POST: 2015-09-25T12:31:38+05:30

தமிழ் இசைச் சங்கம்

ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை-600 108

பண் ஆராய்ச்சியின் நாற்பத்து நான்காம் கூட்டம்

தொடக்க உரை

டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்

துணைவேந்தர்

தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.

22 – 12 – 1993
தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர்
டாக்டர் ஔவை நடராசன்
1-22

அண்ணாமலை அரசர் செழுங்குடியைச் சார்ந்த செல்வப் பெருமக்களே!

பண்ணோடு பாடி தமிழ் மரபு வளர்க்கும் ஓதுவாமூர்த்திகளே!

தமிழிசை ஆர்வலர்களே!

இசை, நடனம், ஓவியம், சிற்பம் முதலிய மனங்கவரும் கலைகளையும் இருவடிவங்கள் மருவிய பகுதிகளாக இந்நாளில் ஆர்வலர்கள் கற்கின்றனர். கலை தொடர்பான கொள்கைத் தெளிவை ஒரு பகுதியாகவும், செயல் விளைவை மற்றையதாகவும் கருதுகின்றனர். இசையைப் பொறுத்த மட்டில் செயல்விளைவு என்பதாக – இசையிலக்கியங்களாகிய பாடல்களையும் மொழி சாராத இசைவடிவங்களையும் குறிக்கலாம். பாடல் வழிப்படும் இலக்கணம் இசையியல் எனப்படுகிறது. தொன்மை வாய்ந்தது தமிழிசை என்றாலும் இந்நாளில் இந்திய இசை என்ற நிலையில் ஆராயும்போது தொன்மையும் கட்டமைப்பும் வனப்பும் வாய்ந்த தேவாரத் திருமுறைப் பாடல்களையே இசைக்கென வாய்த்த செழுஞ் செல்வங்களாகக் கொள்ள வேண்டும். இசையும் தாளமும் சொற்களும் (சாகித்தியமும்) இயைந்த பண் சுமந்த பாடல்களை இசைமொழியில் இந்நாளில் ‘’இசையுருப்படிகள்’’ என்பர். இந்திய இசைவரலாற்றில் நமக்குக் கிட்டிய உருப்படி வடிவங்களில் தேவாரத் திருமுறைப் பாடல்களே முதன்மையான – முழுமையான ‘’ஆதி’’ உருப்படிகளாக அமைந்துள்ளன.

வால்மீகியின் இராமாயணத்தை லவ குசர்கள் இசையமைத்துப் பாடியதாகக் கூறுவர். அத்தொல்லிசை எவ்வாறிருந்தது என்றறிய இயலவில்லை. பதிற்றுப்பத்து, பரிபாடல் முதலிய பழந்தமிழ்ப் பனுவல்களும் இசைப்பாட்டேயாகும். ஒப்பில்லாத அப்பாடல்களைப் பாடும் முறையைத் தெளிவாக நாம் அறிந்துகொள்ள முடியவில்லை. இந்நிலையில் தேவாரத் திருப்பாடல்களே நமக்கு வாய்த்த தமிழிசைக் கருவூலங்களாகத் திகழ்கின்றன.

இன்றைக்கு 1,300 ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய தேவாரப் பாடல்கள் பண்ணமைவோடு திருக்கோயில்களால் காக்கப்பட்டு வந்தன. ‘’வேறு திசை ஆடவர்கள் கூடி இசை தேரும் எழில் வேதவனமே’’ என்று திருஞானசம்பந்தர் கூறியதை எண்ணி மகிழலாம். எனவே, இந்திய இசை ஆராய்ச்சி என்று தொடங்கினாலும் தேவாரப் பாடல்களே இசையிலக்கணத்துக்கு உரைகல்லாக ஒளிரும். எனவே, திருமுறைகளின் தொன்மையும் திண்மையும் கருதி, தேவார இசை ஆராய்ச்சியில் அனைத்து மொழிப் புலவர்கள் ஊக்கம் காட்டுவது வரவேற்கத்தக்கதாகும்.

இந்த நூற்றாண்டின் தொடக்கம் வரை இசையரங்குகளில் தமிழ்ப்பாடல்களுக்குத் தக்க இடம் இல்லாமலேயே இருந்தது. தேவார இசைச்செல்வம் நம்மிடையே இருந்தும், கருநாடக இசையரங்குகளின் இறுதியில் `துக்கடா` என்னும் பெயரில் ஓரிரண்டு தமிழ்ப்பாடல்களே பாடப்பட்டன. தமிழிசைக்கு நேர்ந்த அவல நிலையைக் கண்டு வருந்திய கொடைவள்ளல், கல்வி வேந்தர் என நாம் கைதொழுது வணங்கும் அரசர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் நல்லறிஞர் பலரின் துணை கொண்டு தமிழிசை இயக்கத்தைத் தோற்றுவித்தார். ஆடினர்க்கென்றும், வாடினர்க்கென்றும், பாடினர்க்கென்றும் வரையாது கொடுத்த செந்தமிழ்ப் பெருவேந்தர் வழியில் அண்ணாமலை அரசர் தொடங்கிய தமிழிசைச் சங்கம் நிறுவப்பட்டுக் கடந்த ஐம்பதாண்டு காலமாக அரிய ஆக்கப்பணிகள் நிகழ்ந்துவருகின்றன.

ஏசுபெருமான் திருநாளையொட்டிய விடுமுறையும் மகளிர் பரவி மகிழும் பாவைத் திங்களான மார்கழித் திங்களும், திசம்பர் மாத நிறைவில் ஒருங்கிணைந்ததால் இசையரங்குகள் அங்கிங்கெனாதபடி கலைவளரும் தலைநகரான நம் சென்னையில் பொங்கி மலர்ந்தன. தமிழிசைச் சங்கம் தமிழிசையரங்கை நடத்தி மகிழ்ந்தது. மக்கள் மனக்கவலை தீர்க்கும் மாமருந்தாக, நுண்ணறிவாற் கண்டு வரையறை செய்த பழந்தமிழ்ப் பண்களின் நுட்பமும் ஒட்பமும் சங்கத் தொகைநூல்களிலும் சிலப்பதிகார உரைகளிலும் இடம் பெற்றிருந்தன. எனினும் உயரிய கலைச்செல்வங்களை உருச்சிதையாது காக்கும் திறனின்றித் தமிழகம் தேம்பிய நிலையில் திருமுறையாசிரியர் செய்த பத்திமை வாய்ந்த தமிழிசைத் தொண்டு தளர்ந்த தமிழிசைக்குச் சிறந்த வளமூட்டியது. தமிழிசைச் சங்கம் இசையரங்குகளோடு ஆய்வரங்குகளையும் அமைக்க வேண்டுமென அறிஞர்கள் கருதியதால் பண்ணிசை மாநாடு தோன்றியது.

ஆண்டுதோறும் சென்னை இசைத்திறனைப் பேரவையினரும் இசையாய்வு நடத்தி வந்தனர். தமிழிசைச் சங்கம் தமிழ் மரபுக்கேற்ற தனிவகையில் திருமுறைப் பண்களைப் பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கி, பண்ணாராய்ச்சி மாநாடாக இதனைச் செவ்வனே நடத்திவருகிறது.

எங்கள் பேராசிரியர் பண்டிதமணி லெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் செயலாளராகத் தொடக்க நாளிலிருந்து இத்தூய பணிக்குத் துணைநின்ற பெருமகனாராவார். விழுமிய புலமை முயற்சியும், அழுந்திய திருமுறைப் பயிற்சியும் கொண்ட ஓதுவார்களும் தமிழறிஞர்களும் இசைவித்தகரும் பண்ணாராய்ச்சியில் பங்குகொண்டு சிறப்பாக நடத்துகின்றனர்.

பண் இராகம் ;

பண் என்பதற்குப் பொருளாகப் பஞ்சமரபு என்ற இசையிலக்கண நூலில்,

‘‘பாலோடு அணைதல் இசையென்றார் – பண்ணென்றார்
மேவார் பெருந்தானம் எட்டானும் – பாவாய்
எடுத்தல் முதலா இருநான்கும் பண்ணிப்
படுத்தமையாற் பண்ணென்று பார்.’’
(பஞ்சமரபு – இசைமரபு வெண்பா 50) என்று தலை, மிடறு, நெஞ்சு, மூக்கு, இதழ், பல், நா, அண்ணம் முதலிய எட்டுத் தானங்களாலும் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பித்தல், குடிலம், ஒலி, உருட்டு, தாக்கு, முதலிய எட்டுச் செயன்மைகளைப் பிறப்பித்து ஓசைப்படுத்தலாற், `பண்` என்று பெயராயிற்று எனக் கூறப்பட்டது. இனிமையான இசைத் தொடர்பு பூண்ட ஒலி உருவ அமைப்பைப் பண் என்று கூறலாம். ‘‘பண்ணுதல்’’ என்றால் ‘‘இயற்றுதல்’’ ‘‘செய்தல்’’ என்ற பொருள் நாமறிந்தது. பண்படுத்தப்பட்ட இசையொலித் தொடர்கள், வடமொழியில் அமைந்த `இராகம்` என்ற சொல்லொடு ஒத்தமைகிறது.

‘‘இராகம்’’ என்ற சொல் மதங்கரின் பிருஹத்தேசி (5ஆம் நூற்றாண்டு) என்ற வடமொழி நூலில் முதன்முதலில் காணப்படுகிறது. இராகம் என்பதன் விளக்கமாக, ‘‘அழகிய கமகங்களோடு கூடிய சுரக்கூட்டங்கள் என்றும், மக்கள் விரும்பக் கேட்டு இன்புறும் தன்மையது’’ என்றும் கூறினார். இராகம் என்ற சொல் சில பண்களின் பெயர்களில் இணைப்பாகக் காணமுடிகிறது. சான்றாக, அராகம், தக்க ராகம், பழந்தக்க ராகம், நாட்டராகம், மேகராகக் குறிஞ்சி முதலியன.

‘‘பண்களாவன பாலையாழ் முதலிய நூற்று மூன்று’’ என்பார் உரையா சிரியர் பரிமேலழகர். 103 பண்களின் பெயர்கள் சூடாமணி நிகண்டு, பிங்கள நிகண்டு ஆகிய நூல்களின் வாயிலாக அறியலாம். இவை, பண், பண்ணியற்றிறம், திறம், திறத்திறம் என்று நான்வகையாகவும் வகைப்படுத்தப்பட்டன. இவையே இன்று சம்பூர்ணம், சாடவம், ஔடவம், சுவராந்திரம் என்னும் வடமொழிப்பெயர்களால் குறிக்கப்படுகின்றன. பாடலோடு பொருந்தி திறம்பெறவேண்டிய பண்களின் இன்றியமையாமையை உணர்த்திய திருவள்ளுவர், கண்ணுக்குக் கண்ணோட்டம் எவ்வாறோ, அவ்வாறே பாடலும் பண்ணும் இயைந்து செல்லும் என்பதனை

‘‘பண்ணெல்லாம் பாடற்கியை பின்றேல் – கண்ணென்னாம்
கண்ணோட்ட மில்லாத கண்’’ (573)

என்னும் உவமை வாயிலாகத் தெருட்டினார். இசையொலியும் இயற்பாடலும் இசைந்து செல்வதே இசையாகும். `பண்ணிடைத் தமிழ் ஒப்பாய்` என்பது சுந்தரர் செந்தமிழ். திரியில் எரிசுடரைக் கண்ணாடிக் கூட்டில் பொருத்தும்போது, பேரொளி பிறக்குமாப்போல, சொற்கள் கலவாத ஒலியளவில் உறங்கும் இசைக்கட்டு, பாட்டில் அமையும்போது, சொற்றுணையாக நமக்கு நல்லின்பம் நல்குவதுடன் நினைவிலும் நிலைபெறும். இந்நிலையில், கருவியிசை மிடற்றிசையோடு பொருந்தும்போதே மேன்மையுறும். பொருள்படாச் சொற்களை மிழற்றும் மழலை இன்பம் இனிதெனக் காட்டவே குழல் இனிதென்றார்,

திருவள்ளுவர். குழலினும் பொருள் கவர்ந்த நல்லிசையே இனிது என்பதையும் நாம் அறிய வேண்டும். இது கருதியே `எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்` என்று திருவள்ளுவர் நல்லவை என்று இசைச் சங்கம் எனப் பொருள் வருமாறும் அறிவுறுத்தினார் போலும்.

பழங்காலத்தில் பண்ணிசை, மக்கள் வாழ்வோடு ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதாக ஊறியமைந்ததை அகநானூற்றுப் பாடல் காட்டும்.
‘‘கடும்பரிப் புரவி நெடுந்தேர் அஞ்சி
நல்லிசை நிறுத்த நயவறு பனுவல்
தொல்லிசை நிறீய உரைசால் பாண்மகன்
எண்ணுமுறை நிறுத்த பண்ணினுள்ளும்
புதுவது புனைந்த திறத்தினும்
வதுவை நாளினும் இனியனால் எமக்கே.’’
(அகம்) 352: 12-17.
என்பது அஞ்சி அத்தைமகள் நாகையார் பாடல். அன்றன்று புதுமையும், ஆரா மகிழ்வும் தந்து நன்றென்று நாளும் நினையும் களிப்புக்குரிய இல்வாழ்க்கையை நடத்தும் தலைவியொருத்தி, திருமணமாகிச் சில ஆண்டுகள் கழிந்த பின்னர், தன்னெஞ்சுகந்த காதலன் காட்டிய அன்பு, தலைநாள் அன்பினும் நாளும் வேளையும் தழைத்துச் செழிப்பதை உணர்த்தி இந்த உவமையை நாகையார் உரைத்தார்.

அளவையானும் மாத்திரையானும் நிறுத்தி எண்ணும் முறைப்படி பாணன் இசைத்த பண்ணினிமையிலும், புதுவதாகத் தாமே இயற்றிய திறம் (ஐந்திசைப்பண்) என்னும் தீம்பண்ணைக் காட்டிலும், திருமணத் தலைநாளில் தலைவன் காட்டிய அன்பு மேலும் மிகுந்து திகழும் நிலையில் தலைவன் என்னைப் பாராட்டி வருகிறான் என்று, உள்ளம் மகிழ்ந்து பாராட்டுகிறாள். இசைத்திறமே இதற்கு உவமையாகிறது. இசைத்திறத்தை நுகரும் தலைவியின் மனத்தை வியப்பதா இல்வாழ்க்கையின் அறத்திறத்தை நயப்பதா என நாம் இங்கு மருள்கிறோம்.
பாடும் காலங்களுக்கேற்றாற்போல், பகற்பண்கள், இரவுப்பண்கள், பொதுப்பண்கள் என்று வகைப்படுத்தப்பட்டன. சங்க காலத்தில் இப்பண்களைப் பாடுவதில் பாணர்களும் முறை மயங்கியதாக வன்பரணர் பாடி மகிழ்கின்றார்.

‘’நள்ளி வாழியோ! நள்ளி நள்ளென்
மாலை மருதம் பண்ணிக் காலைக்
கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி
வரவெமர் மறந்தனர் அதுநீ
புரவுக்கடன் பூண்ட வண்மையானே.’’
(புற. 149)
என்று பாடினார். காலைப் பண் மருதம்; மாலைப்பண் செவ்வழி. இந்த முறை மறந்து காலையிற் செவ்வழியையும் மாலையில் மருதத்தையும் பாடுகிறார்களே! அருந்திய விருந்தால் பொருந்திய பண்ணை மறந்தனரோ என புரவுக்கடன் பூண்டவண்மையைப் புகழ்ந்தார். காலக்கோட்பாட்டால் அடங்கன் முறைப்படி பகல், இரா, பொது என்ற காலப்பாகுபாடு முறையாகப் பின்னாளில் கடைப்பிடிக்கப்படவில்லை. இதனாலும் பண்ணிசைத் திரிபு மயக்கத்திற்கு ஆட்பட்டது.

இலக்கியத்தில் பண்களைப்பற்றிய குறிப்புகளைப் பலவாறாக அறியலாம். ‘’நைவளம் நவிற்று மொழி’’ என்றார், கம்பர். நைவளம் என்ற பண்ணிலக்கணத்தை அறிந்தாலன்றோ இன்னோசையென உரை மிழற்றும் சானகியாரின் இயன்மொழியை நாம் உணர முடியும்? இலக்கிய நோக்கில் இசையையும், இசைப்போக்கில் இலக்கியத்தையும் பண்டை நாளில் இயைபுபடுத்தினர். நூற்று மூன்று பண்களில் இசைக்கப்பெற்ற தேவாரப் பாடல்கள் நமக்கு இப்போது கிடைக்கவில்லை. நமக்குக் கிடைத்தவை 23 பண்களே. முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இசையறிஞர் தெலுங்கில் 4,000 பதங்களுக்கு (உருப்படிகள்) மேல் இயற்றினாராம். ஆனால், அவர் பயன்கொண்ட இராகங்களெல்லாம் 40 இராகங்களுக்குள்ளேயே அமைந்தன. அவைகளும் ரக்தி இராகங்களே (உணர்வுள்ள, உயிருமுள்ள இராகங்கள்) நமக்குக் கிடைத்த தேவாரப் பண்களும் ரக்தி இராகங்களாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய இசையிலும் 72 மேளகர்த்தா இராகங்கள் அடிப்படை இராகங்களாக அமைந்திருந்தாலும், இவற்றில் 32 மேளகர்த்தா இராகங்களும், அதனின்றும் பிறந்த இராகங்களுமே பாடப்படுகின்றன. மற்ற 40 மேளகர்த்தா இராகங்களும், `விவாதி மேளங்கள்` என வழங்கப்பட்டு அவற்றைப் பாடுவதும் அரிதாகக் காணப்படுகின்றன. எனவே காலந்தோறும் பண்களைப் பாடுவதில் தேர்ச்சிபெறத் தெரிந்து பாடுவது என்பது அருங்கலையாகவே மதித்துப் போற்றப்பட்டுவந்த திறம் வெளிப்படுகிறது.

பண்ணாராய்ச்சி மாநாடுகளில் 23 பண்களையும், திருமுறைத் திலகங்களாகிய நம் ஓதுவா மூர்த்திகள் மரபுவழியாக இசைத்துக் காட்டும்போது இக்காலத்தில் `இராகங்கள்` என்றழைக்கப்படும் இசை வடிவங்களாகவே அவை நமக்கு நன்கு தெரிகின்றன.

23 பண்களும் நேராக இராகங்களும் பின்வருமாறு, –

பகற்பண்கள் இராகங்கள்
1. புறநீர்மை பூபாளம்
2. காந்தாரம் நவரோசு
3. பியந்தைக் காந்தாரம் நவரோசு
4. கௌசிகம் பைரவி
5. இந்தளம் நாதநாமக்கிரியை
6. தக்கேசி காம்போதி
7. நட்டராகம் பந்துவராளி
8. சாதாரி பந்துவராளி
9. நட்டபாடை நாட்டை
10. பழம்பஞ்சுரம் சங்கராபரணம்
11. காந்தார பஞ்சமம் கேதாரகௌளை
12. பஞ்சமம் ஆகிரி

இரவுப்பண்கள் நேரான இராகங்கள்
13. தக்கராகம் காம்போதி
14. பழந்தக்கராகம் சுத்தசாவேரி
15. சீகாமரம் நாதநாமக்கிரியை
16. கொல்லி நவரோசு
17. கொல்லிக்கௌவாணம் நவரோசு
18. வியாழக்குறிஞ்சி சௌராஷ்டிரம்
19. மேகராகக்குறிஞ்சி நீலாம்பரி
20. குறிஞ்சி குறிஞ்சி (அ) அரிகாம்போதி
21. அந்தாளிக்குறிஞ்சி சாமா
பொதுப்பண்கள் நேரான இராகங்கள்
22. செவ்வழி எதுகுல காம்போதி
23. செந்துருத்தி மத்தியமாவதி
24. திருத்தாண்டகம் அரிகாம்போதி
இப்பண்களிலும் ஐயப்பாடுகள் உண்டு. ஒரே இராகத்தில் பண்கள் பல அமைந்திருப்பதைக் காணலாம். சான்றாகக் கொல்லி, கொல்லிக்கௌவாணம், காந்தாரம், பியந்தைக் காந்தாரம்,
ஆகிய நான்கு பண்களும் `நவரோசு` என்ற இராகத்திலேயே இசைக்கப்படுகின்றன.

140 ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய தியாகையர் கீர்த்தனைகளிலேயே அவற்றிற்குரிய இராகங்களில் நமக்கு ஐயம் தோன்றும்போது, 1,300 ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய அருங்களஞ்சியமாகிய தேவார இசையில் ஐயம் எழுவது இயற்கையே! எனவே, பலவகையில் நமக்குப் பண்ணாராய்ச்சி தெளிவைத் தோற்றுவிக்கும். சிலப்பதிகாரத்தில் புறஞ்சேரியிறுத்த காதையில் `ஆசான் திறம்` என்ற பண் குறிக்கப்படுகிறது. இதனைக் காந்தாரப்பண் என்று உரையாசிரியர்கள் கருதினர். முல்லைநில மக்கள் குழற்கருவியைக் கண்டறிந்து அதில் ஐந்து துளையிட்டு அதன் வழித் தோன்றிய பண்ணிற்குத் தாரம் என்று பெயரிட்டனர். `தாரம்` என்றால் `முதல்` என்று பொருள். இது மிகப் பழமையான சொல் ஆகும். இப்பண்ணே ஏனைய இராகம் காண ஆதாரமாயிருந்ததால் `ஆசான் திறம்` எனப்பட்டு, இதுவே பின்னர்க் காந்தாரம் (க+தாரம்) என்றாயிற்று. இந்த காந்தாரப்பண், மோகன இராகத்தோடு இயைந்தது என்று பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் கூறியது நினைவிற்கொள்ளத் தக்கது

. ஆனால், நடைமுறையில் காந்தாரப் பண்ணிலமைந்த பாடல்கள் நவரோசு இராகத்தில் பாடப்படுகின்றன. இவ்வகைப்பட்ட இராக வேற்றுமைகளையெல்லாம் மேலும் நுணுகி ஆராய வேண்டுவது இன்றியமையாத ஆய்வுப்பணியாகும். நூற்று மூன்று பண்களையும் பண்டைத் தமிழகத்தின் ஐவகை நிலப்பாகுபாடாகக் கண்ட குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டன.

