பனி சுமந்த மேகங்கள்’ என்னும் கவிதை மொழி பெயர்ப்பு நூல் தகிதா பதிப்பகத்தின் முதல் மொழிபெயர்ப்பு நூல்
கவிஞர் பீர் ஒலி அவர்கள் எழுதிய ‘THE VISION ‘ என்னும் ஆங்கில கவிதைத் தொகுப்பு,(1981 ல் வெளியிடப்பட்ட நூல்) 32 வருடங்கள் கழித்து பேராசிரியர் மணிவண்ணன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்…. என்னுடைய மதிப்புரை
பாராட்டும் நாள் இந்த நாளே!
————————————————————————————-
கற்பனைகளும் கவிதைகளும் காட்டாறாகப் பெருகிவரும் மலர்ச்சிக் காலமாக இந்தக் காலம் மிளிர்கிறது. கையில் கரித்துண்டு கிடைத்தவுடன் மழலைப் பிள்ளைகள் கோடுகளையும் கோலங்களையும் வரைவது போல, இளைஞர்கள் தாம் பெற்ற கல்விச் சிந்தனையோடு கற்பனையும் கலந்து கவிதைகளை ஆயிரம் பூக்களாக மலர்ந்து மணம் பரப்பச் செய்து வருகிறார்கள்.
திரு. முகமது ஆதாம் பீர்ஒலி கவிதை நூல்களைப் புனைவதில் கவியரசராக விளங்குகிறார். பார்வை என்ற தலைப்பில் கவிஞர் பீர்ஒலி வரைந்த நூலின் ஆங்கில மொழியாக்கமாக நண்பர் மணிவண்ணன் தம் ஆங்கிலப் புலமையோடு கவிதைகளை மொழியாக்கம் செய்திருப்பதை மகிழ்ந்து பாராட்டுகிறேன்.
கவிதையின் கருப்பொருள் மாறாமல் ஆங்கிலத்தில் உள்ள பொருளுக்கேற்றவாறு தமிழில் கவிதை புனைவது தேர்ந்த கலையாகும். கருத்துக்கேற்ப மொழிபெயர்ப்பது நண்பர் மணிவண்ணனின் போக்காகத் தெரிகிறது. (HEART LONGING – A CONCEIT DEVOID) என்ற கவிதையை நம்பிக்கையின் கரம் நாடி என்று வரைந்திருப்பது பொருத்தமாகவே உள்ளது. பேராசிரியர் திரு. மணிவண்ணன் அவர்களை உதகையில் பணியாற்றும் தமிழ்ப் பேராசிரியர் என்ற அளவில்தான் நான் அறிவேன். முக ஏட்டில் (Facebook)அடிக்கடி நல்ல செய்திகளை எழுதி மகிழும் நண்பர் மணிவண்ணனோடு எனக்கு நட்பு உருவாகியுள்ளது. உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும் என்ற திருக்குறள்தான் எனக்கு ஊக்கம் தருகிறது. பேராசிரியர் மணிவண்ணன் தமிழ்ப் புலமையோடு ஆங்கிலத் தகுதியும் பெற்றுத் தம் பணியை அணிபெறச் செயலாற்றி வருகிறார். உமர்கயாமின் கவிதைகளை இருபது பேருக்கு மேல் மொழிபெயர்த்து இருக்கிறார்கள். என்றாலும் இன்னும் பிட்சிரால்டின்(Fitz Gerald) மொழியாக்கத்தைக் கூட நிறைவு காணாதவர்கள் உள்ளனர். இந்நிலையில் தமிழ்ப் பேராசிரியர் இத்தகைய பெருமிதப் பணியை வளர்த்துக்கொண்டு ஆங்கில மொழியின் நயப்பாடுகளை தமிழுக்குச் சேர்த்து வருவதை நான் வாழ்த்தி மகிழ்கிறேன். பேராசிரியர் திரு. மணிவண்ணனை வாழ்த்தும்போது அந்தப் பாராட்டுப் பனித்துளி கவிஞர் முகம்மது ஆதாம் பீர்ஒலி தோள்களிலும் படரும் என்றே கருதுகிறேன்.
தாயெழிற் றமிழை, என்றன்
தமிழரின் கவிதை தன்னை
ஆயிரம் மொழியிற் காண
இப்புவி அவாவிற் றென்ற
தோயுறும் மதுவின் ஆறு
தொடர்ந்தென்றன் செவியில் வந்து
பாயுநாள் எந்த நாளோ
பாராட்டும் நாள் இந்த நாளே !

Add a Comment