POST: 2014-02-15T23:56:26+05:30

பாய்ந்தது பதினாறடி !

அறிஞர் ஔவை நடராசன்
(முன்னாள் துணைவேந்தர்)

பல்கலை ஆர்வத்தாலும் தளராத முயற்சியாலும் தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழ்வாணன் அவர்களை நான் அண்ணா நகருக்குக் குடிவந்த 1975-ஆம் ஆண்டிலிருந்தே அறிவேன். கலகலவென்று சிரித்தபடி, கனிவோடு தோள்தொட்டு உறவாடி மகிழும் கள்ளமில்லாத நெஞ்சத்தைத் தமிழ்வாணன் அவர்களிடத்தில் நாங்கள் கண்டு மகிழ்ந்தோம். அருட்பா அரசு கிரிதாரி பிரசாத், வி.ஜி.பி சகோதரர்கள் என எப்போதும் மூவர் நால்வர் நண்பர்களெனச் சூழந்திருப்பதில்தான் அவருக்கு மகிழ்ச்சி. அன்பு ததும்பும் ஆச்சியின் விரல் பிடித்துக்கொண்டு மெலிந்திருந்தாலும் மெருகோடு திகழ்ந்த இரண்டு பிள்ளைகளாக லேனாவும் ரவியும் எங்கள் வீட்டுக்கு வருவார்கள். ஆயிரம் மருத்துவர்கள் அவர்களுக்குத் தெரிந்தாலும், என் மனைவியார் டாக்டர் தாரா அம்மையாரிடம்தான் ஆச்சிக்கு எப்போதும் மாறாத நம்பிக்கை.

லேனா ஆர்வத்தோடு படித்தார். அடக்கத்தோடு வளர்ந்தார். பண்பு செழிக்கப் பரிவு ததும்பப் பழகக் கற்றுக்கொண்டார். பாரெல்லாம் தன்னந்தனியாகச் சுற்றி வந்து ஓங்கி உலகளந்தார். இளம் பிள்ளைகள் இருவருக்கும் வளரும் அப்பருவத்தில் திடுமென நேர்ந்த தந்தையின் இழப்பு பேரிடியாக விழுந்தது. விழுந்த நிலையில் எப்படி எழுந்து நிற்பார்கள் என்ற மருட்சியும் பலருக்கு இருந்தது. துயரைத் தாங்கிக்கொள்ளும் உறுதி, துணிவு, ஊக்கம், உழைப்பு, உலகளாவிய உறவுச் சிந்தனை, தந்தையைப் போலவே கற்கண்டு இதழைத் தாங்க முன்வந்த தகுதிப்பாடு, அப்பா தொடங்கிய பதிப்பகப் பணியைத் தொடர்ந்து பெருகிப் படர்ந்து பரவ மணிமேகலைத் தாயின் நெஞ்சங் கவர நின்ற சிறப்புக்களையெல்லாம் நான் எப்போதும் பாராட்டித் திளைக்கிறேன். லேனா உள்ளதை மறைக்காமல் ஒளிவு மறைவு இல்லாமல், கனிவு ததும்ப உண்மைகளுக்கு ஒளியூட்டி வருகிறார். அப்பாவின் வழியில் தப்பாது நின்று அவரைப்போலவே கோடிக்கணக்கான இளைய நெஞ்சங்களுக்கு நல்வழி காட்டும் நண்பனாக, வழிகாட்டியாக எழுத்து வன்மையில் அவருடைய ஒரு பக்கக் கட்டுரைகள் ஒளிவீசுகின்றன.

ஆற்றலில் அப்பாவைப்போல் இருந்தாலும், முயற்சியிலும் துணிவிலும் அப்பாவை வென்ற பிள்ளைகள் என்று நான் எப்போதும் லேனாவையும் ரவியையும் குறிப்பிடுவேன். மன்னனுக்குப் பிறகு மகன் தலையில் மகுடம் விழுவது இயல்புதான். ஆனால் மகனே, தானாகத் துணிவோடு எழுந்து நின்று தந்தையையும் நமக்கு நினைவில் நிறுத்திக்காட்டி, தந்தையின் மகுடம் வேண்டாம் கண்ணாடி போதும் என்று வெற்றி பெற்றுப் பதினாறடி பாய்ந்தவர் அருமைச் செல்வன் லேனா அவர்களாவார். லேனாவுக்கு மணிவிழா என்பது என் மகனுக்கு வாய்த்த மணிவிழாப்போல மகிழ்ந்து வாழ்த்துகிறேன். மதிப்புமிக்க திருமகனும், திருமகளாக வந்த மருமகளும் பேரன் பேத்திகளுடன் சேர்ந்து பெருமிதத்தோடு வாழ்க என வாழ்த்துகிறேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *