POST: 2013-10-30T23:34:49+05:30

1983ம் ஆண்டில் வெளியான வலம்புரிஜான் எழுதிய சிந்திக்கத் தெரிந்த சிலருக்காக என்ற நூலுக்கு டாக்டர் ஒளவை நடராசன் அவர்களின் வாழ்த்துரை:

வலம்புரி பொதிகையிலிருந்து…!

அந்தி மயங்கும் வேளையில்,ஆர்வம் கொண்டவர்கள் நம்மீது,புத்தம் புதிய பூக்களைப் பறித்த கரங்களில்,பனித்துளி சிந்திடப் பொழிவது போல வலம்புரியின் வசன மலர்கள் மேடைகளைத் தேனோடைகளாக மிளிரச் செய்கின்ற மேன்மையை நான் நினைத்துக் கொண்டிருந்த ஒரு நேரத்தில் சிந்திக்கத் தெரிந்த சிலருக்காக என்ற இந்தப்புத்தகப் புதுமலர் என் கையில் வந்து தவழ்ந்தது.

கலை வடிவங்களில் காலத்தால் சாலப் பழமை வாய்ந்த கவிதைச் சாயத்தை உரைநடையின் உடம்பெல்லாம் பூசி எழுகின்ற தனித்துவம்-மகத்துவம் நண்பர் வலம்புரியின் எழுத்துக்களில் பக்கம்தோறும் பளிச்சிடுவதற்கு இந்நூலும் சான்று.

ஆழ எழுதுவது,அழுத்தமாகச் சொல்வது,வாழ வழிகாட்டுவது,வரிக்கு வரி நாட்டு வளர்ச்சிக்கு உரமூட்டுவது என்னும் நான்கு தூண்களுக்கு மேல் சிந்தனை மண்டபத்தைச் சித்தரித்துக் காட்டுகின்ற சிற்பியாக இந்த நூல் முழுவதும் நண்பர் வலம்புரி வலம் வந்திருக்கிறார்!

கருத்தைப் பற்றிச் சிந்திப்பவர்கள் நம் நாட்டில் சிலர்.ஆனால் காரணம் தெரியாமல் கண்ணீர் சிந்துபவர்கள் பலர்,எண்ணத் தெரியாதவர்களும் பலர்,எதையும் பண்ணத் தெரியாதவர்களும் பலர் என்ற விருத்த வரலாற்றை வளர்த்துக் கொண்டிருக்கும் நமது மக்களுக்கு வாயில் திறக்கின்ற சிந்தனைக் கோயில் இது.

பூவுலகு எங்கும் சுற்றி வருகின்ற நண்பர் வலம்புரி என்னும் வான் மழையால்-வாடிய பயிராயிருந்த வாலிபக்கொடிகள் பலர் இன்று நிமிர்ந்து நிற்கின்றனர்!அனைவரையும் உறவினர் என்ற ஆர்வத்தோடு அரவணைக்கும் விரிந்த மனத்திற்கும்,வித்தகச் சிந்தனைக்கும் விளக்காக விளங்குவது இந்நூல்!பொழுதைப் போக்குவதற்காகப் பூத்த விருப்ப மலரன்று இது -பொழுதை ஆக்குவதற்காகப் புறப்படுங்கள் என்று போர்வரிகளோடு பூத்த நெருப்பு மலரிது!வலம்புரி பொதிகையிலிருந்து வழிந்து வரும்
இப்பொன்னருவியைப் போற்றுகிறேன்!வலம்புரியின் வரிகளிலேயே சொல்வதென்றால் சிந்திக்கத் தெரிந்தவர்கள் பலராகட்டும்!அவர்களின் செயலாண்மைக்கு விளக்கமூட்டும் இந்நூல் சுடராகட்டும்!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *