சட்டத்தமிழ் அகராதி (ஆங்கிலம்-தமிழ்) நூலின் அணிந்துரை :முனைவர் ஔவை நடராசன்,
துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம்,தஞ்சாவூர்(30.08.1994)
தமிழ்ப்பல்கலைக்கழகம் தொடங்கிய நாளில் மொழிபெயர்ப்புத்துறையின் பணிகளுள் முதன்மையானதாக சட்டத்தமிழ் அகராதி உருவாயிற்று.சட்டத்தமிழ் அகராதியை
நூலுருவில் வெளிக்கொணர்வதில் தமிழ்ப்பல்கலைக்கழக அச்சகம் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.வரிநிழலச்சுப் பொறியில் இந்நூலை அச்சுக்கோர்த்து முடிப்பதற்குள் பொறி பழுதாகிச் செப்பம் செய்யவியலாத நிலை நேர்ந்தது.எனினும் தட்டச்சு செய்த பகுதிகளை சென்னை சென்று எடுவரல்
பெற்றுப்பின்னர் திருத்தங்களை ஒளிக்கதிர் அச்சுப்பொறியில் செய்து
ஒட்டி,பின்னர் மறுதோன்றி அச்சில் கொண்டுவரப்பட்டது.எனவே,இந்நூலில் மூன்று
வகை அச்செளுத்துக்களைக் காணலாம்.அச்சேறிய தாள்கள் நீண்ட நாட்களாகியதால் பழுப்பேறி,எழுத்துக்கள் மறையும் நிலையும் ஏற்பட்டது.எனவே,அவற்றிலிருந்து ஒளிப்படம் எடுத்து,தகடுகளை உருவாக்கி அச்சேற்றுவது என்பது பெரிய முயற்சியாக இருந்தது.எனினும்,இந்நூலின் அருமை கருதி எவ்வாறேனும் இதனை வெளிக்கொணர வேண்டும் என்ற கருத்தில் செய்த முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளன.
இந்நூலில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சட்டத்தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளன.சட்டத்துறையில் பயனாகும் ஆங்கிலச்சொற்கள் பலவும் இலத்தீன்,கிரேக்கம் ஆகிய மொழிகளின் சொற்களாகும்.எனவே,இவற்றைத் தமிழாக்கம்
செய்வதில் எவ்வளவு இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதைத்தமிழறிஞர்கள் அறிவர்.சட்டப்பேரறிஞர் திரு.மா.சண்முகசுப்பிரமணியன் அவர்கள்
தமிழக அரசின் சட்டத்துறைச்செயலாளராகப் பணியாற்றியவர்.பல்லாண்டுகள் பழகிய கேண்மை பூண்ட அறிஞர்கள் மா.ச.அவர்கள் தாம் கற்ற சட்ட நூற் செறிவை
அழகிய கட்டுரைகளாகவும் ஆய்வு நூல்களாகவும் எழுதியபோதே யான் நன்கறிவேன்.அவருக்குப் பிறகு சென்னை ஒய்.எம்.சி.ஏ.பட்டிமண்டபத்தலைவர் பொறுப்பை நண்பரும் பொறியாளருமாகிய திரு.பக்தவத்சலம் வழியாக எனக்கு
அவர்கள் வழங்கியதையும் எண்ணிப்பார்க்கிறேன்.ஆசிரியரின் சட்ட
அறிவும்,தமிழறிவும் இந்நூலில் மணங்கொண்டு நம்மை மகிழ்விக்கின்றன.
சட்டத்துறையிலுள்ளோருக்கு இந்நூல பெரிதும் பயனுடையதாகும்.எங்கும் தமிழ்,எதிலும் தமிழ்!என்றும் தமிழ் என்று தமிழக அரசு துறைதொறும் தமிழை வளர்த்துவரும் இந்நாளில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் சார்பில் இந்நூலைத்
தமிழ்ச்சமுதாயத்திற்கு வழங்குகிறோம்.சட்டத்துறையில் மேலும் புதிய நூல்கள் உருவாவதற்கு இவ்வகராதி அடிப்படையாய் அமையும்.ஏனெனில் இந்நூலில் இடம்பெற்ற கலைச்சொற்களைக்கொண்டு சட்டத்தமிழில் பலநூல்களை உருவாக்குவது எளிதாகும்.சட்டம் பயிலும் மாணவர்கள் சட்டங்களை எளிதில் புரிந்துகொள்ள இவ்வகராதி வகைசெய்யும்.இந்நூலின் சிறப்புகளை எடுத்துரைக்க இதனை
உருவாக்கிய அறிஞர் திரு .மா.சண்முகசுப்பிரமணியன்.அவர்கள் இன்று இல்லை.தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் அப்பெருமகனார் ஆற்றிய பணி என்றும் நிலைக்கத்தக்கதாகும்.ஆசிரியர் எழுதிய சட்ட இயல் நூல் தமிழகத்தின் நல்வரவேற்பைப் பெற்று இருபதிப்புகளைக்கண்டது.இப்போது வெளியாகும்
சட்டத்தமிழ் அகராதி ஆசிரியரின் அரும்புகழை எடுத்தியம்பும்
மாண்புடையதாகும்.தமிழ்ச்சமுதாயம் இந்நூலை நன்கு பயன்கொள்ள வேண்டுகிறேன்.

Add a Comment