இப்பண்களின் உருவங்களனைத்தும் அந்தந்த நிலங்களில் பாடிய இசை முறையை அடியொற்றியவையே. எனவே, அந்தந்த நிலப்பகுதியின் வழக்கிலுள்ள மரபுவழிப்பட்ட பாடல்களை அந்தந்த நிலத்துப் பண்களோடு இணைத்து ஆராயும்போது 103 பண்களனைத்தின் உருவங்களையும் அறிய வாய்ப்பிருக்கிறது.
தேவாரப் பண்ணடைவு .- அபயகுல சேகர சோழர் தேவாரத் திருமுறைகளை எங்கும் தேடி அகப்படாமல், பின்னர்த் திருநாரையூர் நம்பியாண்டார் நம்பியின் உதவியால் தில்லைத் திருக்கோயிலில் கண்டெடுத்தார் என்றும், பின்னர் அவை ஏழு திருமுறைகளாக வகுக்கப்பட்டன என்றும், திருவெருக்கத்தம்புலியூர் வல்லி ஒருத்தியார் பண்ண்டைவு பாடக்கேட்ட பின்னர்க் கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார், திருமுறை கண்ட புராணத்தின் பண்களையும் அவற்றிற்குள்ள கட்டளைகளையும் விளக்கமாகக் கூறினார் என்றும் அறிகிறோம்

முதன்முதலாகத் தேவாரப் பதிகங்களை அச்சியற்றியோர் எந்த மூலச்சுவடியை ஆதாரமாகக் கொண்டனர் என்றறிய முடியவில்லை. ஒரு பதிப்பைப் பார்த்து மற்றொரு பதிப்பு என்ற முறையில் அடுக்கடுக்காக அச்சிட்டு வந்தனரே தவிர, திருமுறை கண்ட புராணத்திற்கு ஏற்ற பண்களுக்குரிய கட்டளைகள் நெறிப்பட அமைந்தவையா என ஆராய முடியவில்லை. இந்நிலையில் இத்தகைய முயற்சிகளை இப்பண்ணாராய்ச்சி மாநாட்டில் நாம் ஊக்குவித்தல் வேண்டும்.

சமயத்துறையில் இசை – இலக்கியம் மட்டுமின்றி சமயத்துறையிலும் தமிழர்கள் இசைக்கலையைப் பெரிதும் போற்றி வளர்த்தனர். இறைவனை ஏழிசையாகவும் இசையின் பயனாகவும் கண்டு வழிபட்டனர். தமிழோடு இசை கேட்கும் பெருவிருப்பினனாக இறைவன் விளங்குகின்றான் என்றே தேவார நால்வர்கள் பண்சுமந்த பாடல்களைப் பாடிப் பரமனை மகிழ்வித்ததோடு பத்திமையுணர்வையும் மக்களிடையே பரப்பினர்.

‘‘ஏழிசையாய் இசைப் பயனாய் என்னுடைய தோழனுமாய்’’
(7-51-10)
‘‘நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்’’
(7- 62- 8)
‘‘தமிழோடிசைப் பாடல் மறந்தறியேன்’’
(1 – 6)
ஆகிய தொடர்கள் இறைவனை இசையோடு ஏத்தி வணங்கும் பத்திப் பாங்கினை உணர்த்துகின்றன. அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஆனாய நாயனார் ஏழிசையைக் குழலில் இசைத்தார். இசையால் இறைவனை ஏத்துதலாற் பெறும் பயனை ‘‘அளப்பில் கீதஞ்சொன்னார்க்கு அடிகள் தாம் அருளுமாறே,’’ என்றும் உரைத்தனர்.

பாணர்கள் –
பழங்காலத்தே பண்ணை இசைத்தோர் `பாணர்` என்று அழைக்கப்பட்டனர். இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் என்ற மூவகையினர் இருந்த தாகவும் தெரிகிறது.
‘‘குழலினும் யாழினும் குரல் முதல் ஏழும்
வழுவின் றிசைத்து வழித்திறம் காட்டும்
அரும்பெறன் மரபிற் பெரும்பாண் இருக்கையும்’’
(இந்திர, 35 – 7)
என்ற சிலப்பதிகாரக் குறிப்பிலிருந்து குழலிலும் யாழிலும், குரல் முதல் ஏழு சுரங்களையும் குற்றமின்றி இசைத்த பாணர்கள் காவிரிப் பூம்பட்டினத்தில் கரையில்லாத வளமொடு வாழ்ந்தனர்; அரும்பெறல் மரபின் பெரும்பெயர் கொண்டோராகத் தமிழ் மக்கள் பாணர்களைப் போற்றினர். திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபினராகிய மதங்க சூளாமணியாரைக் கொண்டு இராச இராச சோழன் (985 – 1014) திருமுறைகளுக்குப் பண் வகுத்தான் என்றறிகிறோம். தேவாரத் திருமுறைகளை நாள்தோறும் கோயில்களில் ஓதுவதற்கு நாற்பத்தெட்டுப் பிடாரர்களுக்கு (ஓதுவார்) பல்வேறு நிவந்தங்கள் அமைத்துத் தேவார இசை வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கினர் என்பதைக் கல்வெட்டுச் சாசனங்களும் காட்டுகின்றன. இக்கல்வெட்டில் காணப்படும் `பிடாரர்கள்` என்ற சொல் ஓதுவார்களைக் குறிக்கும்.

பிற்காலத்தில் கோயில் சார்ந்த மடங்களிலும் தேவாரப் பாடசாலைகள் அமைக்கப்பட்டு ஓதுவார் மரபு காக்கப்பட்டது. இவ்வகையில் திருவாவடுதுறை ஆதீனம், தரும்புர ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், தொண்டை மண்டல ஆதீனம் முதலிய தமிழாதீனங்கள் மரபு வழியாகத் தேவார இசையை இன்றளவும் காத்தும் கற்பித்தும் வருகின்றன.

தாளம். – பாட்டின் கால அளவை அளந்து, கையினாலோ இசைக்கருவியினாலோ, தட்டிக் கணக்கிடுவது தாளம் ஆகும். தள்ளியிடுவது – தாளால் இடுவது என்றும் பொருள்படும். இஃது பாணி என்றும் கூறப்படும். கொட்டு, அசை, தூக்கு, அளவு என்னும் கால மாத்திரைகளை உடையது.
‘‘கொட்டு மசையுந் தூக்கு மளவும்
ஒட்டப் புணர்ப்பது பாணியாகும்.’’
(சிலப். 14 வரி. 150-உரை)
பண்ணாராய்ச்சிக்குத் தேவாரப் பாடல்கள் எத்துணை இன்றியமையாதனவோ, அவ்வாறே தாள ஆராய்ச்சிக்கு 15 ஆம் நூற்றாண்டு இயலிசைத் தவப் பெருஞ்செல்வராகிய அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ்ப் பாடல்கள் இன்றியமையாதன. பண்ணாராய்ச்சி மாநாடுகளில் 1968 ஆம் ஆண்டு முதல் திருப்புகழ் காட்டும் சந்தங்கள் அவற்றின் வழிப்பட்ட தாளங்கள் ஆகியனவும் ஆராயப்பட்டு இவ்வாராய்ச்சி இன்றளவும் நடைபெறுவது போற்றத்தக்கது. செய்யுட்களில் அமைந்த யாப்பும் தாளமும் ஒன்றோடொன்று தொடர்புடையன. பதிற்றுப்பத்து என்னும் பழந்தமிழ்ப் பாட்டில் வண்ணமும் தூக்கும் வகுக்கப்பட்டுள்ளன. வண்ணம் என்பது செய்யுட்களின் சந்தம் என்பர். தூக்கு என்பது தாளவகை என்று சிலப்பதிகார உரையின் மூலம் அறியலாம்.

தாளத்தில் எடுக்குங்காலம் `பாணி` என்றும், நிகழும் நிலை `தூக்கு` என்றும் முடியும் நிலை `சீர்` என்றும் சொல்லப்படுகிறது. `சீர்` என்று சொல்லும்போது தாளம் என்று பொருள். சீரமைதி தாள அமைதிக்கு ஒத்தது. யாப்பு விகற்பம் பற்றி ஆராய்ந்தால் தாள வேறுபாடுகள் எல்லாம் அதனுள் அடங்கிவிடுதல் புலனாகும். இவ்வகையில் விபுலானந்தர் தம்முடைய யாழ்நூலில் – தேவார இயலில் கட்டளை என்பது யாப்பு விகற்பமா? சீர் எண்ணிக்கையைக் கொண்டு தாளம் அமைக்க முடியுமா? என்றெல்லாம் கருதுவதைத் தொடர்ந்து ஆராய வேண்டும்.

தேவாலப் பாடல்கள் இயல்வகையில் எந்தப் பிரிவைச் சேர்ந்தது என்பதே தனியாராய்ச்சியாகும். கலிப்பா என்று கூறப்படுகின்றது. ‘’கலிக்கோவை யாற் சந்தமே பாடவல்ல தமிழ் ஞானசம்பந்தன்’’ என்னும் தொடரால் இப்பாடல்கள் யாவும் கலிப்பா வகையைச் சார்ந்தவை (12 -11) எனத் தெளியலாம். ‘’சந்தம்’’ என்ற தமிழ்ச்சொல் அழகு, கவியின் வண்ணம் என்னும் பொருளில் குறிக்கப்பெற்றுள்ளது. இச்சொல் `சந்தஸ்` என்னும் வடமொழிச் சொல்லின் திரிபாகவும் சிலர் கூறுவர். தமிழ் யாப்பும் ஆரியமும் கலந்த ஒருவித நடையைக் கொண்ட பாடல்கள் சந்தப்பாக்கள் என்று கூறலாம். இவ்வகைச் சந்தப் பாடல்களைத் திருஞான சம்பந்தரே முதன்முதலில் தம் பாடல்களில்இயைத்துப் பாடினார். சந்த விருத்தத்தில் பாடும்போது இசைக்கு வயப்பட்டு இயற்றமிழ் இலக்கணத்தை திருஞான சம்பந்தப் பெருமான் மறந்ததில்லை. சான்றாகத் திருஞான சம்பந்தரின் நட்டராகப் பண்ணில் அமைந்த திருவிராகப் பாடல் வருமாறு, –
‘’அடுத்த டுத்த கத்தியோடு வன்னி கொன்றை கூவிளம்
தொடுத் துடன் சடைபெய்தாய் துருதி யாய்ஓர் காலனை
கடுத் தடிப் புறத் தினால் நிறத் துன்தத்த காரணம்
எடுத் தெடுத் துரைக்கு மாறு வல்லம் ஆகில் நல்லமே’’
(98 – 2)
இச்சந்த விருத்தத்தில் ஏழாவது சீராக கூவிளச்சீரை அமைத்துக்காட்டி, இசைக்காக இயற்றமிழ் இலக்கணத்தை இழக்கலாகாது என்னும் கருத்தை வெளிப்படுத்தினார். இந்நாளில் இசைப்பாடல் இயற்றுவோர் இதனை மனத்துட்கொள்ளவேண்டும். இசைக்காக இலக்கணம் வழுவிய கொச்சைச் சொற்களையும் வழுச்சொற்களையும் பயன்கொள்ளலாகாது. இந்நாளில் இயற்-கொலைக்கு இசைக்கலை இடந்தருகிறதே என்ற அவலம் நம்மனத்தை வருத்துகிறது.

யாப்பிலக்கத்தில் செய்யுட்களுக்குத் தளையால் ஏற்படும் ஓசையைச் செப்பலோசை, அகவலோசை, துள்ளலோசை, தூங்கலோசை எனக்கூறினர். செப்பலோசை வெண்டளையால் உண்டாவது. அகவலோசை ஆசிரியத் தளையால் அமைவது, துள்ளலோசை கலித்தளையாலும், வெண்டளையோடு பொருந்திய கலித்தளையாலும் பல தளைகள் விரவியும் உருவாவது. தூங்கலோசை ஒன்றிய வஞ்சித்தளையாலும் ஒன்றா வஞ்சித்தளையாலும், இவ்விரண்டு தளையும் விரவி வருவது. இவை ஒவ்வொன்றும் மும்மூன்று வகையாக ஏந்திசை, தூங்கிசை, ஒழுகிசையாகப் பிரிக்கப்பட்டன. ‘‘பண்ணும் பதமேழும் பலவோசைத் தமிழவையும்’’ என்று திருஞானசம்பந்தர், ‘‘இவ்வோசை கலந்த பாடல்கள் அரங்கேறும் தமிழவை’’ என்று கூறியது நினைக்கத்தக்கது. இந்நால்வகை ஓசை கொண்ட செய்யுட்கள் இசைக்கு மிகப் பொருத்தமானவை எனலாம்.

பண்ணாராய்ச்சியோடு இசைத் தொடர்பான பல்வேறு கட்டுரைகள், இயலிசைப் புலவர்களின் (வாக்கேய காரர்கள்) வாழ்க்கைக் குறிப்புகள் இசைத்தொண்டு, சிலப்பதிகார இசை ஆராய்ச்சி, நாட்டிய இசை ஆராய்ச்சி, நாடகப் பாடல்களில் இடம்பெறும் இசை, நாட்டுப்புற இசை, கோயிலிசை மரபு, நவசக்தி நடனம் போன்ற ஆராய்ச்சிகளும் இசை வல்லுநர்களால் நம் மன்றத்தில் நடத்தப்பெறுகின்றன. மேலும் புதுவகையான குறவஞ்சி நாடகங்கள், ஆண்டுதோறும் அரங்கேறுகின்றன. இப்பணிகள் பெரிதும் பாராட்டத்தக்கன. இவை நாளும் தொடர வேண்டிய நற்பணிகளாகும்.

நமக்குக் கிட்டிய தேவாரப் பண்களாகிய 23 பண்களின் உருவங்களையும் தெளிவாகக் கண்டறிந்ததாகக் கூறவியலாது. பண்கள் பல ஒரே இராகத்தில் அமைந்திருப்பதைக் காணலாம். தனித்தனிப் பண்களாக இவை இருந்திருக்கவேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இப்பண்கள் இவ்வகையில் மேலும் ஆய்தற்குரியன.

பழமையான பண்ணாகவும், நாட்டுப்புற இசைவடிவத்தின் வகையாகவும் தோடி, தேவாரப் பண்ணிசையில் காணப்படவில்லை. ஆனால், வழக்கத்தில் தோடி இராகத்தில் பாடல்கள் சில பாடப்பெறும் மரபு காணப்படுகிறது. எனவே, தோடி இராகத்திற்குரிய பண் ஆராய்ந்தறியப்பட வேண்டியதாகும். திருநேரிசை, திருவிருத்தம், திருத்தாண்டகம் முதலியன யாப்பு வடிவங்களா? இசைவடிவங்களின் பெயர்களா? என்பதும் ஆராயத்தக்கன.

திருவிசைப்பாப் பண்கள் என்று ஆறு பண்கள் குறிக்கப்பட்டிருந்தாலும் ஆனந்தபைரவி இராகத்திலேயே பெரும்பாலும் பாடப்படுகின்றன. திருவாசகம் மோகன இராகத்தில் பாடப்படுவதாகக் கூறப்படுகிறது. தேவாரப் பண்ணிசையில் இவ்வாறு காணப்படவில்லை. திவ்வியப்பிரபந்தத்தில் பண்கள் குறிக்கப்பட்டிருப்பினும், வரம்பறுத்துப் பாடும் வழக்கம் இல்லாமையால் அவற்றைத் தெளிய முடியவில்லை.

