POST: 2012-10-18T17:35:20+05:30

வாழ்க

சிந்தனைகளின் தோழர்

இரா.குமரவேலர்!

கவிஞர் ஈரோடு தமிழன்பன்

கடந்துபோன

கணக்கற்ற பகல் இரவுகள்

படைத்து வைத்த புத்தக்கத்தில்

இரா குமரவேலர் பெயர்

இருக்கிறது -மின்னும் எழுத்தில்!

கடக்க வரும்
காலம் இன்னும்
எண்ணற்ற பக்கங்களோடு
காத்திருக்கிறது இவருக்காக.

அகவை
எழுபத்தைந்து என்பது
காலப்பெருவெளியில்
கண்ணிற்குப் புலப்படாத சிறிய புள்ளி
என்றாலும்
இவரிடத்தில்இருந்து இவரைப்
பெரிய புள்ளி என்று நமக்கு அது
இனம் காட்டுகிறது

அதிகாலை
அமைதிப்பொழுதை எது இயற்றி
வைக்கிறது?
நள்ளிரவு மவுனப்பாடலுக்கு
எது மெட்டமைக்கிறது?
அது தான் குமரவேலரின் குறுநகையைப்
புனைந்து தருகிறது.

நகத்தோடு
சதைக்குள்ள நெருக்கத்தைவிடத்
தமிழோடு இவருக்குள்ள நெருக்கம் அதிகம்!

தண்ணீருக்குள்
படுத்துறங்க முடியாத் தாகங்கள்
இவர் ஆய்வுப்புலமைக்குள்
எப்போதும் விழித்திருக்கும்

என் கவிதை
இயற்கையை எப்படிக் கொண்டாடுகிறதோ
அப்படிக் கொண்டாடுகிறது
குமரவேலரை…
காரணம் …
இயற்கையான மனிதர் இவர்.

எந்த வெண்பாவில்
அசைகளாக அரும்புகளும் தளிர்களும்
இடம் பெறும்?
எந்த வெண்பாவில்
காற்றின் நரம்புகளும் அருவியின்
விழுதுகளும் செப்பலோசையாக
இடம் பெறும்?
அந்த வெண்பா -இந்தக்
குமரவேலர்.

இவ்விழாவில்
குமரவேலருக்கு ஒரு வாழ்த்துத்
தீர்மானம் நாம் முன்மொழிவோம்
நம்பிக்கை நட்சத்திரங்கள்
வழி மொழியட்டும்.

சிந்தனைகளின் தோழர்;
செந்தமிழ் உணர்வுகளின் மையச்
சுடுபுள்ளி …குமரவேலர்
இனிய வாழ்வு தொடரட்டும்

மோதுகின்ற
உடற்பிணியே உனக்கோர் எச்சரிக்கை!
முகில் மோதி
விரிவானில் விரிசல் உண்டாகாது!
உன் கையில் உள்ளது
தப்பான முகவரி! தப்பிச்செல்ல வழி பார்.

மூலிகைக்காடுகள்
மூச்சை உற்பத்தி செய்கின்றன
இவருக்காக…
வருத்த நினைக்காதே! விலகிச்செல்
வலியே!

இவர் புன்னகையை,கண்ணொளியைக்
கொள்ளையடிக்க எதனாலும் முடியாது!
எவராலும் முடியாது…
குடும்பம் காவல் போட்டுள்ளது.
நட்பு வட்டம் பாதுகாப்பையப்
பலப்படுத்தியுள்ளது.

மறவாத மாணவப்பட்டாளம்
கண்களில் கவனத்தை
நட்டு வைத்துள்ளது.

இவர் ஆய்வுக்கு உட்பட்ட
நாடகப்பாத்திரங்கள்
ஒப்பனைகளைக் கலைத்து விட்டு
ஓடோடி வந்து விட்டன-
இவர் வீட்டு வாசலுக்கு!

வலியே! உடற் பிணியே!
தேவையெனில் இவர் வெட்டி எரியும்.
விரல் நகங்களை அள்ளிக்கொண்டு போங்கள்!
படுக்கையில்
கலைந்து போன தூக்கங்களைக்
கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள் !

மற்றபடி,
குமரவேலருக்கு
இன்னும் நூறு பால் பவுர்ணமிகளை
என் கவிதை படைத்துத் தரும்!
இன்னும் நூறு நூறு
இனிய விடியல்களை என் கவிதை
உறுதிப்பத்திரமாய் எழுதிக்கொடுக்கும்!

குமரவேலரை
அறிய வேண்டிய அளவு அறியவில்லை
தமிழகம்,
குமரவேலரும்
கை நீட்டிய இடத்தில உச்சங்கள்
இருந்தும் ஏனோ தொடவில்லை!

நம் மக்கள்
ஆண்டுதோறும் வந்தால் கூட
மாதங்களை மறந்து விடுவார்கள்!
வாரம் தோறும் வந்தால் கூடக்
கிழமைகளை மறந்து விடுவார்கள்!

நம்மிடையே வாழும்
தகுதியாளரை எப்படி நினைப்பார்கள்?
தந்தையை மறப்பார்கள்,
தாயை மறப்பதற்கு மட்டும் ஒரு நாள்
தாமதிப்பார்கள்.

எங்கள் குமரவேலர்
எடுத்துச் சொல்லப்படாத
ஒரு முத்தம் போல் இருந்து விட்டார்!
இன்னும் நூறாண்டு இருப்பார்.
இவரை
எதிர்கொள்ளும் ஆண்டுகளைத்
தமிழர்களே,முத்தமிட வேண்டாமா நாம் ?

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *