POST: 2013-09-21T12:19:22+05:30

அதிசயமே அதிசயம் !
டாக்டர் ந.அருள்
மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர்

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் என்று தொடங்கிய கவிப்பேரரசரின் தொடர் எவர் மனத்தையும் ஈர்ப்பதாகும். பூவுக்குள் ஒளிந்திராமல் புவிமேல் படர்ந்திருக்கும் விந்தைக் கோபுரங்களும் விரிந்து பரந்த மாடங்களும் உலகின் வியக்கத்தக்க எழிலமைப்புக்களாகப் போற்றப்படுகின்றன. பல்வேறு கலைக்களஞ்சியங்களிலும் வலைத்தளங்களிலும் இடம்பெற்றுள்ள செய்திகளையெல்லாம் இனித்த தமிழில் எழுதிக்காட்டும் புலமையும் தகுதியும் தோழர் தேனி. ந.சுப்பிரமணியம் அவர்களுக்குக் கைவந்த கலையாகும்.

செயற்கரிய செய்வர் பெரியர் என்பது திருக்குறள். மாந்தரினம், தான் பழகியறிந்த கட்டிடக் கலையோடு கற்பனை வளத்தைச் சேர்த்து, கவினார்ந்த வடிவங்களையும், கூடங்களையும் வெவ்வேறு நாடுகளில் உருவாக்கி உள்ளது. இன்றும்கூடத் தஞ்சைப் பெரிய கோயில் நம் சிந்தையைக் கவரும் சீரிய படைப்பாக நிற்கிறது. கல்லெல்லாம் கதை சொல்லும் காட்சிகளை இன்றும் நம் தமிழகத்தின் பெருமிதமாகப் பாராட்டுகிறோம். நான் என் துணைவியாரோடு பிரான்சு, செருமனி, இலண்டன், கிரேக்கம் முதலிய ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று வந்து, இந்தியத் தலைநகரத்திலும் சில அதிசயங்களை நேரில் கண்டு நெஞ்சைப் பறிகொடுத்தோம்.
காண்பதையும், கருதுவதையும் கற்பனைத் திரையில் ஆய்ந்து, எழுத்து வடிவத்தில் தேன்போலப் புனையும் திறம் தேனியாருக்கு அழகுற அமைந்திருக்கிறது. முதல்நிலை, இடைநிலை, புதுநிலை என்ற வகையில் முப்பதுக்கு மேற்பட்ட அதிசய அமைப்புக்களை ஓவியம்போல நம் கண்முன் நிறுத்துவதைப் பாராட்டுகிறேன். நாளை உருவாகும் அதிசயப் பட்டியலில் வேலூர்ப் பொற்கோயில், நாசாக் கட்டிடம், திசினி உலகம், தென்னாப்பிரிக்காவில் கட்டப்பெற்றிருக்கும் நிலைவெள்ளித் தகட்டால் வேயப்பெற்ற கண்ணன் கோயில், துபாயில் உருவாகிய அங்காடி அடுக்கு முதலியன இடம்பெறலாம். அறிவியற் புதுமைகளையும் ஆய்வுக்குரிய பொருண்மைகளையும் கொண்ட நூல்களைத்தான் தமிழுலகம் ஆர்வத்தோடு எதிர்நோக்குகிறது. நமக்குத் தெரியாதவைகளைத் தெரியவைப்பதுதான் நூலாசிரியர்களின் கடமையாகும். ஆசிரியர் என்ற சொல்லையே நூல் எழுதுவோருக்கும் அளிப்பதன் நோக்கம் இதுவேயாகும்.

கணிப்பொறி வல்லமையோடு கருத்துவளம் செறிந்த தகவல்களைத் தொகுத்து எழுதித் தமிழ்வளம் பெருக்கும் நண்பர் தேனி ந.சுப்பிரமணியம் அவர்கள் எழுத்துப்பணியில் தொடர்ந்து புகழ்பெற்றுப் பொலிவாராக !

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *