தமிழ் இசைச் சங்கம்
ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை-600 108
பண் ஆராய்ச்சியின் நாற்பத்து நான்காம் கூட்டம்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
22 – 12 – 1993
தொடக்கவுரை-5
பண் இராகம் ; பண் என்பதற்குப் பொருளாகப் பஞ்சமரபு என்ற இசையிலக்கண நூலில்,
‘‘பாலோடு அணைதல் இசையென்றார் – பண்ணென்றார்
மேவார் பெருந்தானம் எட்டானும் – பாவாய்
எடுத்தல் முதலா இருநான்கும் பண்ணிப்
படுத்தமையாற் பண்ணென்று பார்.’’
(பஞ்சமரபு – இசைமரபு வெண்பா 50)
என்று தலை, மிடறு, நெஞ்சு, மூக்கு, இதழ், பல், நா, அண்ணம் முதலிய எட்டுத் தானங்களாலும் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பித்தல், குடிலம், ஒலி, உருட்டு, தாக்கு, முதலிய எட்டுச் செயன்மைகளைப் பிறப்பித்து ஓசைப்படுத்தலாற், `பண்` என்று பெயராயிற்று எனக் கூறப்பட்டது.
இனிமையான இசைத் தொடர்பு பூண்ட ஒலி உருவ அமைப்பைப் பண் என்று கூறலாம். ‘‘பண்ணுதல்’’ என்றால் ‘‘இயற்றுதல்’’ ‘‘செய்தல்’’ என்ற பொருள் நாமறிந்தது. பண்படுத்தப்பட்ட இசையொலித் தொடர்கள், வடமொழியில் அமைந்த `இராகம்` என்ற சொல்லொடு ஒத்தமைகிறது.
‘‘இராகம்’’ என்ற சொல் மதங்கரின் பிருஹத்தேசி (5ஆம் நூற்றாண்டு) என்ற வடமொழி நூலில் முதன்முதலில் காணப்படுகிறது. இராகம் என்பதன் விளக்கமாக, ‘‘அழகிய கமகங்களோடு கூடிய சுரக்கூட்டங்கள் என்றும், மக்கள் விரும்பக் கேட்டு இன்புறும் தன்மையது’’ என்றும் கூறினார். இராகம் என்ற சொல் சில பண்களின் பெயர்களில் இணைப்பாகக் காணமுடிகிறது. சான்றாக, அராகம், தக்க ராகம், பழந்தக்க ராகம், நாட்டராகம், மேகராகக் குறிஞ்சி முதலியன.

Add a Comment