POST: 2013-10-08T13:41:54+05:30

சங்ககாலத் தமிழர் பெயர் மரபு என்ற நூலுக்கு முனைவர் ஔவை நடராசன் அவர்களின் முன்னுரை:

தொல்மரபைத் தொடரும் பெயர்கள்

பெயர்கள் தனிச்சிறப்புக் கொண்டவை.பெயரில் என்ன இருக்கிறது என்று கூட வினா எழுப்புதுலுமுண்டு.மக்களுக்கு அமைந்த பெயர்களில் அந்நாட்டு மக்களுடைய மனம்,குணம்,பண்பாடு,வழிபாடு,கோட்பாடு,பழக்க வழக்கம் எல்லாம் புதைந்துள்ளன.பெயர்களை இயற்பெயர்,சிறப்புப்பெயர் எனக் குறிப்பதுண்டு.இப்பெயர்களைக் காரணப்பெயர்,இடுகுறிப்பெயர் எனக் கூறி காரணம் பற்றி அமையாதது இடுகுறி என்றனர்.காரண இடுகுறி என்ற ஒரு பிரிவையக்காட்டி ஒரு வகையால் காரணமும் ஒரு வகையால் இடுகுறியாகவும் அமையுமென்பர்.முக்கண்ணன் என்னும் போது காரணம் கருதும் நிலையில் சிவனையும் விநாயகரையும் குறிக்கும்.காரணம் கருதாத போது இடுகுறியாய் சிவனையே குறிக்கும் எனச் சிவாகாமங்கள் குறிக்கின்றன.மக்கட்பெயர்களை
ஆராய்வதையே ஆய்வுப் பொருண்மையாகக் கருதும் வழக்கம் இந்நாளில் வளர்ந்துள்ளது.சேரர்,சோழர்,பாண்டியர் முதலிய குடிப்பெயர்களுக்குக் கூடப் பொருள் காண முடியாமல் அவரவர் தம் அறிவு நிலையில் கண்ட பொருண்மைகளை எழுதினர்.இந்நிலையில் சங்க கால மன்னர்,மக்களில் ஆடவர்,மகளிருக்கு அமைந்த பெயராக இயற்பெயர் குடிப்பெயராக இடம் பெற்ற பெயர்களை நுணுகி ஆராயத் தலைப்படும் வகையில் இந்நூல் அமைகிறது.

சங்க இலக்கியப்பதிப்பில் புலவர் பெயர்களை ஊரால்,உறுப்பால்,நாளால்,தொடரால் அமைந்த பெயர்கள் என 43 வகையாக வரையறை செய்து குறித்துள்ளனர்.கருங்குழல் ஆதனார் என்னும் பெயரை உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்கள் கருங்குளவாதனார் என்று உரைப்பதோடு நெடுங்கழுத்துப் பரணர் என்பதை நெடுங்களத்துப் பரணர் என்று எழுதி உறுப்பால் பெயரிடும் வழக்கம் தமிழர்க்கு இல்லை என்றும் வலியுறுத்தினார்.

ஆதிமந்தியாரைக் கடுவன் இளவெயினனார் என்று பெயரொடு ஒப்பிட்டு ஆடவற்குக் கடுவன் என்று பெயரிருப்பதால் மகளிர்க்கு மந்தி என்று பெயர் வந்ததெனக் கருதியோரும் உண்டு.

அரும்பெறல் பெரும்புலமை வாய்ந்த புலவர் தருமபுரிப் பேராசிரியர் கோவிந்தன் அவர்களொடு நான் பழகும் பேறு பெற்றதைப் பெருமிதமாக இங்குக் குறிக்க விழைகிறேன்.போதுபோக்காகப் பேசும்போது கூடக் கல்நாட்டைச் சேர்ந்த கல்லர் எப்படிக்
கள்ளராயினர் என்றும் புத்தேளிர் எனும் சொல் அறிவுத் தெளிவுடையாரைக் குறிக்கும் என்றும் கண்டறிந்து உரைப்பது அவர் புலமையில் சிந்திய துளிகளாகும்.

மாந்தரியல் மரபை ஆராய்ந்து வேடுவர்,கானவர்,ஆயர்,நுளையர்,உமணர் முதலிய தொல் குடிப்பெயர்களின் வேரில் கிளைத்தனவாகவே பெயர்களின் பொருளைக் காணலாம்.இந்நிலையில் மலர்ந்த சிந்தனைகளின் தொகுப்பாகச் சங்க கால மக்களின் பெயரிடு மரபு என்ற தலைப்பில் இந்நூல் வடிவம் பெற்றுள்ளது.

வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார் என்ற தொடருக்கேற்ப அறிஞர்கள் தம் முடிவுகளை மேலும் ஆராய்ந்து வளமாக்கும் வடிவில் தம் எண்ணங்களை
வழங்குதல் வேண்டும் என்னும் நிலையில் தமிழ் உலகிற்கு இந்நூலை வழங்கி மகிழ்கிறோம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *