அண்மையில் இந்தியாவில் பல நகரங்களில் நடைபெற்ற அவல நிகழ்வுகள்:( Radio 4EB – 98.1 FM – 13th Jan 2013)
—————————————————————————————————————
அகிலத்தில் பலநாடுகளின் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் நியூயார்க் செய்தித்தாளில், வெளியிடப்பட்ட செய்தியொன்றினை எமக்கு வழங்கவிருக்கிறார், சென்னையிலிருந்து மதிப்புக்குரிய முனைவர் ஔவை நடராசன் அவர்கள்.
நியூயார்க் டைம்ஸ் என்ற இதழ் அது நியூயார்க் என்ற பெயர் கொண்டிருப்பதற்காக நாம் பாராட்டிக் கொண்டிருக்கவில்லை. உலகத்தின் நடுவர்களைப்பற்றி ஊன்றிப்பார்த்து, உயர்வான கட்டுரைகளை வெளியிடுகிறார்களே என்பதற்காகத்தான் நியூயார்க் டைம்ஸில் வெளிவந்த செய்தி இது என்று நாம் பெருமையாகச் சொல்கிறோம். அப்படியொரு செய்தியை நான் இன்று படித்தேன்.
இந்தியாவில் நகரங்கள் இருக்கின்றனவா? என்ற வினாக்குறியோடு கண்ட கட்டுரை தொடங்கியிருக்கிறது. இந்தியாவை எவ்வளவு பெரிய நாடு என்று சொல்வதை விட அது ஒரு பெரிய நாட்டுப்புறத்து வாழ்க்கை இயல்பைக் கொண்டதாக இருக்கிறதோ என்ற ஐயம் தான் ஏற்படுகிறது. நாட்டுப்புறம் என்று நாம் சொல்வதைக் கிராமம் என்று நாம் எல்லோரும் சொல்லி பழகியிருக்கிறோம். நாட்டுப்புறத்தில் என்ன குறை என்று சொன்னால், நாட்டுப்புறம்தான் எங்களுக்கெல்லாம் உயிர். ஏராளமான சிற்றூர்களைக் கொண்ட நாடு இது. சிற்றூர்களில் வாழ்கிற ஒரு தன்னிறைவுதான் எனக்குப் பிடித்தமானது. இந்தியாவினுடைய உயிர் நாடியே கிராமத்தில்தான் அடங்கியிருக்கிறது என்றெல்லாம் காந்தியடிகள் சொன்னது ஓரளவு உண்மைதான். கிராமத்தின் இயல்பு என்னவென்றால் தன்னிறைவு ஒன்று. பிறரைக் கலந்து பழகாத போக்கு, தன் குழுவை மட்டும் வளர்த்துக் கொள்ளுகின்ற ஒரு இயல்பு. ஓரளவுக்குத் துப்புரவு களம் குறைவாக இருப்பது. பரந்த மனம் என்பது இல்லாமல், தான், தன்னுடைய சாதி, தன்னுடைய உறவினர், தன்னுடைய குலம் என்று தன்னை அடக்கிக்கொள்ளுவது, இந்த இயல்புகளெல்லாம் பரவலாக நாட்டுப்புறத்தில் தான் காணப்படும். அதனால்தான் இவன் என்ன பாமரனைப் போல, நாட்டுப்புறத்தானைப் போல நடந்து கொள்கிறானே, என்று சொன்னால் பிறரைப் பொறுத்துக்கொள்ள முடியாதவன், பிற காட்சிகளைச் சகித்துக்கொள்ள முடியாதவன், ஆடவர் பெண்டிர் என்ற வேறுபாட்டைப் பெரிதாக நினைக்கிறவன், பெண்களை எந்த நிலையிலும் ஆண்களுக்குத் தாழ்வானவர்கள் என்று நினைக்கிற ஒரு பழமையான போக்கு இவைகளெல்லாம் நாட்டுப்புறத்து மக்களிடத்திலே இன்றும் காணலாம்.
ஆனால் அண்மையில் இந்திய நாட்டு நகரத்தில் நடந்த சில நிகழ்ச்சிகளைப் பற்றி, நாம் செய்தித்தாள்களில் படிக்கும்போது, நம்முடைய மனம் நடுங்குகின்றது. ஏனென்றால் நகரம் என்று பெயர்வைத்துக்கொண்டு, பெரிய கட்டடங்களையோ, வேகமாக ஓடுகின்ற ஊர்திகளையோ, அல்லது நாகரிகமான வசதிகளையோ, சிற்றுண்டிச் சாலைகளையோ பெரிதாகக் கட்டியிருப்பதனால் நகரங்கள் என்று ஆகாது. நாகரிகமான மனம் உடையவர்களைத்தான் நகரமக்கள் என்றே நாம் அழைக்க வேண்டும்.
நாகரிகம் என்றால் என்ன என்று சொன்னால் பிறருக்காக, இரக்கப்படுவது, பிறர் செயல்களைக் கண்டு ஒடுக்கத்தைக் (ஒழுக்கத்தைக்) காண்பது, ஆடவர் பெண்டிர் என்ற வேறுபாடுகளை நீக்கிக்கொண்டு, இரண்டுபேரும் ஒத்த நிலையினர் ஒத்த மனம் உடையவர் என்று மதித்துப் போற்றுவது, என்ற இயல்புகளெல்லாம் இந்த நகரத்தில் வாழ்கின்ற மக்களிடத்தில் காணோமே? என்று பார்த்தால் இந்தியாவில் நகரங்கள் இல்லை. வேண்டுமென்றால் தமிழில் சொன்னால், நாட்டுப்புற நரகங்கள் தான் அங்கே நகரங்கள் என்ற போலிப்பெயரைச் சூட்டிக்கொண்டு இருக்கின்றன என்று மனம் வருந்திக் குறிப்பிட வேண்டும்.
.

Add a Comment