POST: 2014-07-24T20:43:09+05:30

பேராசிரியர் மு.வ. அவர்கள், ஒரு கூட்டத்தில் பேசுகிறபொழுது மிக அழககாகச் சொன்னார்கள்:
“நடுநிலைமை என்பது இலக்கிய ஆராய்ச்சியில் இருப்பது மிகவும் அரிது. இலக்கிய ஆய்வாளர்கள் தங்கள் கருத்துக்களை எண்ணுகிறபோது ஒருபக்கம் சார்ந்துதான் எழுதுவார்கள். அப்படி ஒருபக்கம் சார்வது என்பதுதான் இயல்பு. அப்படி ஒருபக்கமும் சாராமல் நடுநிலைமை என்று இதுவரை வந்த கருத்துக்களுக்கெல்லாம் முரணான கருத்துக்களைச் சொல்லுகின்ற ஆய்வுத்திறம் என்பது ஒருவகையில் புதுமையான ஆய்வுதான். இதை நண்பர் வையாபுரிப்பிள்ளை தொடங்கினார்” என்று சொன்னார்.
அந்தநேரம் பார்த்து அந்தக்கூட்டத்தில் அப்போது பேராசிரியர் சேதுப்பிள்ளை தலைமை தாங்கினார். அவர் சொன்ன விடை எனக்கு இன்றைக்கும் அப்படியே மனதை உருத்துகிறது:.

“வரதராசன், நடுநிலைமையைப் பற்றிப் பேசியது எனக்கும் மிகவும் பிடிக்கும். நடுநிலைமை என்பது இலக்கியத்தில் வருவதற்கு முன்னால், எந்த இலக்கியத்தை எவர் தொடுகிறார் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். தொடுகிறவன் நோயாளியாக இருந்தால் எடுத்த இலக்கியமும் பழுதுடையதாக இருந்தால் அங்கே நடுநிலைமைக்கு இடமே இருக்காது”

என்றார். இது அவர் எந்த அடிப்படையில் சொன்னார் என்பதற்கு அழகான ஒரு உவமை சொன்னார். என்ன உவமை சொன்னார் என்றால்
நோயாளிக்கு மருந்து தருவதற்காக மருத்துவர் வருகிறார் என்றால், இனிமையாகப் பேசி, பரிவாக உரையாடி, கனிவோடு பேசி, தேன்கலந்த சொற்களால்தான் இந்த மருந்தையும் கலந்து தரவேண்டும். அப்படிக் கலந்து தருவதுதான் மருந்து என்றே பெயர். நான் மருந்து தரவந்திருக்கிறேன் என்பதற்காகக் குழந்தையினுடைய காலையும் கையையும் கட்டிவிட்டு, வாயை இரண்டுபேர் பிடித்துக்கொண்டு திற என்று சொல்லி மருந்து ஊற்றினால் அது எப்படி இலக்கியத் திறனாய்வு ஆகும்”

என்று கேட்டார். இதைக் கேட்டபிறகு சொன்னார்,

“ஆய்வு செய்யத் தொடங்குவதற்கு முன்னால், அந்தப் பொருளில் தோய்வு உங்களுக்கு இருக்கிறதா? அந்தப் பொருளின்மீது உங்களுக்குக் காதல் எவ்வளவு தூரம் இருக்கிறது? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். எனக்குக் காதல் இருந்ததால்தான் கம்பராமாயணத்தில் பற்று வந்தது. கம்பராமாயணக் காதல் தான் என் தமிழ்க்காதலாக விளங்கியது”
என்றார்.
இதையெல்லாம் இப்போது எண்ணிப்பார்த்தால் இலக்கிய ஆய்வுத் திறனைப் பற்றி எப்படிப்பட்ட முடிவுகளையெல்லாம் சொல்லியிருக்கிறார்கள் என்று நினைக்கத்தோன்றுகிறது.
-தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *