POST: 2014-11-11T10:47:06+05:30

பேராசிரியர் வேங்கடராமன் வாழ்வும் தொண்டும்-3
பத்மஸ்ரீ ஒளவை நடராசன்

அறிஞர் பெருமக்களே!
நண்பர்களே

பேராசிரியர் வெங்கட்ராமன் அவர்கள் எவ்வளவு புலமை உடையவர் என்பதற்குச் சான்று வேண்டுமென்றால், சொல்லதிகாரத்து சேனாவரையத்தை ஒரு இனிக்கும் கற்கண்டாக அவர் எடுத்துச்சொல்வார் என்று நண்பர்கள் நூற்பாக்களை எடுத்துக்காட்டி அவர் பிரித்துக் கற்றுத்தருவதை இன்றும் சொல்கிறார்கள்.

நாண்மணிக்கடிகையில் ஒரு தொடர் உண்டு. மகன் உரைக்கும் தந்தையின் அறத்தை என்று சொல்வார்கள். ஆனால், அதையே மாற்றிச் சொல்வதென்றால், மகள் உரைக்கும் தந்தை நலத்தை என்று பேராசிரியர் விஜயலட்சுமிக்குச் சொல்லலாம். விஜயலட்சுமி அவர்கள் தம் நுண்மான் நுழைபுலம் பன்மான் சிறப்புற தந்தையினுடைய அடிவாராத்திலிருந்து தமிழ் கற்றுக்கொண்ட திறத்தை நான் வியந்து பாராட்டுகிறேன்.

அவர் வினவுகின்ற வினாவும், குறட்பாக்களுக்கு அவர் உரை காணுகின்ற திறமும் சங்க இலக்கியத்தில் தோய்ந்த மாட்சியும் விஜயலெட்சமி அவர்களுக்கு எந்தத்தேவையும் இல்லை. அவர் தன்னுடைய கணவர் பணியாற்றிய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலேயே பெரிய பதவியில் பெற்றவர். வாய்ப்பு மட்டும் கிடைத்திருந்தால், விஜயலெட்சுமி ஒரு கல்லூரி முதல்வராக, ஏன் பல்கலைக்கழகத் துணைவேந்தராக வருகின்றன தகுதியுடையவர்.

மகளை வளர்ப்பது என்பது அந்த நாளிலேயெல்லாம், நெருப்பைக் கட்டிக்கொண்டிருக்கின்ற பொறுப்பு என்று சொல்லி, தந்தையர்களெல்லாம் கவலைப்படுவார்கள். ஆனால், வெங்கட்ராமன் அவர்கள் நான் பெற்ற செல்வங்கள் என்று இந்தப் பிள்ளைகளை மிகுந்த மகிழ்ச்சியோடு சொல்லியிருக்கிறார்கள். அவருடைய வாழ்வு எப்படி அமைந்தது என்பதை, நாம் படித்தால் நம்முடைய நெஞ்சம் நீர் மல்கி அழவைக்கிறது. அவர் எதிர்பாராவிதமாகத் தன்னுடைய கணவரை இழந்துவிட்டார் மூத்த மகளார் என்று அறிந்தபோது சொல்கிறார், தன் மக்கட் செல்வங்களையெல்லாம் அமரவைத்து, உங்களுக்கு நான் ஒன்றும் செல்வம் சேர்த்து வைக்கவில்லை. ஆனால் நான் சேர்த்துவைத்த செல்வத்தை நீங்கள் செலவழித்தால்கூட அது சேர்ந்துகொண்டே இருக்கும் அதுதான் கல்விச்செல்வம் என்று கற்றுத்தந்திருக்கிறார். அந்தக் கல்விச்செல்வத்தைப் பெற்றது மட்டுமில்லாமல், அந்த ஆறு குடும்பத்தைச் சார்ந்தவர்களிடத்தில் என் மூத்த மகளை நான் உங்களுக்குச் செல்வமாக விட்டுச்செல்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இதையெல்லாம் எண்ணிப்பார்க்கும்போது அந்த நாளில், புலவர் கல்லூரியில் தமிழ் பயில்வது என்பது, அவ்வளவு எளிதில்லை. இப்போது முதுகலை படிப்பதுபோல அது ஒரு கலை என்ற அளவில் கல்வி இல்லை.

புலமை என்று சொன்னால், வெண்பா சொன்னால் வெண்பா எழுத வேண்டும். இலக்கணம் கேட்டால் குறிப்பு தரவேண்டும். இப்படி ஒரு புலமைச் செல்வம் முழுவதையுமே பெறவேண்டும் என்பதற்காக, கரந்தை கவியரசு, வேங்கடாசலம் பிள்ளை, உமாமகேஸ்வரனார், முதலியோரெல்லாம் வந்தபொழுது பேராசிரியர் வெங்கட்ராமன் அவர்களும் தமிழ்த்துறை பேராசிரியராக இருந்திருக்கிறார். நாம் தமிழ்க்கடல் என்று போற்றுகின்ற கோபாலையர் கூட அவரிடத்திலே பயின்றவர்தான் என்பதை எண்ணிப்பார்த்தால், இன்னும் பெருமிதமாக இருக்கிறது. ஒன்று சொல்லலாம், இந்த நூலையே நண்பர் குருமூர்த்தி அவர்கள், புலவர் வாழ்வு என்ற ஒரு நூல்போல் வெளியிட்டால், ஒரு கல்லூரிக்கோ, அல்லது மற்றவர்களுக்கோ, பாடநூலாக அமைக்கிற அளவிற்குப் பயனுள்ள நூலாக இருக்கும். இந்தக் கருத்துகளையெல்லாம் எண்ணிப்பார்க்கிறபொழுது, பேராசிரியர் வெங்கட்ராமன் அவர்கள், தன்னுடைய நிறைவாழ்வு வந்த நெருங்குகின்ற நேரத்தில், தானாகப்போய், அவர் டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூலகத்தில் சிறிது காலம் பணியாற்றியிருக்கிறார். அந்த நூலகத்தில் அவர் பணியில் சேர்வதற்கு முன்னால், நூலகத்தைப் பல்லாண்டுகாலமாகக் கட்டிக்காத்துவருகின்ற பெருமை பேராசிரியர் பசுபதி அவர்களைச் சாரும்.

உ.வே.சா. அவர்கள், குறுந்தொகை பதிப்பைப்போல ஒரு பதிப்பை, இனிக்காணமுடியாது. இன்று நாடெல்லாம் சங்க இலக்கியங்களின் செழுமையைப் பற்றிப் பேசுகிறோம் என்று சொன்னால், சங்க இலக்கியங்களை, நினைவு தெரிந்து சொல்வதென்றால் 17ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு யாரும் பேசாமலேயே இருந்தார்கள். ஏன் 7ஆம் நூற்றாண்டுக்குப்பிறகே சங்க இலக்கியங்களைப் பற்றிய ஒரு பெருமிதம் தெரியாமல் இருந்தது.

டாக்டர் ஐயர் அவர்கள், புறநானூற்றைப் பதிப்பித்த பிறகுதான் சங்கச் செல்வத்தினுடைய அருமையையே, பொங்கும் தமிழுக்கு இப்படிப்பட்ட பெருமிதமான செல்வம் இருக்கிறது என்பதை அறியமுடிந்தது. அந்த வகையிலே குறுந்தொகை பதிப்பில்தான், ஒரு ஆங்கிலப்பதிப்பைப் போல நூலில் அடங்கிய செய்திகள், நூலில் அடங்கிய விலங்குகள், பறவைகள், உரிப்பொருள் என்றெல்லாம் அழகாக ஒரு முன்னுரையை எழுதி குறுந்தொகையை வெளியிட்டார்கள்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *