அகத்திணைக்கு ஓர் அணிகலன்
ஔவை நடராசன்
முன்னாள் துணைவேந்தர்
திருக்குறளில் இன்பத்துப்பாலும் ஒன்று காமத்துப்பால் என்று இதனைக் கூறுகின்றோம். காமம், காம இச்சை, காமக் களியாட்டம் என்னும் போது. அது வெறுக்கத்தக்கது என்ற ஒரு கருத்து நிலவுகிறது. ‘மலரினும் மெல்லிது காமம்‘ என்று தானே இலக்கணம் புனைகின்றார். கலை நலம் வாய்ந்த காமத்தின் உண்மை அறிந்து அதன் பயனறிகின்றவர் சிலரே என்பது பொருள். அழகின் வடிவமே காமம் அறத்தில் கனிவதும் காமம். காமாட்சி, சிவகாமி என்ற பெயர்களில் உயர்நிலைப் பண்பையும், அச் சொற்களில் உணரலாம்.
காமம், காதல் என்ற இரு சொற்களும் ஒரே பொருண்மையுடையதாகவும் கருதலாம்.காதல், காமம் என்ற இரண்டு சொற்களும் நெடுங்காலமாக வழங்கப்படுகின்றன. உயர்ந்த உறவுகளைக் காதல் என்ற சொல்லோடு இணைத்துச் சொல்வது வழக்கம். உள்ளத்தோடு ஒட்டிய தொடர்பையே காதல் என்று குறிப்பிடலாம். பாலுணர்வை நினைக்கும்போது, உடம்பு தழுவிய இணைப்பையே பெரிதும் கருதுகிறோம். ஆகவே, உடல் உணர்ச்சியைக் காமம் என்ற சொல்லால் குறிப்பிட்டனர். காமம் என்பது பருவ எழுச்சி, மெல்லிய உடல் உணர்ச்சி, காதலில் உடற்கலப்பு அடங்கியிருந்தாலும், காமத்தைப்போல உடற்கலப்பு மீதூர்ந்து நிற்பதில்லை என்று மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் வலியுறுத்தினாலும், காதல் என்ற சொல்லில் காமப் பொருளும், காமம் என்ற சொல் வந்த இடத்தில் காதற்பொருளும் உண்டு எனக்கொள்ளவும் இடமுண்டு. இரு சொல்லின் பொருளையும் இணைத்துக்காட்டும் ஒரு தமிழ்ச்சொல் உண்டென்றால் அதனை அகம் என்று குறிப்பிடலாம் என்றார்.காமத்தை அறத்தில் கனிந்ததாகக் கருதினால் அது காதலாகும். தவறினால் அது வஞ்சக வலையாகும். வானுயர்ந்தவர்களும் அந்த வலையில் தலை கவிழ்ந்து சிந்தை தடுமாறுவார்கள். இந்த நிலையில் வாழ்க்கைக்கு விளக்கம் தரும்வகையில் புதிரா? புனிதமா? என்னும் இந்த நூல் பொலிவோடு வெளிவந்துள்ளது.
தொலைக்காட்சியில் பல்லாயிரக்கணக்கானவர் காத்திருந்து கண்டு மகிழும் மனநல மருத்துவர் டாக்டர் மாத்ருபூதம் அவர்களால் அளிக்கப்பெற்ற நல்ல தொடர் இது என்றே கூறலாம். பாரெங்கும் பாலியற் படிப்பு பரவி வருகின்றது. இதனை அறிவும் ஆர்வமும் இளைஞரிடையே பெருகி இளநகையமையப் பாலுணர்வை ஆராய்ந்து காட்டி பலரின் வினாக்களுக்குத் தெளிவான விடைகளை வழங்கி, அனைவரின் மனத்திலும் நீக்கமற நிறைந்த பெருமை, அருமை நண்பர் டாக்டர் மாத்ருபூதத்தின் தனித்திறமையாகும். ‘பாலியல் கூட்டம் பற்றி மட்டும்தான் சொல்லித் தரப்போகிறீர்களா? என்ற கேள்விக்கு பாலியல் பண்பாட்டை ‘வாழ்க்கையில் பாலியல் பெறும் பங்கைப் பற்றியும் சொல்லப் போகிறோம். ‘ஆறிலிருந்து அறுபதுவரை அன்றாட வாழ்வில் மக்களுக்குள்ள அனைத்துச் சிக்கல்களையும் ஆராய்ந்து பார்ப்போமே என்று தொடங்கும் மருத்துவக் களஞ்சியமாக, பாலியற் பனுவலாக, மணமக்களுக்கு வழங்கத்தக்க மகிழ்ச்சித் திறவுகோலாக ஆங்கிலம், தமிழ்வழக்குச் சொற்கள் பலந்த பலப்பு நடையில் இந்நூலை எழுதிக்காட்டிய ஆசிரியருக்கு நன்றி பாராட்டலாம்.
கண்ணெதிரே தோன்றி அவர் வழங்கிய வாய்மொழியே எழுத்தாக வடிவம் பெற்றுள்ளது. இல்லற வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்கள் குறித்து, இலக்கியச் செய்திகளோடு மருத்துவ விளக்கங்களையும் புதுமைகளையும் இணைத்துக் கூறும் டாக்டர் மாத்ருபூதம் பொருத்தமான திருக்குறளையும், திரைப்படப் பாடல்களையும் நகைச்சுவைத் துணுக்குகளையும் ஆங்காங்கே கட்டுரைகளில் தெளித்து நயமான இந்நூலுக்கு நறுமணம் சேர்த்திருக்கிறார். கருத்தடை முறைகள் ஒரு பயனுள்ள பகுதி. கருத்தடை உளவியல் குறித்து இல்லறத்தார் தெரிந்து கொள்ள வேண்டியது இன்றிமையாத கல்வியாகும். ஒரு குழந்தை எப்படி உருவாகிறது? என்னும் கூறுபாட்டையும், சோதனைக் குழாய்‘ குழந்தைகள் குறித்தும் கூறப்படும் மருத்துவக் குறிப்புகள் விழுமியவை ஆர்வம் ததும்ப மக்கள் கேட்கும் உடற்கூறு தொடர்பான இடக்கான வினாக்களுக்கெல்லாம் மனம் கோணாது நுணுக்கமான செறிவான பதில்களைக் கூறி, இல்லறவாழ்வு நாட்டில் இனிதாக அமைய நூலாசிரியர் வழிகாட்டுகின்றார்.
