POST: 2014-10-03T12:57:04+05:30

பொருட்செல்வம் வாணிகத்தில் வளர்வது;அருட்செல்வம் வாழ்வியலில் ஓங்குவது! பொருளுடையார் அருளுடையார் ஆவதில்லை.இரு வேறு திரு இணைந்த பெருமித உரு தான் அருட்செல்வர் பொள்ளாச்சி ந மகாலிங்கம் அவர்கள்.காந்தியடிகள் ஒரு கண்,வள்ளலார் மற்றொரு கண் என்று வாழ்ந்த பெருந்தகை.அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாள் அன்றே மாலை ஆறு மணியளவில் வரவேற்புரை ஆற்றுவதற்கு நலிந்த நிலையிலும் வந்து அமர்ந்த ஒப்பற்ற சீலர் இருக்கையில் அமர்ந்தபடியே உயிர் நீத்தார்.தமிழகம் ஒரு பொது நலப் பொன் உருவத்தை இனி காணவியலாது.

திருவருட்பாவிற்கு உரைவேந்தர் ஔவை சு துரைசாமி அவர்களைக்கொண்டு ஆறு ஆண்டுகள் தன் பொள்ளாச்சி வளமனையில் தங்கச்செய்து திருவருட்பாவிற்கு விரிவுரை எழுத துணையாக இருந்து வெளியிட்டார்.உரையெழுதுவதோடு என் வாழ்வு நிறைவெய்தும் என்று ஔவை சு துரைசாமி சொன்னார்.

பண்பால்,பரிவால்,நண்பால்,நாகரிகத்தால் நாடு புகழ்ந்த அண்ணல் காந்தியடிகளையும்,வள்ளலாரையும் ஒருங்கிணைத்த மகா லிங்கம் என்ற பெயர் யாருக்கு அமையும்.

அறுபது ஆண்டுகளாக அருட்செல்வரோடு எந்தையார் நெருங்கித்தொண்டு செய்து வந்தார்.எந்தையார் வாழ்வில்,அரசில் பெற்ற பதவிகள்,உயர்வுகள் அனைத்துப்பொறுப்புகளுக்கும் ஊற்றுக்கண்ணாக இருந்தது இராமலிங்கர் பணிமன்ற செயலாளர் பொறுப்பு.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *