POST: 2014-05-06T07:26:14+05:30

திராவிட மொழிக்குடும்பம் என்ற கருத்து அறிஞர் கால்டுவேலர்க்கு முன்னரே துளித்திருந்தாலும் அது தழைத்து செழித்தது அவர் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தால் தான்.பேரறிஞர் கால்டுவேலர் எழுதிய ஒப்பிலக்கணத்தின் முதற்பதிப்பிற்கு(1856) பின்னால் வந்த பதிப்பில் சில பக்கங்கள் நீக்கப்பட்டன என்றும் சென்னைப்பல்கலைக்கழகம் தான் இராண்டாம் பதிப்பைச் சீர்பெற வெளியிட்டது.சொல்லின் செல்வர்,பேராசிரியர் சேதுப்பிள்ளை அவர்களுடைய ஈடில்லாத முயற்சி பாராட்டத்தக்கது.

கால்டுவேலர் எழுதிய திருநெல்வேலி சரித்திரம்(1881) என்பதை பேராசிரியர் ந சஞ்சீவி தமிழாக்கம் செய்தார்.
நாடார் சரித்திரம் என்று கால்டுவேலர் எழுதிய குறிப்புக்கள் தவறானவை என்றும் புலப்பட்டது.சங்க இலக்கியங்கள் கால்டுவேலர் காலத்தில் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கால்டுவெல் ஐயர் சரித்திரம் என்ற நூல் பேராசிரியர் சேதுப்பிள்ளை அவர்களின் செந்தமிழ் கட்டுரையாகும்.
தமிழ்ப்பொழிலில் பள்ளியகரம் நீ கந்தசாமி பிள்ளை அவர்கள் எழுதிய கட்டுரை நுண்மான் நுழைபுலம் வாய்ந்ததாகும்.
சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் சில பகுதிகளை வெளியிட்டுள்ளது.

புலவர் கா கோவிந்தன் அவர்கள் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை முழுமையான மொழியாக்கத்தை செய்துள்ளார்.உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்கள் வைத்திருந்த ஆங்கில மூல நூலின் முதற்பதிப்பை தன் அருமை மாணாக்கர் புலவர் கோவிந்தனிடம் அளித்தார் என்று உரைவேந்தர் நினைவு கூறுவதுண்டு.

பேராசிரியர் தெ. பொ.மீ அவர்களும் மாநிலக்கல்லூரி மாணவர்களைக்கொண்டு திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தின் சில பகுதிகளை மொழிபெயர்த்தார் என்று கூறுவாறும் உளர். கால்டுவெல் கண்காணியாரின் சறுக்கல்கள் என்று மொழி ஞாயிறு பாவாணர் அவர்கள் செந்தமிழ்ச் செல்வியில் கட்டுரைகள் எழுதியதுண்டு.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *