POST: 2013-09-26T10:17:16+05:30

26.2.2013

தமிழுணர்வின் தனிச்சிகரம்

முனைவர் ந.அருள்

பேராசிரியர் மறைமலை இலக்குவனார் நான் மாநிலக் கல்லூரியில் பயின்றபோது எனக்குப் பெரும் பேறாக வாய்த்த பேராசிரியர் திலகமாவார். பகுத்தறிவுச் சிந்தனையும் பரந்த நூலறிவும் சிறந்த ஆங்கில நுணுக்கமும் ஒரு சேரப்பெற்ற எங்கள் பேராசிரியர் தன் நெஞ்சில் பட்டதை எடுத்துரைக்கும் நேர்மை வாய்ந்தவர். நடைமுறை வாழ்வில் நாட்டிலும், அரசிலும், கலை, மொழி, பண்பாட்டுத் துறைகளிலும் படர்கின்ற நலிவுகளைத் தாங்கமுடியாத அவலத்தை மனத்தில் தேக்கிக்கொண்டு அஞ்சாமல் தன் சிந்தனைகளை வகுப்பறைகளிலும் எங்களுக்கு வழங்கினார். எந்தப் பரிவும் எவர் சொல்லுமில்லாமல் தகுதி, திறமை என்ற இரண்டு சிறகுகளால் கடல்கடந்து பரந்து சென்று அமெரிக்க, மலேசிய, சிங்கப்பூர் நாடுகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பாடங்களையும் வகுப்புக்களையும் வரையறுத்து நடத்தியவர்

எந்தையார் பேராசிரியர் இலக்குவனாரின் பெருமிதச் செம்மாப்பினை பலமுறை வியந்து பாராட்டியிருக்கிறார். எள்ளளவும் அந்த இயல்பில் மாற்றம் இல்லாமல் துணிவே துணையாக தம் புலமை வாழ்வை நடத்துகிறார். காலப் புதுமைக்கேற்ற வகையில் கணினியில் பேரார்வம் காட்டி நாள் தவறாமல் ஆங்கிலத்திலும், தமிழிலும் தம் கருத்துக்களை உலகத் தமிழர்களுக்கு உணர்த்தும் தகுதியைத் தனித்திறமையை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமிழில் கலைச்சொற்கள், மொழியாக்கங்கள், வரலாற்று நுணுக்கங்கள் என அனைத்துத் துறைகளிலும், ஆங்கிலத்தில் அவ்வப்போது ஒளிவுமறைவாக எழுதப்பெறும் வஞ்சகப் பொருண்மைகள் தவிடுபொடியாகவும், தடைகளுக்கேற்ற விடைகளை எழுதியும் தலைநிமிர்ந்து நிற்கிறார். அண்ணல் திருவள்ளுவரும் அதே நெறியில் தமிழ்ச் சொல்லாக்கத்தில் தன்னை இணைத்திருக்கிறார். பேராசிரியர் மறைமலை இலக்குவனார் தம் நடையும் ஒழுங்கும், தெளிவும் துணிவும், அவர்பால் பயின்ற மாணவர்களுக்கு உண்ணும் சோறும் பருகும் நீருமாக ஊட்டியதை எண்ணி மகிழ்கிறேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *