நினைவில் வாழும் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்களின் தாகங்கள் நூலின் முன்னுரை :
8.11.1973
டாக்டர் ஔவை நடராசன்
கற்பனை வீணைகளில் கதம்ப ராகங்கள்!
உவமைகளிலே புதுமை!
உருவகங்களிலே கவர்ச்சி!
வளர்ந்து வருகின்ற ஒரு வாலிப திலகத்திற்கு வாழ்த்துக் கூறுகின்ற வாய்ப்ப்பாகத்தான் இந்த அணிந்துரையை எழுத ஆரம்பிக்கின்றேன்
மின்னல் சரத்திற்கு மெருகேற்றுவதும்,வலம்புரியின் எழுத்து வாசலுக்கு வார்த்தைத் தோரணம் கட்டுவதும் ஒரே வகையான பணிதான்.கற்பனை வீணைகளில்பிறந்த கதம்ப ராகங்களைப் புது வண்ணப் பூக்களால் புனைந்து காட்டும் புதுமைத்தொழிலை இவரது கட்டுரைகள் அருமையாகச் செய்து கொண்டிருக்கின்றன.
உவமைகளிலே புதுமை! உருவகங்களிலே கவர்ச்சி! வார்த்தைகளிலே வெளிச்சம்!
அவைகளை வடிப்பதிலே ஒரு நளினம்! சித்திரப்பின்னல்! முதலிய எழுத்துக்கோலங்கள் இவருக்கே உரிய சொந்தப் படைப்பாகச் சுடர் விடுகின்றன .
வருங்காலம் தன் இரு கரங்களில் பூமாலையை ஏந்திக்கொண்டு இந்த வாலிபனை நோக்கி
வந்து கொண்டிருப்பதைப் பார்வைக்கூர்மை உடையவர்களால் பார்க்க முடிகின்றது.ஆரூடம் சொல்லவில்லை;அரும்பு பயிரைப் பார்க்கும்போதே அறுவடையின்
விளைவைப்பற்றி அறிந்து கொள்வது உழவனுக்கு உரிய வேலையாயிற்றே!
வலம்புரியின் எண்ணங்கள் வாழ்க! அவர் வளர்க்கும் இலக்கியக்கதிர்கள் செழித்துச்சிறப்படைக! அவருடைய விசிறியாகவும்,விமர்சகனாகவும் உள்ள என் விருப்ப வலைக்குள் விழுந்து கிடக்கும் வலம்புரி ஜானை வாழ்த்தி மகிழ்கிறேன்.

Add a Comment