மூல இசை வடிவம் அல்லது மரபு வழிப்பட்ட இசை வடிவங்கள் இல்லாத நிலையில், நங்க இலக்கியப் பாடல்களான பரிபாடல், புறநானூறு, திருக்குறள் முதலிய பாடல்களுக்குரிய இசையமைத்து, அவொற்றுக்கெனத் தனியிசைமுறையை மீட்டுருவாக்கலாம். பாடல்களில் யாப்பு, சீர் எண்ணிக்கைகளுக்குத் தகுந்த தாளங்கள், பாடல்களின் யாப்புகளுக்கேற்ற இராகம், பாடல்கள் வெளிப்படுத்தும் சுவைகளுக்கேற்ற இராகம் ஆகியவற்றின் துணை கொண்டு இப்பணியை மேற்கொள்ளலாம். இப்பாடல்களையெல்லாம் இசை நிறுவனங்களில் முறையாகப் பயிற்றுவிக்கவும் முயலலாம். இசைக் கல்லூரிகளிலும் மன்றங்களிலும் திருமுறை இசையை ஓதுவார்களைக் கொண்டு பயிற்றுவிக்க ஆவன செய்தல் வேண்டும்.

ஆசியப் பேருலகுக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம், திரையிசை வேந்தராகத் திகழும் இசைஞானி இளையராசா அவர்கள் மேலைநாட்டார் வியந்து திகைக்கும் வண்ணம் ‘‘பல்லிய நல்லமைவை’’ (Sympony) அமைத்திருப்பது, தமிழர் அனைவரும் பெருமிதங்கொள்ளும் தகவுடையது. இவ்வாறு திறங்காட்டும் திரையிசையை நாம் மறந்துவிடலாகாது. திரையிசை வடிவங்களிலும் வண்ணங்களிலும் இலக்கியச் செவ்வியலையும் கலைத்துறையாளர் அரவணைத்துக் கொள்ளவேண்டும்.
பாடும் கலைஞர்கள் ஆர்வலர்களைக் கருத்திற்கொண்டு பாடல்களில் சொற்சிதைவும், பொருட்சிதைவும் நேராவண்ணம் பாடுதல் நலமாகும். பாடும் வழக்கில் அருகிக் காணப்படும் இராகங்களையெல்லாம் முயன்று பயின்று, அவற்றை இசைக்கும் திறம் வளர வேண்டும்.

கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இலக்கியம் பயில்வோர் இசையைத் துணைப்பாடமாகப் பயிலவும் பாட அமைவுகள் உருவாக வேண்டும்.

வானொலி, தொலைக்காட்சியில் தமிழிசைப் பாடல்கள் முறையாகப் பயிற்றுவிக்க ஆவன செய்தல் வேண்டும். தமிழிலக்கியக் கல்விக்கும் இசைப்புலமைக்கும் இயைபு உருவாவதோடு இசையியலுக்கும் இசைக்கலைக்குமிடையே நீங்கா உறவு அமைய வேண்டும். இந்நிலையில் நுண்ணாராய்ச்சியாகத் திகழும் இப்பண்ணாராய்ச்சியைத் தொடர்ந்து நடத்திவரும் பெருமக்களைத் தமிழுலகம் என்றும் நன்றியோடு போற்றும்.

தண்ணார் தமிழ் வளர்க்கும் தஞ்சையில் தோன்றித் திகழும் தமிழ்ப் பல்கலைக்கழகமும் இயலாராய்ச்சியோடு இசைநலத்தையும் ஆராயும் நோக்கில் தமிழிசைத் துறை என்றே ஒரு தனித்துறையை நடத்துகிறது. தமிழிசைக் கல்லூரியைப் பல்கலைக்கழக வாகைப்புலத்தில் தனியாக நடத்த வேண்டுமென்பதும் எங்கள் நோக்கம்.

பல்கலைக்கழகத்தில், இசைக்கலையில் தோய்வும் ஆய்வும் நிரம்பிய அறிஞர் பெருமக்கள் ` ஏழிசைச் சூழல்` புகுந்து ஆய்வுப் பனுவல்களை வழங்கியுள்ளனர்.

‘‘நுண்ணலகுகளும் இராகங்களும் பஞ்சமரபில் இசை மரபு, பழந்தமிழர் ஆடலில் இசை’’ முதலிய அரிய நூல்களை வெளியிட்டுள்ளனர். வாய் மணக்கப் பாடி மகிழ்விப்பதுபோல, வளங்கெழுமிய தமிழிசையின் ஒழுகலாறுகளை வரைந்தெழுதும் திறமும் வேண்டற்பாலது. என்று நான் தொடக்கத்தில் கூறினேன். அவ்வகையில் ஆய்வாளர்கள் எழுதிய அருங்குறிப்புகள் பல எங்கள் ‘‘இலம்பாட்டால்’’ அச்சுவடிவம் காணாது தேங்கியுள்ளன. தமிழிசைச் சங்கம் இத்தகைய சுவடிகளை வெளியிட முன்வருமானால் தமிழ்ப் பல்கலைக்கழகமும் மகிழ்ந்து வழங்கும்

ஆண்டுதோறும் பண்ணாராய்ச்சிக் கருத்தரங்கு ஒன்றைச் `சதய` நாளையொட்டித் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நடத்துவது பற்றி நம் பெருமைக்குரிய தமிழிசைச் சங்கத் தலைவர் அவர்கள் பரிவோடு கருத வேண்டுகிறேன். தமிழிசை மேம்பாட்டினையும் தமிழிசைப் பண்பாட்டினையும் வளர்க்க உறுதி பூண்டுள்ள தமிழிசைச் சங்கத்தை மனங்கனிந்து வாழ்த்துகிறேன்.

தேமதுரத் தமிழிசையாகத் திருமுறை நல்லிசை நாடெல்லாம் பரவி ஓங்குமாக!

எந்தையார் மீது கொண்ட பரிவாலும் என்னை அழைத்து இப்பெரு வாய்ப்பு வழங்கிய பெருமக்களுக்கு என் மனம் கனிந்த நன்றி!
*

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *