றார்கள். தத்துவத்துறை பேராசிரியராக இருந்த டி.எம்.பி. மகாதேவன் அவர்கள் அத்தகைய பெருமை பெற்றவர். டி.எம்.பி. மகாதேவன் அவர்களுடைய பெருமை எப்படியென்றால் இந்தியக் குடியரசுத் தலைவருக்காகப் பெயர்களைப் பரிந்துரைத்த நேரத்தில் டி.எம்.பி. மகாதேவன் பெயரும் ஒரு பெயராக இருந்தது. இப்படியெல்லாம் புகழ்வாய்ந்த பொற்சுடர்கள் பொழிவுரை நிகழ்த்திய ஒரு மரபு வாய்ந்த சென்னைப் பல்கலைக்கழகம்தான் மற்ற பல்கலைக்கழகத்திற்கும் வழிகாட்டியாக ஒளிர்கிறது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைத்தான் தமிழ்ப் பல்கலைக்கழகம் என்றும் தமிழ் வளர்க்கும் தன்னேரில்லாத அறிஞர்கள் அங்கேயிருந்து வளர்ந்து சிறந்திருக்கிறார்கள் என்றும் நாம் சொன்னோம். ஆனால் அந்தப்பெரும் புகழுக்கு முன்னாலேயே சென்னைப் பல்லைக்கழகம் சீரிய புலவர் பெருமக்களைத் தமிழ்த்துறைக்குத் தலைமை தாங்க வைத்ததன் மூலம் மிகப்பெரிய புகழ்வாய்ந்த தனிப்பெருந் தகைமையாளர்களாக அவர்கள் விளக்கம் பெற்றிருக்கிறார்கள் என்பதை எண்ணி நான் மகிழ்ச்சியோடு வாழ்த்துகின்றேன்.
அருமை நண்பர், சென்னைப் பல்கலைக்கழகத்தை அணிசெய்கின்ற பெருந்தகை அறிஞர் தாண்டவன் அவர்கள், நான் அவரை மாணவராக இருந்தபோதே அறிவேன். மாணவராக இருந்தபோது மட்டுமில்லாமல் எல்லோரிடத்திலும் கலந்துபழகி அன்பினால் பரிவினால் இந்த உலகத்தை வெல்லலாம் என்பதைத் தன்னுடைய செயன்முறையில் செய்து காட்டுகின்ற பெருந்தகை தாண்டவன் அவர்கள் துணைவேந்தராக இருப்பது உங்களுக்கு வாய்த்த ஒரு பொற்காலம் என்று நான் உறுதியாகச் சொல்கிறேன். எனவே பேராசிரியர் தாண்டவன் அவர்கள் மீண்டும் மீண்டும் தமிழ்த்துறை மேலும் பல்கிப் பெருகும் வாயப்புக்களை அவர் வழங்குவார் என்பதில் ஐயமில்லை. என் நினைவலைகளில் அப்படியும் இப்படியும் அலைமோதும் நிலையில் என்னுடைய மகிழ்ச்சியுரையை நிறைவு செய்கிறேன். வணக்கம்.

Add a Comment