“திருவள்ளுவர் பல இடங்களில் வடநூல் மரபை மறுப்பதைப் போலவே குறிப்பாக, மனுதர்மத்தின் வருணத் தர்மத்தை மறுக்கவே பிறப்பொக்கும் என்றார்; அதன் நீட்சியே சிறப்பொவ்வா என்பதும்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
எனுங் குறளுக்கு, மக்கள் அனைவருக்கும் பிறப்புச் சமமானதே ஆகும். எல்லாத் தொழில்களும் மதிப்புடையனவேயாகும். ஆதலின், தொழில் வேறுபாட்டைக் கொண்டு சிறப்பளிப்பது பொருந்தாதென்று பொருள்கொள்வதே ஏற்றது; சிறந்தது. பிறப்பு எல்லாருக்கும் ஒத்திருப்பதைப் போன்று, மக்களைத் தொழில்களால் பெருமை- சிறுமைக்கு உட்படுத்தாமல், அனைத்துத் தொழில்களையும் ஒத்ததாகக் கருத வேண்டும் என்பதே அவர் நோக்கு அதாவது பிறப்பிலும் ஏற்றத்தாழ்வு இல்லை; அதே போன்று தொழில்களிலும் ஏற்றத் தாழ்வு இல்லை என்கிறார். வள்ளுவரின் நெஞ்சை உள்ளவாறு உணர்ந்ததால்தான் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை மிகச் சரியாக
“வள்ளுவர் செய்திருக் குறளை
மறுவற நன்குணர்ந்தோர்
உள்ளுவரோ மநுவாதி
ஒருகுலத்துக் கொரு நீதி“ என்றார்.
மனுநீதியைச் சுந்தரம்பிள்ளை சரியாக அடையாளம் காட்டியுள்ளார். அவர் கூற்றாலும் வள்ளுவம் மனுவுக்கு நேர் எதிரானது என்பதை உணரலாம். தமிழறிஞர்களும், குறளாய்வாளர்களும் இது குறித்து மேலும் சிந்தித்தல் வேண்டும். மெய்ப்பொருள் காண்பது ஆய்வாளரின் கடனன்றோ!

Add a Comment