உண்மை காண ஊக்கமளிப்போம்
ஔவை நடராசன்-9.4.2009
கட்டடக் கலையழகியல் துறையில் ஆற்றலும் ஆர்வமும் நிரம்பிய நண்பர் அருங்கலைச்செம்மல் மு.நடராசன் அவர்களை நான் பல்லாண்டுகளாக அறிவேன்.புதியது புனையும் பொறியியல் திறன் வாய்ந்த நண்பர் நடராசன் பழநியைத் தம் பழம்பதியாய்க் கொண்டு வாழ்பவர்.
ஆவிநன்குடி அசைதலும் உரியன என்று,திருமுருகாற்றுப்படையில் இடம்பெற்ற நிலையிலும்,
வையாவிக் கோப்பெரும்பேகன் வாழ்ந்த பகுதியே பின்னர் வையாவிக்குளம் என வழங்குவதாகும் ஆவியர்குடியை நினைவூட்டும் ஆய்க்குடி என்ற சிற்றூரும் இன்றும் இருப்பதாலும் பொதுனியாகிய பழனியின் பழம்பெருமையை உணரலாம்.கல்லைக்
காணுமிடமெல்லாம் கடவுள் வழிபாட்டுக்குரிய இடமாகக் கைதொழுது போற்றும் கோட்பாடு தமிழர் மாட்டுப்பரவியிருந்தது.இந்நிலையில் பழநியில் வாழ்ந்து
வளர்ந்து கல்லையும் மண்ணையும் தீரத்தெளிந்த திரு மு நடராசன் தமிழ் எழுத்து வரிவடிவங்களின் பிறப்பிற்கும் மாந்தர் வாழ்விடத்துக்கும் உடலமைவுக்கும் உறவு காணும் தன்னுள்ளுணர்ந்த நம்பிக்கை சார்ந்த முடிவுகளைப் படங்களோடு வரைந்து,தொல்பழந்தமிழின் வேர்களாகத் தன் முடிவுகளைக் கருதலாம் எனச் சேனெடுந்தூரம் தன் சிந்தையைச் செலுத்தித் தன்
எண்ணங்களை ஆயவரங்கத்தின் முன் படைக்கும் முயற்சிக்கு ஊக்கம் தந்து உண்மை கண்டறியத் தமிழுலகம் முன்வரவேண்டும் என்பது என் அவா.

Add a Comment