நாட்டில் உரிய காலத்தில் மழைபெய்யாது போயினும், மக்கள் தவறு செய்தாலும், இவ்வுலக மக்கள் அரசனைப் பழித்துரைப்பார்கள். இப்பழிமொழி தம்மை அடையாதபடி
குடி மக்கள் தரும் வரிப்பொருளைப் பெற்றுக்கொண்டு முறையற்ற செயல்கள் தம் நாட்டில் நிகழாதபடி நாட்டு மக்களைக் காப்பாற்றும் நல்ல அரச குடும்பத்திலே பிறப்பதனை மகிழ்ச்சிக்குரிய செயலாகத் தமிழ் வேந்தர் எண்ணினாரல்லர்.
“ மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம்!
பிழையுயி ரெய்திற் பெரும்பே ரச்சம் !
குடிபுர வுண்டங் கொடுங்கோல் அஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்ப மல்லது தொழுதகவு இல்.“ -சிலப். காட்சி, 100-104
எனச் சேரர் பெருமான் செங்குட்டுவன் கூறியதாக அமைந்த அனுபவமொழி, முடிவேந்தர்கள் ‘குடி தழீஇக் கோலோச்சும்“ முறையின் அருமையையும், அதனால் அரசர்க்குண்டாகும் கவலைகளையும் நன்கு விளக்குவதாகும்.
டாக்டர் ஔவை நடராசானர்

Add a Comment