POST: 2013-09-27T13:04:29+05:30

மலர்களைத் தேடும் மணியன் !
முனைவர் ஔவை நடராசன்

‘நீத்தார் பெருமை‘ என்றே ஓர் அதிகாரம் திருக்குறளில் உள்ளது. நீத்தார் யார் என்பதைப் பற்றிப் பலர் பல விளக்கங்களைக் கூறினர். தாம் கொண்ட கோட்பாட்டிற்காகத் தம் வாழ்க்கை நெறிமுறைகளை அமைத்துக் கொண்டு வாழ்வாங்கு வாழ்பவர்களை நீத்தார் என்று கருதலாம். உலக வாழ்வில் பற்றுக்களை நீத்து, ஒரு பற்றற்றான் தமக்கு உணர்த்தியதாகக் கருதும் வழியில் பற்றுக்கொண்டு தமக்குப் பற்றற்றவர்களாக அமைந்தோரை ஞானியர், யோகியர், முனிவர், துறவோர், மகான், மாமனிதர் என்று அழைக்கிறோம்.

இயல்பான வாழ்விலிருந்து நீங்கியவர்களாக அமையும் சான்றோர்களை எண்ணிப்பார்த்து, அவர்கள் வாழ்ந்த நெறிகளையும், வழங்கிய அறங்களையும், தோய்ந்துரைத்த துணிபுகளையும் எளிய தமிழில் இனிய நடையில் எழுதிய இந்நூலுக்கு ‘அற்புத மகான்கள்‘ என்று நூலாசிரியர் தேனி சுப்பிரமணியன் பெயரிட்டுள்ளார்.

நண்பர் தேனி.மு.சுப்பிரமணியன் என்ற பெயரை நடைமுறைப் போக்கில் பிறர் அழைத்தவாறே தம் பெயரைச் சுப்பிரமணி என்று சுருக்கியுள்ளதாகத் தெரிகிறது. பரந்த நூலறிவும், பரிவோடு பழகும் உலகியலும் கொண்ட எழுத்துச் செம்மல் சுப்பிரமணிக்குக் கணினி கலைத்திறமையும் சிறப்பாக வாய்த்திருக்கிறது. விரல் நோகத் தாளில் எழுதிய காலம் கழிந்து, தளர்ச்சியில்லாமல் என் கட்டுரைகளை என்னால் எழுத முடிந்தது என்று ஒருமுறை திரு. சுஜாதா குறிப்பிட்டார். அது போல விரைந்தெழுதும் ஆற்றல் ஆசிரியருக்கு வாய்த்திருக்கிறது.

வாழ்க்கையின் இயல்பை விலக்கி வாழும் முறை ஒருவகையான மன மருட்சிக்கு இடம் தரும் நோய்க் குறியாகும். மருண்டவன் கண்ணுக்கு மலர்க்கொடிகள்கூட மலைப் பாம்பாகத் தெரியும். எதையும் நம்பும் மக்களுக்கோ நம்புவதே ஒரு நோயாகிவிடும். அவ்வாறான நம்பிக்கை மக்களின் மனத்தை நிலைகுலையச் செய்துவிடும். இந்நிலையில் எளிய மக்களையும் மகளிரையும் ஏமாற்றும் துறவியர் தொடர்ந்து உலகில் மருட்டிக்கொண்டிருப்பார்கள். நல்லதைக் காணும் மனம் உடையோர் சிலர், துறவு பூண்ட தூயவர்களைத் தெளிந்து போற்றி மகிழ்வார்கள் என்பதற்கு இந்நூல் நல்ல சான்றாகும்.

பேரறிவுப் பிழம்பினராகிய புத்தர், மகாவீரர், ஆதிசங்கரர், இராமாநுசர் ஆகிய பெருமக்களின் வாழ்வியலோடு அவர்தம் பொருண்மொழிகளையும் கற்றுத்தெளிந்த நுண்ணறிவும், தேர்ச்சியும் கொண்டு ஆசிரியர் கட்டுரைகளை வரைந்திருப்பது சிறப்புக்குரியதாகும். சான்றாகப் புத்தர் பெருமானைப்பற்றி விரிவாக எழுதி வழங்கும் இந் நூலாசிரியர் தொடக்கத்தில் இன்றைய உலகில் வாழும் மனிதர்கள் பலரும் தங்களுக்கு மட்டும் துன்பங்கள் வந்து கொண்டே இருக்கின்றன என்று அலுத்துக் கொள்கின்றனர். அவர்களுக்கு மட்டுமா இந்த வாழ்க்கை துன்பமானது? அதுதான் இல்லை. மனித வாழ்க்கை இயல்பாகவே துயருடையது. இத்துயரின் காரணம் மனிதனின் தன்னலமும் ஆசையும்தான். தனி மனிதன் தன்னலத்தையும் ஆசையையும் அடக்கி விடலாம். எல்லா ஆசைகளும் ஆவல்களும் ஒழிந்த இறுதி நிலை “நிர்வாணம்” எனப்படும். தன்னலம், ஆசை ஆகியவற்றிலிருந்து தப்பிக்கும் “எட்டு வகைப் பாதை”கள் உள்ளன. அவைகளைக் கடைப்பிடித்தாலே வாழ்க்கையின் உண்மையை உணர முடியும் என்று மனித வாழ்க்கைக்கு ஒரு புதிய பாதையைக் காட்டியவர் கௌதம புத்தர் என்று எழுதிய முகப்பு ஆசிரியரின் கலைபயின்ற. தெளிவுக்கும் கட்டுரை எழுதும் கலைக்கும் சான்றாகும்.

தவம் செய்வார், தம் கருமம் செய்வார் என்னும் திருக்குறள் நெறி இப்பெருமக்களிடத்துப் பொங்கிப் பொலிவதைப் பயில்வோர் பாராட்டுவது திண்ணம். பேரறிவாளர்களாகிய ஞானியர்கள் எனப் பன்னிருவரைப் பற்றி நுண்ணிய கருத்துக்கள் விளங்கிடக் கட்டுரைகள் அமைந்துள்ளன. மேனிலைப்பள்ளி மாணவரும் பயிலத்தக்கப் பாட நூலாக இம்மாமணிமாலை திகழ்கிறது. ஞானியர்ப் பெருமைகளை ஆர்வத்தோடு தொகுத்து வரைந்த தமிழ்த் தேனீயாக விளங்கும் தேனி.மு.சுப்பிரமணியன் அவர்களைப் பாராட்டி மகிழ்கிறேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *