POST: 2015-08-18T12:21:46+05:30

தமிழ் இசைச் சங்கம்
ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை-600 108
பண் ஆராய்ச்சியின் நாற்பத்து நான்காம் கூட்டம்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
22 – 12 – 1993
தொடக்கவுரை-3

தமிழிசைக்கு நேர்ந்த அவல நிலையைக் கண்டு வருந்திய கொடைவள்ளல், கல்வி வேந்தர் என நாம் கைதொழுது வணங்கும் அரசர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் நல்லறிஞர் பலரின் துணை கொண்டு தமிழிசை இயக்கத்தைத் தோற்றுவித்தார்.

ஆடினர்க்கென்றும், வாடினர்க்கென்றும், பாடினர்க்கென்றும் வரையாது கொடுத்த செந்தமிழ்ப் பெருவேந்தர் வழியில் அண்ணாமலை அரசர் தொடங்கிய தமிழிசைச் சங்கம் நிறுவப்பட்டுக் கடந்த ஐம்பதாண்டு காலமாக அரிய ஆக்கப்பணிகள் நிகழ்ந்துவருகின்றன.

ஏசுபெருமான் திருநாளையொட்டிய விடுமுறையும், மகளிர் பரவி மகிழும் பாவைத் திங்களான மார்கழித் திங்களும், திசம்பர் மாத நிறைவில் ஒருங்கிணைந்ததால் இசையரங்குகள் அங்கிங்கெனாதபடி கலைவளரும் தலைநகரான நம் சென்னையில் பொங்கி மலர்ந்தன.

தமிழிசைச் சங்கம் தமிழிசையரங்கை நடத்தி மகிழ்ந்தது. மக்கள் மனக்கவலை தீர்க்கும் மாமருந்தாக, நுண்ணறிவாற் கண்டு வரையறை செய்த பழந்தமிழ்ப் பண்களின் நுட்பமும் ஒட்பமும் சங்கத் தொகைநூல்களிலும் சிலப்பதிகார உரைகளிலும் இடம் பெற்றிருந்தன.

எனினும் உயரிய கலைச்செல்வங்களை உருச்சிதையாது காக்கும் திறனின்றித் தமிழகம் தேம்பிய நிலையில் திருமுறையாசிரியர் செய்த பத்திமை வாய்ந்த தமிழிசைத் தொண்டு தளர்ந்த தமிழிசைக்குச் சிறந்த வளமூட்டியது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *