நேர்காணல்-14.3.2011 -3
கேள்வி 1: வணக்கம். ஓலைச்சுவடியில் இன்னும் நிறைய எஞ்சியிருக்கின்றன, அவற்றைத் தேடிக் கண்டுபிடித்துத் தமிழின் தொன்மை குறித்து மேலும் அறிய முடியும் என்ற ஒரு நம்பிக்கை இன்னும் பலரிடம் இருக்கிறது. இதுகுறித்து உங்களின் எண்ணம் என்ன?
பதில் 3 :ஓலைச்சுவடிகளுக்குப் பெருமை இருப்பதாக நினைத்துக்கொண்டு, புதிய ஓலைகளை நறுக்கி வைத்துக்கொண்டு, அதை சாணத்தில் ஊறவைத்துப் பழைய சுவடிகளைப் போல் காட்டுகின்ற ஒரு பொய்ப்பணியைக் கூட தென்மாவட்டங்களில் செய்தார்கள் என்று அறிஞர் வையாபுரியாரே எழுதியதாக நினைவு. மேலும் நூற்றுக்குத் தொண்ணூறு நூல்கள் மருத்துவத்தைப்பற்றி இருக்கிறது.
மருத்துவம் என்பது கணத்திற்கு கணம் மாறுவதாகும். எனவே காலையில் உள்ள மருத்துவம் மாலையில் உதிர்ந்து போனால், நாம் வருந்த வேண்டியதில்லை. மேலும் அந்த நாளில் அவர்கள் வழங்கிய செடிகொடிகளின் பெயர்கள், மலர்களின் பெயர்கள் மருந்து அமைக்கின்ற பெயர்களையெல்லாம் விளங்கிக்கொள்வது எளிதாக இல்லை. பேர் சொல்லாத வேர் என்றால் எந்தவேர்? என்று யாராவது சொன்னால் கேட்க மாட்டார்களா? அல்லது இவர்களே பொருள் சொல்லி, இளவாழை என்று சொன்னால் குமரிப்பெண் இடுப்பு என்று ஒரு பாட்டெழுதி காட்டுவதா? சாமந்தி என்றுசொன்னால் அது செத்த குரங்கு என்று பொருள் செய்வதா? இப்படியெல்லாம் புனைகதைகள் பெருகிவிட்டன என்பதைத்தான் எண்ணிப்பார்க்க வேண்டும். சிலபேர் நினைக்கிறார்கள் 1000 முறை தேடினால் ஒரு அரை அளவிற்காவது பொன்கிடைக்காதா? என்று சொல்லி. நான் அந்தத் தொடரை அப்படி ஏற்கவில்லை. மண்ணில்போய் பொன் கிடைக்கும் என்று நினைப்பதை விட மலையைப் பிளந்தாளாவது பொன் கிடைக்கும் என்று சொன்னால் நல்ல முயற்சியாக இருக்கும். இதுதான் எனக்கு இன்றுவரை….. இரண்டு நூல்கள் வெளிவந்தன. அதையும் நீங்கள் இந்த நேரத்தில் நினைவு கூரவேண்டும். ஒன்று கூத்தநூல் என்றொரு நூல் வந்தது. அதைப் பழைய ஏட்டுச் சுவடியிலிருந்து பார்த்துப்பதித்த நூல் என்று அமளிதுமளியாயிற்று. ச.து.சு.யோகியார் எழுதிய நூல் என்று நினைக்கிறேன். பிறகு அது ஒரு பொய்நூல் என்று கண்டறியப்பட்டது.
நான் பணியில் இருந்த வரையில், ஐந்திரம் என்ற நூல் அச்சிட்டே தீர வேண்டும் என்று அறைகூவல் விட்டபடி வந்து ஒரு பத்துபதினைந்து இலட்சத்தைச் செலவு செய்து, தொல்காப்பியருக்கு முந்தயநூல் ஐந்திரம் என்று சொல்லி, வாய்திறந்தாலேயே வண்ணம் பாடுகின்ற புலவர் வாய்த்திருக்கிறார் என்று சொல்லி ஏராளமான செலவை, தாராளமாகச் செய்து, ஐந்திரத்தை வெளியிட்டு, பிறகு அவரை நிலையாக வைத்திருந்தார்கள். அரசே செய்கிறது என்பதனாலேயே அலிகள்கூட தங்களை அழகிகள் என்றுசொல்லிப் பாராட்டத் தொடங்கிவிட்டார்கள். அந்த வகையிலேதான் ஐந்திரம் வெளிவந்தபிறகு நான் நன்றி தெரிவிக்க வேண்டும். ஐராவதம் மகாதேவன் அறிஞர்கள் சிலர் இது பொய்க்கதை பொய்க்கதை என்றெழுதி ஐந்திரம் அல்ல இதை எழுதியவர் தந்திரம் என்று சொன்ன பிறகுதான் அரசியல் எந்திரம் எப்படிப் பாழாயிற்று என்று காணமுடிந்து அந்த நூல் அதோடு நின்றது. இதை நினைக்கிற போதெல்லாம் எனக்கு மருட்சி ஏற்படுகிறதே தவிர, இன்னும் எவ்வளவு ஆண்டுகளுக்குச் சொல்லப்போகிறீர்கள். அல்லது வந்த ஓலைச்சுவடிகளைப்பற்றி அந்த எழுத்துகளையெல்லாம் படித்தால் உடனடியாக அதன் எழுத்து வடிவத்தைக் கணிப்பொறியில் காட்டவல்ல, ஒரு நிரலியை நாங்கள் வகுத்திருக்கிறோம் என்று சொன்னால் அந்தக் கணிப்பொறியாளர்களை நான் கைகுலுக்கி வரவேற்பேன். இது ஒரு சிறப்பான முயற்சியாகும். இப்போதேகூட அந்த எழுத்துகளைத் தொடர்ந்து படிக்கிறவர்களால், அது இன்னும்கூட அது கிறுக்கலான எழுத்துகளாகத்தான் இருக்கிறதே என்கிற அவலம். நான் இந்தக் கருத்தைச் சொல்வதற்கு இன்னுமொரு ஆழ்ந்த காரணம் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நான் பணியில் இருந்த நேரத்தில், நோயில் தளர்ந்து கொண்டிருக்கிறார் என்று ஒரு பெருந்தகையை நான்றாகத் தெரிந்தவர்கள் வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் பட்டுத்துணியில் ஓலைச்சுவடிகளைச் சுருட்டிவைத்து, உங்கள் தலைமுறையைப் பற்றியும் உங்கள் குலமுறையை எழுதிக்காட்டுகின்ற ஏடு என்றும், இந்தப் பாடல்கள் உங்கள் வாழ்வை வளர்க்கவல்ல ஆற்றல் உடையதும் என்றும் சொல்லி, ஒவ்வொரு ஏடும், 1000 ஆண்டு பழமையுடையது, 300 ஆண்டு பழமையுடையது என்று சொன்னபோது அப்படிப்பட்ட ஒரு ஆர்வம் யாருக்கும் இருக்காது என்றதனால், என்னிடத்திலே குறித்து இது 1000 ஆண்டு என்கிறார்களே, என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டபோது, இல்லை இது பொய் என்று சொன்னபோது கூட அவர் முகம் சுழித்தார். பிறகுதான் அது பொய் என்பதும் தெரிந்தது. இப்படிப்பட்ட சில தழும்பு என்று சொல்வதா? இப்படிப்பட்ட அவலத்தினால்தான் இன்னுங்கூட, இந்த ஓலைச்சுவடிகள் என்று சொல்வதைவிட இந்த நூற்றைம்பது ஆண்டுகளுக்குள் ஏறத்தாழ பழைய நூல்கள் அனைத்தும் அச்சு வடிவு கொண்டுள்ளன என்றே மனநிறைவு கொள்ளலாம் என்பது என் கருத்து.

Add a Comment