அறச்செம்மல் மாடம்பாக்கம் வாசுதேவப்பிள்ளை நூற்றாண்டு நினைவு விழா
(1911-2011) வாழ்த்துரை: தாமரைத்திரு ஔவை நடராசன்
கருணை ஈகையும் தம் கண்களெனக்கொண்டு வாழ்ந்த சான்றோர் குழுவே பின்னர் குலமாக மாறி கருணீகர் எனப்பட்டார் என்பர்.குலங்கள் பலவாகப் பெருகி வாழ்வில் அல்லல்களுக்கு ஆட்பட்டு மக்கள் தம் நல்லியல்புகளை மறந்து வரும்
நிலையில் ஒன்றே குலம் என்ற கோட்பாட்டையும் உலகம் விரும்பி ஏற்க முயல்கிறது.
உழைப்பால் ஓங்கி உயர்ந்த திறத்தால் கல்விப்பணிகளுக்கு அறம் செய்யத்தொடங்கித்தான் பெற்ற செல்வம் முழுவதையும் தம் சுற்றத்தாரும் குலத்தாரும் செழிப்புற்றோங்க வாரி வழங்கிய வள்ளலாகக் கலைச்செம்மல் வாசுதேவப்பிள்ளை
திகழ்ந்தார்.தொடக்கப்பள்ளியில் நான் படித்த நாளிலேயே நம் செல்வங்களுக்கு வாசுதேவப்பிள்ளை அறக்கட்டளையிலிருந்து நிதி உதவி வழங்கியதை நான் அறிவேன்.என் தந்தையாரும் மாமனாரும் வள்ளல் வாசுதேவனாரின் புகழைப்போற்றி
மகிழ்ந்தனர்.
எளிய நிலையில் வாழந்தாலும் ஊருக்கு ஒருவர் படித்துக் கணக்கெழுதி வந்தார்கள் என்பதைக் காரணமாகக் காட்டி கருணீகர்கள் முற்பட்ட வகுப்பினர் என்று பல்லாண்டுகள் இளம்பிள்ளைகள் உயர்கல்வி வாய்ப்பு பெற இயலாமல்
ஒடுக்கப்பட்டிருந்தனர்.இந்நாளில் இளைஞர் பலர் உயர்கல்வி வாய்ப்பைப் பெற முயன்று வளரும் இளம்பயிர்களுக்கு வான்மழையாய் வாய்ந்த வாசுதேவப்பிள்ளை
அறக்கட்டளையை நாம் நினைத்து நெகிழ வேண்டும்.
தொடங்குவது போலத் தொடர்வது என்பது அரிய முயற்சியாகும்.நாளும் பொழுதும் வம்பும் வழக்குமாகவே பல்லாண்டுகள் கழிந்தன.வாராது வந்த மாமணியாகக் கல்வி
நெறிக்காவலர் திரு ந மணி அவர்கள் பல கல்வி நிலையங்களிலும் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றிய பெருமிதத்தோடு கருணீகர் குலத்திற்கு கலங்கரை விளக்கமாக அறங்காவலர் குழுவினரையும் ஒரு சேர அமைத்து அவரும்
விழாவில் பங்கேற்றுள்ளார்.
நூற்றாண்டு நிறைவு விழா நிகழும் இந்நாளில் இடர்கள் நீங்கி வளம்பெற்று வாசுதேவப்பிள்ளை அறக்கட்டளை ஒரு கல்லூரியை நிறுவ வேண்டும் என்பது நம் மக்களின் கனவாகும்.நன்மனத்தோடு ஆற்றும் பணிகள் வெற்றியை நல்கும்
என்ற துணிவினை நாம் பெறுவோமாக!
நூற்றாண்டு விழாக்குழுவினரை நான் பாராட்டி மகிழ்கிறேன்.

Add a Comment