அம்மூவனார்-2
பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன்
இவர் பாடியவற்றுள் நற்றிணையில் 35ஆம் செய்யுளாகிய ‘பொங்குதிரை பொருத“ என்பதில் ‘துறைகெழு மாந்தை‘ எனவும் 394-ஆம் செய்யுளாகிய “யாரே யெலுவ“ என்பதில் “குட்டுவன் . . . . .கடல் கெழுமாந்தை“ எனவும். ஐங்குறு நூற்றில் 178ஆம் செய்யுளாகிய “தோளுங் கூந்தலும்“ என்பதில் ‘செங்கோற் குட்டுவன் தொண்டி“ எனவும், அகநானூற்றில் 10 ஆம் செய்யுளாகிய “வான் கடற் பரப்பின்‘ என்பதில் ‘வளங்கெழு தொண்டி‘ எனவும், குறுந்தொகையில் 163 ஆம் செய்யுளாகிய “யாரணங்குற்றனை“ என்பதில் ‘பூழியர்‘ எனவும் , ஐங்குறு நூற்றில் 188 ஆம் செய்யுளாகிய “இருங்கழி‘ என்பதில் ‘கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை‘ எனவும் வந்திருப்பனவற்றால் தமிழ் நாட்டிலிருந்த முடி மன்னர்களுள் சேரனொருவனும், பாண்டியன் ஒருவனும் இவரால் புகழப்பட்டுள்ளார்கள் என்று மட்டும் தெரிகின்றதன்றி அவர்களுடைய சிறப்புப் பெயர் கூறப்படாமையால் இன்ன சேர அரசன் காலத்தினரென்றாவது, இன்ன பாண்டியன் காலத்தினர் என்றாவது இவரைக் கூறுதற்கிடமில்லை. அகநானூற்றில் 35 ஆம் செய்யுளாகிய ‘ஈன்று புறந்தந்த‘ என்பதில் ‘துஞ்சா முழவிற் கோவற் கோமான் நெடுந்தேர்க் காரி‘ கொடுங்கான் முன்றுறைப் பெண்ணையம் பேரியாற்று நுண்ணறல்‘ என்று வந்திருப்பதைக் கொண்டு இவர் பெண்ணையாற்றங்கரைக் கண்ணதாகிய கோவலூரில் இருந்தவனும், கடையெழு வள்ளல்களில் ஒருவனுமான மலையமான் திருமுடிக்காரியென்னும் சிற்றரசன் காலத்தினர் என்றும் நினைக்கப்படுகிறார். தமிழ் நாட்டரசர்களுள் சேரன், பாண்டியன் என்னும் முடியுடைவேந்தர் இருவராலும், திருக்கோவலூரையாண்ட காரியென்னும் வள்ளலாலும் ஆதரிக்கப் பெற்றவர்.

Add a Comment