சேக்ஸ்பியரின் சொல் ஆளுமைத் திறன்-9
33 அணிநலன்களில் சில பெரிதும் தெளிவற்றவை. மில்டன், கீட்ஸ் உட்பட ஏனைய கவிஞர்களால் புரிந்து கொள்ளவொண்ணாதவை. சேக்ஸ்பியருடைய நூல்களைக் கற்றுத் துறைபோகிய மேதைகளும், திறனாய்வாளர்களும், கவிஞர்களும், இலக்கண வல்லுநர்களும் அத்தகைய சிக்கலார்ந்த அணிநலன்களைப் புரிந்து கொள்வதில் மூளையைப் பிராண்டிக் கொண்டிருக்கின்றனர். சேக்ஸ்பியருடைய நுண்மாண்நுழைபுலத்திற்கு மட்டும் அத்தகைய அரிய அணிநலன்கள் எவ்வாறு எட்டின என்பதை அறிவியல் வல்லுநர்களாலும் விளக்க இயலாது. அத்தகைய மதிநுட்பத்தின் வீர விளையாட்டுக்கள் நம்மை சேக்ஸ்பியல் ஒரு மனிதப்பிறவி தானா அல்லது மானுட இயல் கடந்த தனிப்பெரும் பிறவியா என வியக்க வைக்கிறது. தி குயென்ஸி இவ்வாறு போற்றிப் புகழ்ந்ததில் வியப்பொன்றுமில்லை.
‘‘ஓ, பேராற்றல் மிக்க பெருங்கவிக்கோ! உனது படைப்புகள் கலையழகுடனும் கவிநயத்துடனும் படைக்கப்பட்ட ஏனைய பெரும் புலவர்களுடைய படைப்புகளைப் போன்றவை என எளிதாகச் சொல்லிவிட இயலாது. பகலவனின் பேரொளிப் பிழம்பு, ஆரவாரிக்கும் அளப்பரிய பெருங்கடல், விண்ணெங்கும் வாரி இரைக்கப்பட்ட விண்மீன் கூட்டம், பூத்துக் குலுங்கும் வண்ண மலர்த் தோற்றம், பொழிந்துறைந்த பனித்திரள், பெய்யெனப் பெய்த மழை, மரஞ்செடிகளின் இலைகளில் திரண்ட திவளைகள், சுழன்றடிக்கும் சூறாவளி, பெருங்குரலெடுத்துறுமும் இடியேறு போன்ற இயற்கைத் திருநடனங்களை ஒத்தவை; புலனனைத்தையும் அடக்கி ஒடுக்கி முழுச் சரணடையும் பொழுது மட்டிலுமே மூளைக்கு எட்டக் கூடியவை!’’

Add a Comment