சித்தாந்த கலாநிதி,உரைவேந்தர்,பேராசிரியர்.ஔவை சு.துரைசாமி
கருத்துரை 27.6.1948
திருக்குற்றால நீர்வீழ்ச்சியிற் குளித்தாடிக்களிக்க வந்த எனக்கு இத்தென்காசித் திருவள்ளுவர் கழகம் இருக்க இடமும்,பெருக்க உண்டியுந்தந்து மகிழ்வித்ததோடு நான் செய்யும் தமிழ்த்தொண்டினையறிந்து மிக்க இன்பமுறச் செய்தது.இதன் செயலாளர்,தலைவர்,உறுப்பினராகிய பலரும் தமிழ்த்தொண்டின் உறைப்புற்று தமிழறிந்தார்பால் உண்மையன்பு கொண்டு பேணும் திறம் நினைக்க நினைக்க இன்பம் பெருகுவிக்கிறது. ஞாயிற்றுக்கிழமை தோறும் திருக்குறட் பகுதிகளும்,பிற அறிவு நூலு ரைகளும் மக்கட்கு வழங்கப்படுவதனை நேரிற் கண்ட யான் இக்கழகத்தின் பணிநலம் நம் நாட்டிற்குப் பெருநலம்பயப்பதென உறுதிகூற விரும்புகிறேன்.இதன் தொண்டிலும்,வளர்ச்சியிலும் நமது மாட்சிமிக்க கவர்னர் ஜெனரல் சக்கரவர்த்தி திரு.
சி.இராசகோபாலாச்சாரியார் முதலிய பெருந்தகமை கொண்ட சான்றோர் பலரும் பேராதரவு காட்டி வருவது அவர்கள் விடுத்துள்ள அன்பான திருமுகங்களால் விளங்குகிறது.இது மேன்மேலும் ஓங்கித் தமிழகத்துக்குப் பேரறிவு நெறிகாட்டும் பெருந் தொண்டால் வீறுமிக்கு விளங்குவென வாழ்த்துகின்றேன்

Add a Comment