‘அரிது அரிது மானிடர் ஆதல் அரிது‘ என்பர். மானிட வாழ்வை நாம் மதித்து நடக்கின்றோமா? நடைமுறையில் நமக்குள் எத்தனை வேற்றுமை? உயர்வென்றும், தாழ்வென்றும் ஏழை என்றும், சொல்வந்தன் என்றும்,செயற்கரிய செய்வாரென்றும், செய்யாதார் என்றும் எத்தனை மேல் கீழ் உள்ளன ! எவை எப்படி இருந்தாலும், எல்லாத் திறத்தார்க்கும் உடலை ஓம்புதல் என்பதில் கடுகளவும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. திருமணத்துக்கு முன்னும் பின்னும் உடலைப் பேணி வளர்க்கும் பெற்றிமையை நாம் பெற்றிருக்கிறோமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். பாலுணர்ச்சி என்பது இல்லறத்துக்கு முன்னும் பின்னும் இயல்பாக விளையும் உடல் உணர்வு என்றாலும், கண்ணும் கருத்தும் வைத்து, விழிப்போடு செயற்பட்டால் உடலுக்கு வரும் இடர்ப்பாடுகளை நாம் எளிதில் களையலாம். இவ்வாறு வருமுன் காக்கும் வாழ்க்கை ஏடாக இந்தப் பாலொழுக்கக் காவியத்தை நாம்பாராட்டி மகிழலாம். பால்வினை நோய், தேய்வு நோய் மற்றும் உடல் நோய்களெல்லாம் எப்படி மக்களைப் பாழாக்குகின்றன என்பது குறித்து மருத்துவர் கூறும் கருத்துரைகள் மாட்சியுடையன. ஒரு வகுப்பில் ஆசிரியர் நடத்தும் பாடம்போல வினா விடையாகச் செய்திகளை ஆசிரியர் சுவையாக வரைந்துள்ளார். எனவே, டாக்டர் மாத்ருபூதம் வழங்கும் இந்நூலை மாத்ருபோதம்‘ என்றே நாம் அழைத்து மகிழலாம்.மன மயக்கங்களுக்கு மருந்து தரும் வகையிலும், சிலர் தயக்கங்களுக்குத் தன்னம்பிக்கையூட்டும் நிலையிலும், இளைஞர் கலக்கங்களுக்கு நல்வழி காட்டும் வகையிலும் டாக்டர் மாத்ருபூதம் ‘புதிரா? புனிதமா?‘ என்னும் நூலைத் தக்க சான்றுகளோடும், ஆராய்ச்சி நோக்கோடும் வழங்கியிருக்கிறார்
.காதலர்க்குத் தோன்றும் நிறைவான நல்லுணர்வு, கொடுமையான புல்லெழுச்சி, உணராக்கேடு, ஐயச்சிந்தனை, திரிபுப் போக்கு, வழுவமைவு, வேட்கையளவு, உடற்கூறு முதலிய பாலியத்தின் நுணுக்கங்களை விடை விளக்கங்களாக இந்நூலில் பரக்கக் காணலாம். அவ்வாறே மன, குணநல மருத்துவத் திலகம் மாத்ருபூதத்தின் நுண்மான் நுழைபுலத்தையும் அறிந்து வியக்கலாம்.காலமெல்லாம் மக்களினம் அவருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது. டாக்டர் மாத்ருபூதம் அவர்களின் மருத்துவத் தொண்டு வளர, வாழ, தொடர்ந்து வழிகாட்டும்பாங்கோடு மிளிரும் என்பதில் ஐயமில்லை. இல்லற வாழ்வைச் செவ்விய வழியில் நடத்திச் சிறப்படைய வேண்டும் என்பது நூலாசிரியரின் குறிக்கோளாகும். மக்களின் மனை வாழ்வும், மன உணர்வும் ஒழுங்குபடத் திகழவேண்டும் என்பதாலேயே சங்க இலக்கியத்தில் காதல் நெறியை இரண்டாயிரம் செய்யுட்களாக நானூறு புலவர்கள் எழுதிப் பாலொழுக்கப் பாடல்களாக அகத்திணையை அழகு செய்தனர். அந்தத் தொன்மையான வரம்பினை இன்றைய நிலைக்கு ஏற்ற வகையில் புதிரா? புனிதமா? என்ற பெயரில் என்ற பெயரில் டாக்டர் மாத்ருபூதம் விளக்கி வரைவதில் தன்னிகரற்று விளங்குகிறார்.
கலைநலம் மிளிரும் கவினார்ந்த நூல்களை வெளியிட்டு மகிழும் கற்பகம் பதிப்பகத்தாரையும், அறிவியல் சார்ந்த அகப்பொருளுக்கு ஓர் அணிகலனாக இந்த நூலைப் படைத்த டாக்டர் மாத்ருபூதம் அவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த நூலைத் தமிழுலகம் போற்றிப் பாராட்டும் என்பது என் துணிபு.

Add a Comment