திறனாய்ந்து தெளிகின்ற முறை என்பதைத் தமிழ் உலகத்திற்கு ஆங்கில இலக்கியத்தில் அதைப் பாடமாக வைத்தபிறகுதான், திறனாயும் போக்கு தமிழுக்கு வந்தது. அதற்கு முன்னால் உரையாசிரியர்கள் தங்கள் கருத்துக்களைச் சொல்லும்போது ஏதுக்களாலும், எடுத்துக்காட்டுக்களாலும் வாதிட்டு மறுப்பதனாலும் தாங்கள் திறனாய்வுடையவர்கள் என்பதைக் காட்டினார்கள். எனவே ஆங்கிலப் பாங்கிலேதான் தமிழ் வளர்ப்பது என்கிற போக்கு வந்ததனால், பயிற்றுவிக்கின்ற இடமாகத்தான் பல்கலைக்கழகம் மாறியதே தவிர, ஆய்வுக்கு என்று ஒரு ஆழ்ந்த களமாக இல்லை என்ற கருத்தை நாம் முழுவதுமாக மறுப்பதற்கு இல்லை.
ஆங்கில முதுகலையில் மொழியியல் இருக்கிறது என்றால் உடனே அதனை Philology என்று ஒரு பாடம் வைத்தார்கள். ஆங்கில இலக்கியத்தில் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் முதுகலையில் நான்கு பாடங்கள் உண்டு. நான்கு நாடகங்கள் உண்டு. தமிழில் அப்படி நான்கு நாடகங்கள் இல்லையே என்றபோது, நற்றிணை முழுவதும் படிக்கலாம். சிலப்பதிகாரம் முழுவதும் படிக்கலாம் என்று ஓர் இலக்கியத்தை வரையறுத்தார்கள்.
கல்லூரிகளிலும் மாணவர்கள் முதுகலை படிக்கிறார்கள். பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் முதுகலை படிக்கிறார்கள் என்று இரண்டுபேரும் ஒத்தநிலையிலே இருந்து பாடம் நடத்துவது என்று சொன்னால், அப்படிப்பாடம் நடத்துகிற பாங்கினை, மாற்றிச் சிந்திக்கின்ற பழக்கத்தை நாம் எப்படி அமைத்துக்கொள்வது என்பதை எல்லாம் எண்ணிப்பார்க்கலாம.-
தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Add a Comment