முனைவர். ந. அருள்
இயக்குநர், மொழிபெயர்ப்பு
கவிதைச் சாரல்!
அருமந்த நண்பர் “கணியரசு” ஆண்டோ பீட்டர், நீதி.கபீரியேல் நாதன் ஆகியோர் மூலம் கணித்தமிழ்ச் சங்கத்தின் வழியாக எனக்கு அறிமுகமானவர் திருமதி ச. ஜாஸ்லின் பிரிசில்டா. மௌன வெளி எனும் பெயரில் கவிதை நூல் இயற்றிய பெருமை பேராசிரியரைச் சாரும்.
புகழ்வாய்ந்த கல்லூரிப் பேராசிரியராக மிளிரும் ஜாஸ்லின் பிரிசில்டா அவர்களின் கற்பனை உணர்வின் மாட்சியைப் புலப்படுத்தும் ஒளித்துளிகளாக கவிதைகளை வரைந்துள்ளார். செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போலக் கவிதைக் கலையும் கைப்பழக்கம் என்றால் பொருந்தும். கவிதைகளைத் தொடர்ந்து எழுத எழுத கற்பனையும் கலையழகும் தாமாகப் பொலியும். கணியரசு ஆண்டோ பீட்டரின் எதிர்பாராத மறைவை எண்ணி உருகிய ஓவியமாக கணியரசுக்குக் கவிதை அஞ்சலி எழுதியதை மடலாடற் குழுவில் பலர் நெகிழ்ந்து பாராட்டினர்.
இறப்பு பலருக்கு இழப்பாகப் போவதால் அந்த இறப்பே இல்லாமல் போக வேண்டும் என்று சாடத்தொடங்கிச் “சாவே உன்னைச் சபிக்கிறேன்…!” என்று அழுகையோடு “இலட்சியக் கனவுகளின் விதையாகிப் போனவன் மீண்டும் எழுவான்” என்று ஒரு நம்பிக்கை விளக்கை ஏற்றத் துணிந்தார். கணியரசின் இழப்பிற்கு அவர் செலுத்திய கவிதாஞ்சலி நண்பர்கள் அனைவருக்கும் ஆறுதலாக அமைந்தது.
நமது நடைமுறை வாழ்வில் பேசும்போது எழுதும்போது அமையும் சொற்களை நம் சூழலுக்குத் தக்கவாறு முழுமையாகப் புரிந்து கொள்வதில்லை. ஆனால் இலக்கிய வடிவம் பெறும்போதும் படிக்கும்போதும் எழுதும்போதும் ஒவ்வொரு சொல் தொடர்களுக்கும் முழுப்பொருளையும் விளங்கிக்கொள்ளும் வண்ணம் நம் மனத்தைக் கவிதைகள் விரிவாக்குகின்றன என்ற கவியரசர் டி.எஸ்.எலியட்டின் தொடர்களை இங்கே நினைவு கூர்கிறேன்.
Except for the point, the still point,
There would be no dance, and there is only the dance
We had the experience, but missed the meaning
And approach to the meaning restores the experience
In a different form, beyond any meaning
We can assign to happiness.
கவிதைகள் கற்பனைக் கோலங்களாகப் படிப்பவர்களுக்கு மகிழ்ச்சியும் எழுச்சியும் தரக்கூடிய வகையில் அமைந்த நிலையைப் பாராட்டிப் போற்றுகிறேன். சோதரியார் பேராசிரியர் ஜாஸ்லின் பிரிசில்டா எழுதிய “மௌனவெளி” எனும் கவிதை நூல் கலையழகு ஒளிர அமைந்துள்ளது. புலமை நலமும் அறிவியல் வளமும் பொலியப் பேராசிரியர் கணிப்பொறிச் சிந்தனையிலும் தமது கருத்தோட்டங்களை வரைந்து வருகிறார்.
காலத்தில் கனிந்த கவிதையாக மலர்ந்த எழுத்தோவியங்களைப் பேராசிரியர் தொடர்ந்து வழங்கித் தமிழ் உலகத்திற்குப் பெருமை சேர்ப்பாராக !
வாழ்க தமிழ் !
வளர்க கவிதை வளம் !

Add a Comment