POST: 2015-09-22T16:52:53+05:30

தமிழ் இசைச் சங்கம்
ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை-600 108
பண் ஆராய்ச்சியின் நாற்பத்து நான்காம் கூட்டம்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
22 – 12 – 1993
தொடக்கவுரை-19

பண்ணாராய்ச்சியோடு இசைத் தொடர்பான பல்வேறு கட்டுரைகள், இயலிசைப் புலவர்களின் (வாக்கேய காரர்கள்) வாழ்க்கைக் குறிப்புகள் இசைத்தொண்டு, சிலப்பதிகார இசை ஆராய்ச்சி, நாட்டிய இசை ஆராய்ச்சி, நாடகப் பாடல்களில் இடம்பெறும் இசை, நாட்டுப்புற இசை, கோயிலிசை மரபு, நவசக்தி நடனம் போன்ற ஆராய்ச்சிகளும் இசை வல்லுநர்களால் நம் மன்றத்தில் நடத்தப்பெறுகின்றன. மேலும் புதுவகையான குறவஞ்சி நாடகங்கள், ஆண்டுதோறும் அரங்கேறுகின்றன. இப்பணிகள் பெரிதும் பாராட்டத்தக்கன. இவை நாளும் தொடர வேண்டிய நற்பணிகளாகும்.

நமக்குக் கிட்டிய தேவாரப் பண்களாகிய 23 பண்களின் உருவங்களையும் தெளிவாகக் கண்டறிந்ததாகக் கூறவியலாது. பண்கள் பல ஒரே இராகத்தில் அமைந்திருப்பதைக் காணலாம். தனித்தனிப் பண்களாக இவை இருந்திருக்கவேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இப்பண்கள் இவ்வகையில் மேலும் ஆய்தற்குரியன.

பழமையான பண்ணாகவும், நாட்டுப்புற இசைவடிவத்தின் வகையாகவும் தோடி, தேவாரப் பண்ணிசையில் காணப்படவில்லை. ஆனால், வழக்கத்தில் தோடி இராகத்தில் பாடல்கள் சில பாடப்பெறும் மரபு காணப்படுகிறது. எனவே, தோடி இராகத்திற்குரிய பண் ஆராய்ந்தறியப்பட வேண்டியதாகும். திருநேரிசை, திருவிருத்தம், திருத்தாண்டகம் முதலியன யாப்பு வடிவங்களா? இசைவடிவங்களின் பெயர்களா? என்பதும் ஆராயத்தக்கன.

திருவிசைப்பாப் பண்கள் என்று ஆறு பண்கள் குறிக்கப்பட்டிருந்தாலும் ஆனந்தபைரவி இராகத்திலேயே பெரும்பாலும் பாடப்படுகின்றன. திருவாசகம் மோகன இராகத்தில் பாடப்படுவதாகக் கூறப்படுகிறது. தேவாரப் பண்ணிசையில் இவ்வாறு காணப்படவில்லை. திவ்வியப்பிரபந்தத்தில் பண்கள் குறிக்கப்பட்டிருப்பினும், வரம்பறுத்துப் பாடும் வழக்கம் இல்லாமையால் அவற்றைத் தெளிய முடியவில்லை.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *