சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இணைந்து நடத்திய தொல்காப்பியக் கோட்பாடுகளும் விதிகளும் பயிலரங்கம் 2009
டாக்டர் ஔவை நடராசனார் -3
நான் பேராசிரியர் இராமசாமி அவர்களிடத்தில் ஒன்று கேட்பது, காலையிலிருந்து மாலைவரை ஒரு மாணவரோ, ஒரு குடும்பத்தலைவரோ பேசுகின்ற தொடர்களையெல்லாம் எழுதி, எத்தனைத் தொல்காப்பிய நூற்பாக்கள் உள்ளே அடங்கியிருக்கின்றன என்று கண்டறிவது. இலக்கணம் என்பது பேசும்போதும் நடைமுறையிலும் எண்ணத்திலும் எப்படி கரைந்திருக்கிறது என்பதுதான் தொல்காப்பியத்தின் சிறப்பு.
சிலபேர் சொல்வார்கள், காலத்திற்கேற்ப இலக்கணம் எழுதவேண்டுமென்று. காலத்திற்கேற்ப இலக்கண எழுத வேண்டாம். தொடக்கத்தில் அமைந்த நூற்பாக்களினுடைய கருத்துகள் விரிவுபடவும், காலத்திற்கேற்ப வளைந்து கொடுக்கவும், எண்ணங்களுக்கு இடந்தருவதும் அமைந்த திறம்தான் தொல்காப்பியத்தின் சிறப்பு.
‘கடிசொல் இல்லை காலத்துப்படினே’
‘சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்’
ஆண்டுதோறும் இலக்கணம் எழுதிக்கொண்டிருக்கமாட்டார்கள். Grammar என்று சொல்லுகின்ற கிரேக்கச்சொல்லுக்கு என்ன பொருள் என்றால், எழுத்துக்கலை என்பதுதான் பொருள். ஆனால் தமிழ் இலக்கணம் என்ன அமைக்கிறது என்றால் நாம் பேசுகிறோம், வாழ்கிறோம், சில எண்ணங்கள் நம்மனதில் பதிகின்றன. அதனை எடுத்து எழுதுகிறோம். எழுதுகிற நூலுக்கு அமைக்கின்ற ஒரு கட்டத்திற்குக் கற்கள். இந்தக் கற்களைப் பொருத்துவதற்குக் காரை பூச வேண்டும். காரை பூசுவதும், கற்களும் தான் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம். நாம் யாரும் கல்லாராய்ச்சி செய்யப்போவதில்லை. காரைகளின் ஆராய்ச்சியும் அல்ல. கட்டட அமைப்பை ஒழுங்காக அமைப்பதற்குக் கற்கள் எப்படிப் பயன்படுகின்றன, இந்தக் கற்கள் எந்த நிலையில் பொருந்துகின்றன. தானாகவே எழுதுவதில்லை இலக்கணம். ஊரார் உலகோர் பேசுவதையெல்லாம் கேட்டு.
ஒன்று சொல்ல விரும்புகின்றேன். ஒரு திருக்குறளை எடுத்துக்கொள்வோம்,
பெறுமவற்றுள் யாம்அறிவ தில்லை அறிவு அறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.
பாருங்கள். இந்த உரை எழுதியவர் இலக்கணம் படித்தவர். இலக்கணம் படித்தார் என்ன நினைக்கிறார் இந்தக் குறளைப் பார்த்து, அறிவறிந்த மக்கள் யாரது? பிறக்கிற பிள்ளைகளைப் போல ஒரு சிறப்புடைய பிள்ளைகள் நமக்குப் பேறாக வாய்ப்பதில்லை. ‘அறிவறிந்த மக்கள்’ என்பதற்குப் பொருள் எழுதப்பார்க்கிறார். நாம் என்ன சொல்வோம்? ஆண் குழந்தை, பெண் குழந்தை அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. இரண்டும் ஒன்றுதானே என்று இப்போது நீங்கள் பேசலாம். பரிமேலழகருக்கு அப்படி கை வரவில்லை. ‘உயர்திணைப் பன்மை பொதுச்சொல்’ என்று ஒரு சொல் உள்ளது. உயர்திணைப் பன்மை பொதுச்சொல் என்று சொன்னால், ஆண்களா? பெண்களா? ஒன்று ஒழித்துச் சொல்ல வேண்டுமென்று இலக்கணம். பாருங்கள், எப்படி இந்த இலக்கணத்தை இந்த இலக்கியத்திலிருந்து எடுக்க வேண்டும். நீங்கள் மகிழ்ச்சியடையலாம். மகளிர் வருந்துவார்கள். அவர் என்ன சொல்கிறார், அறிவறிந்த மக்கள் என்பதால், ஆடவரும், மகளிரும் இருந்தாலும் ஒன்றொழிப் பொதுச்சொல் என்ற வகையில், இது ஆண் மக்களைக் குறித்தது. இப்படி எழுதலாமா? என்று கேட்டால், அவர் எவ்வளவு தெளிவானர் என்பதற்குச் சான்று,
ஒரு பெண்மணி மிகவும் வருத்தத்தோடு பேசுகிறார். நாங்கள் இருவரும் நள்ளிரவில் காண்கிறோம். ஆனால் இந்த ஊருக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. இந்த ஊரில் உள்ள மக்கள் எங்களைப்பற்றி பேசுகிறார்கள்.
ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.
ஊரார் பேசுகின்ற வம்பும், என்னுடைய தாயாருடைய வசவும் இந்தக் காதல் பயிரை நீராக வளர்க்கிறது. இப்போது யார் ஊரவர்? பரிமேலழகர் சொல்கிறார். உயர்திணைப் பன்மை பொதுச்சொல் ஒன்றை நீக்க வேண்டுமே, யார் இப்படி இந்த ஊர்க்கதைகளைப் பேசுவார்கள். அவர் நினைக்கிறார். ‘ஈண்டு ஆண் மக்களை ஒழித்துப் பெண் மக்களைக் குறித்தது’ இலக்கணம் எவ்வளவு ஈர்ப்பாக ஆக்குகிறார்கள் பாருங்கள்.

Add a Comment