காலத்தில் கனிந்த கனி !
முனைவர் ந.அருள்
மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர்
தூணிலும் துரும்பிலும் இருப்பான் என்ற மொழிக்கேற்ப வேளாண்மை தொடங்கி விண்வெளி வரை வளர்ந்துள்ள அனைத்துத் துறைகளிலும் கணிப்பொறியின் ஆட்சி நாளும் வளர்ந்து புதுமைகள் பெருகி வருகின்றன.
கைநோக அங்கும் இங்கும் கண்கள் தேடிப்பார்க்கப் பல்வேறு பெட்டகங்களிலிருந்து ஒவ்வொரு எழுத்தாக எடுத்துச் சேர்த்து அச்சிட்ட காலம் ஒன்றிருந்தது. பிறகு தட்டச்சு முறை வந்தது. இப்போதோ கணித்திரையில், விரல்களின் திறத்தினால் உரிய மென்பொருளைப் பொருத்தி எந்த மொழியையும் விரைந்து தட்டி முடிக்கின்ற தட்டும் கலைக்குத்தான் டிடிபி (DTP) என்று பெயரிட்டிருக்கிறார்கள். அமர்ந்தபடியே தட்டச்சு முறையில் சோர்வில்லாமல் ஆயிரம் பக்கங்களை முடிக்கின்றனர். இந்த வினைத்திறப் பயிற்சிப் பெறுவதற்கு இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் இப்போது முன் வந்திருக்கிறார்கள். பலநூறு பதிப்பகங்களில் வேலை வாய்ப்புகள் பல்கியுள்ளன.
கணிமச் செம்மல் திரு. ஆண்டோ பீட்டர் கடந்த பத்தாண்டுகளாகக் கணிப்பொறிக் கல்வி நெறிக் காவலராக விளங்குவதோடு தன் பயிலகங்களில் பலரைப் பயிற்றுவிக்கின்றார். கணிக்குறியீடுகள், பல்லூடகங்கள், பற்றி நாளும் பேசியும் எழுதியும் வரும் திரு. ஆண்டோ பீட்டர், கோவையில் நடந்த உலகச் செம்மொழி மாநாட்டின் இணையத் தமிழ் மாநாட்டின் வேராக இருந்து நண்பர் ஆண்டோ பீட்டர் வெற்றி பெற்றவர். எண்ணி இருபது நாள்களுக்குள் டிடிபி (DTP)-ல் வல்லமை பெறுதற்கு இந்தக் கையெடு மிகப் பெரிதும் உதவும். காலத்தால் கனிந்திருக்கும் இந்த நூலையும் ஆசிரியரையும் நாடு பாராட்டும்.
கணித்தமிழ்க் கலைநலம் வெல்க !

Add a Comment