சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இணைந்து நடத்திய தொல்காப்பியக் கோட்பாடுகளும் விதிகளும் பயிலரங்கம் 2009
டாக்டர் ஔவை நடராசனார் -6
தமிழ் உணர்வு மட்டுமில்லாமல், தமிழ்ப்படிக்கிறவர்கள் நினைத்தால் எதனையும் வெற்றிபெற முடியும்.
நாங்கள் ஹானர்ஸ் படித்தபோது, ஓராண்டு ஆங்கிலம் (முதலாண்டு). பிறகு இரண்டாண்டுகள் தமிழ், நாங்கள் ஆங்கிலம் படிக்கிறபோது எங்களோடு வந்து அமர்ந்தவர்கள் பொருளாதாரம் மற்றும் வேறுதுறைகளைப் படிக்கிறவர்கள் எல்லோரும், எங்களோடு இருப்பார்கள். அந்த முதலாண்டு முடிந்தபிறகு, ஆங்கிலத்தேர்வில் அதிகமாக வெற்றிபெறுபவர்கள் தமிழ்மாணவர்கள்தான். அது எப்படி என்று கேட்டால், எங்கள் பேராசிரியர் மு.வ. சொன்னார், ஒரு மொழியில் உண்மையான அன்பு உள்ளது என்றால் அவன் ஊரார் மொழியின் மீது காட்டுகின்ற பரிவும் அப்படியிருக்கும். வேறு துறைகளிலும் அப்படிப்பட்ட வல்லமையிருக்கும். எனவே, தமிழ்க்கல்வியோடு, வேறு பிற துறைக்கல்வியையும் ஒன்றாக இணைத்து, துணைவேந்தராக வந்த மூன்றாம் நாள் நீங்கள் எனக்குச் சொன்னீர்கள். அது எவ்வளவு மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழ்ப்படித்தவர்களுக்கு எந்தத் துறையும் வரும். எந்தத் தகுதியும் உண்டு. ஆனால், நாங்கள் சோர்வாகச் சொல்வது என்னவென்றால், வேறெந்த இடத்திலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசியில் தமிழ்தான் எங்களை ஏற்றுக்கொண்டது என்று நாம் சொல்லத் தொடங்கினால், அவர்கள் என்ன நினைப்பார்கள். பாவம் வேறு இடத்தில் இடம் கிடைக்காதவர்கள் இங்கே தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்றாகிவிடும். எனவே, தள்ளப்பட்டவர்களை, படுகுழியில் இருப்பவர்களைக் கைதூக்கி அழைப்பதற்கு நமக்குத் திருவாசகம் கிடைத்திருக்கிறார்.
செம்மொழி மத்திய நிறுவனம் ஆற்றி வருகிற செந்தமிழ்ப் பணியும், இன்று நீங்கள் செம்மொழி என்கிறீர்களே, இந்தச் செம்மொழி என்பதனுடைய பெயர் என்னவென்றால் செந்தமிழ் என்பதுதான். செவ்வியல் வழிதானே செந்தமிழ் அதுதான் செம்மொழி என்று ஆயிற்று. நம்முடைய மாநிலத்திற்குச் செந்தமிழ் நாடென்னும் போதினிலே என்று பாரதியர் பாடுகிறாரே, எங்கேயிருந்து கற்றுக்கொண்டார். தொல்காப்பியத்திலிருந்து.
‘செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்’
‘செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு’
எனவே, செம்மொழிக்கும் தொல்காப்பியத்திற்கும் சேர்ந்த தொடர்பு பல்லாண்டுகளாக ஊறிய தொடர்பு என்று சொல்லி இதற்கு ஏற்பாடு செய்த அனைவரையும் வாழ்த்துகிறேன்.
வணக்கம்.

Add a Comment