POST: 2013-09-28T10:07:39+05:30

உண்மை வெள்ளம்
முனைவர் ஔவை நடராசன்

வழக்கறிஞர் ம.இரவிபாரதி ஏடறிந்த கவிஞராக மாணவப் பருவத்திலிருந்தே மலர்ந்து தமிழ் மணம் பரப்புகின்றார். நாட்டு நடப்புக்களையும் நாளும் கண்ணெதிரே படும் காட்சிகளையும் கற்பனை நிறம் பூசாமல் உணர்வு பொங்கக் கவிதை எழுதும் திறம் ஆசிரியருக்குக் கைவந்தக் கலையாக மிளிர்கிறது.

“நாடகத்தில் நானும் இங்கே நடிக்கின்றேன் – புதிய நடிகர்களை தினம் தினம் பார்க்கின்றேன்“ என்று உலகியல்பை உணர்த்திக் காட்டுகிறார். எதற்குள் எதுவும் இல்லை என்ற கவிதை நூலுக்குப் பிறகு எல்லாமே சில காலம்தான் என்ற தலைப்பில் 62 கவிதைகளை இரவிபாரதி புனைந்திருப்பதைப் படித்து மகிழ்ந்தேன். கவிதை புனையும் எழுச்சியால் அன்னையில் தொடங்கி இறுதிவரை என்ற தலைப்புக்களில் உண்மைகளை ஒளிமின்ன வரைந்து காட்டுகிறார். கடமை உணர்ச்சி ஒழுக்கம் காக்கும் நல்லியல்பு சீர்திருத்தச் சிந்தனை வறுமையைக் கண்டு வாடித்துடிக்கும் மனக்கலக்கம். மன்னாயத்து மக்கள் எல்லா நிலைகளிலும் நிகர்மை பெறவேண்டும் என்ற நம்பிக்கைப் பாங்கு அவர் நாடி நரம்புகளில் ஓடுவதை உணர முடிகிறது. ஒரு பாடலைச் சான்று காட்ட விரும்புகிறேன்.

உனது நற்குணங்கள்
இருளைப் போக்கும் ஒளியாகட்டும் !
உனது கருணை
வறுமையைக் கடக்கப் பாலமாகட்டும் !
உன் மனித நேயம்
ஆலமரமாய்ப் பரந்து தழைக்கட்டும் !

கற்பனையில் மிதந்துகொண்டு காதலுரைகளை வண்ணக்கிளிகளாக சொல்லிக் கொண்டிருக்கும் கவிதைகள் எண்ணிக்கையில் பெருகி வரும் உலகில், வழக்கறிஞர் இரவிபாரதியின் கவிதைநூல் நல்லுணர்வுக்கும் மெய்யுணர்வுக்கும் நயம்கூட்டும் நறுமண மாலையாக ஒளிர்கிறது.

வாழ்க கவிஞர் இரவிபாரதி !
வளர்க அவர் உண்மை உள்ளமும் அதில பொங்கி வரும் உணர்வு வெள்ளமும் என்று மகிழ்ச்சியோடு போற்றுகிறேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *