சன் தொலைக்காட்சி-5.1.2015
விருந்தினர் பக்கம்
பாட்டுக்கொரு புலவன் பாரதியாரினுடைய 133-ஆவது பிறந்தநாளை நாம் சிறப்பாகக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். அந்தவகையில் பாரதியைப் பெருமைபடுத்தும் விதமாக இன்று பாரதி மீதும் தமிழ் மீதும் பற்றுகொண்ட நபர்தான் இன்று நம்மிடையே வந்திருக்கிறார். ஆம், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசன் அவர்கள் வந்திருக்கிறார்.
வணக்கம்.
1)என் பார்வையில் பாரதி என்ற தலைப்பில் உங்களுடைய வரிகளைக் கேட்க ஆசையாய் உள்ளது.?
‘பொதுவாகவே கதிரவனைக் கைதொழுது பாடுவது’ என்பது பாரதியினுடைய ஒரு கவிதையினுடைய கருப்பொருளாகும். இளமை ததும்புகின்ற நீங்கள் இருவரும் பாரதியை நினைவுகூர்ந்து கேட்பது எனக்குப் பெருமிதமாக இருக்கிறது. நீங்கள் சொன்னதுபோல ‘பாட்டுக்கொரு புலவன் பாரதி’ என்ற ஒரு தொடரே போதும் தேசிய மாகவி பாரதியின் பெருமையை எடுத்துச் சொல்வதற்கு.
இதிலேகூட ஒரு வேடிக்கை என்னவென்றால், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை என்பவர், நாகர்கோயில் பக்கத்தில் ‘குமரியில் இருந்து கூவிய குயில்’. மிக முதிர்ந்தவர். அதிர்ந்து பேசாதவர். அன்போடு குழைவாக எளிமையாகப் பாடல்களைப் பாடுகின்றவர். அவர் வாய் திறந்தால் வெண்பா தானாகவே பிறக்கும் என்று சொல்வார்கள். கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை எழுதிய பாடல்களையெல்லாம், நீங்கள் சொன்னபிறகு நினைத்துப்பார்த்தால்,
பாப்பா பாப்பா அருகில் வா
பாயுது பார் ஒரு பசுமாடு
என் அம்மா, என் குழந்தை
அதிர்ந்து பேசமாட்டார். தம்பி, தங்கை, அண்ணன், அக்காள் என்றுதான் அழைப்பார். என்னவோ ஆயிற்று அவருக்கு ஒரு நாள் அவருக்கு. பாரதியார் கவிதைகளைத் தொட்டிருக்கிறார் போலத் தெரிகிறது. பாரதியார் கவிதைகளைத் தொட்டாலேயே ஒரு மிடுக்கும் துடுக்கும் தானாகவே பிறக்கும்போலிருக்கிறது. அவர் யாரையும் அடா என்றே கூப்பிட மாட்டார். பாட்டுக்கொரு புலவன் பாரதி என்று எழுதினார். ‘பாட்டுக்கொரு புலவன் பாரதியடா!’ அவருக்கே ஒரு சந்தேகம் வந்துவிட்டது. நம்மபாட்டு இப்படி வராதே என்று. சரியென்று
அவன் பாட்டை ஒருவன் பண்ணோடு பாடினானேடா!
கேட்டுக் கிறுகிறுத்துப்போனேனேடா!
அந்தக் கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா!
எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால், அந்த பாரதியார் கவிதைகளையெல்லாம் சொல்லத் தொடங்கினாலேயே தன்னுடைய உடம்பில் ஒரு பெரிய முருக்கும், எஃகு நரம்பும் ஏர் கழுத்தும் ஏற்பட்டு ஒரு விடுதலை உணர்ச்சி பாட்டு பாடுகின்ற ஒரு ஆவேச பாடல்களின் தொகுதி என்று சொன்னால் மிகையாகாது. அதனால்தான் இதைக் குறிப்பிடுகிறேன்.சுதந்திர உணர்ச்சி பொங்கிக் கொண்டிருந்த நேரத்தில் விடுதலை வேட்கை ததும்ப பாடிய பாடல்.புரட்சிக்கவிஞருடைய நடையில் சொல்வதென்றால்,
‘புதுநெறி காட்டிய புலவன்
எனக்கு வாய்த்த தலைவன்’
என்று பாடுகிறார்.
‘பைந்தமிழ்த் தேர்ப்பாகன்
செந்தமிழ்த்தேனீ
சிந்துக்குத் தந்தை
குவிக்கும் கவிதைக் குயில்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு
நீடுதுயில் நீக்க பாடிவந்த நிலா
காடுகமழும் கற்பூரச் சொற்கோ
கற்பனையின் ஊற்று
கதையின் புதையல்
அறம்பாட வந்த அறிஞன்
மறம் பாடவந்த மறவன்
மண்டும் மதங்க அண்டாத நெருப்பு
அயலார் எதிர்ப்புக்கு அணையாத விளக்கு
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்
தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
பாரதியால் தமிழ் தகுதி பெற்றதும்’
என்று பாடியிருக்கிறார். இதைவிட பாரதிக்குப் புகழ்ப்பாடல்களை நம்மால் சொல்லமுடியாது.இன்றைய நாள் அவருடைய பிறந்த திருநாள். 133-ஆவது திருநாளை நாம் பெருமிதமாக நினைக்க கடமை பட்டிருக்கிறோம். கவிஞர்கள் என்று சொன்னாலேயே, ஆங்கிலத்தில் என்ன சொல்வார்கள் என்றால், அவர்களுக்கு ஒரு பெண்மை இருக்கும் என்பார்கள். அது அவர்களிடம் உள்ள பழக்கம். அவர்கள் பைரனை, ஷெல்லியை, மில்டனை எல்லாம் நினைத்துச் சொல்லியிருக்கிறார்கள். நான் நினைக்கிறேன். மில்டனுக்கு என்ன பெயர் தெரியுமா? Lady of the College. அப்படியிருப்பார்கள். ஆனால் பாரதியாரைப் பார்த்தாலேயே அந்த முறுக்கிய மீசையும், வாய்திறந்தால் பொங்குகின்ற ஆசையும், தலையில் கட்டியிருக்கிற முண்டாசையும் நினைத்துப் பார்த்தால் ஒரு வீரம் செறிந்த, ‘வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ’ என்று பேசுகின்ற அந்தக்குரல் நம் காதில் ஒலித்துக்கொண்டிருப்பதுபோலவே இருக்கிறது. பாரதியாரை நாம் நினைப்பதற்கு தமிழகத்தில் நாம் தேசிய மாகவி என்று நாம் அழைக்கின்ற பெருமை பாரதியாரைத்தான் சாரும். பாரதியார்தான் பல புதுமைகளைச் செய்துகாட்டியிருக்கிறார். நான் ஒன்று சொல்கிறேன். நாமெல்லாம் இப்போது பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அறிவு பரப்புகின்ற இடங்களிலேயெல்லாம் முதற்பாடலாகப் பாடுகின்றோமே ‘நீராருங் கடலுடுத்த…..’ இந்தப் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்து என்று மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய பாடல். அப்போதுதான் தமிழ்த்தாய் என்று சொல்கின்ற வழக்கம் வந்தது. தமிழண்னை, தமிழணங்கு என்று சொல்வார்கள். இந்த அடிப்படையிலே பாருங்கள். இந்திய நாடு முழுவதையும் ஒன்றாகப் பார்க்கிற பாரதமாதா, பாரதஅன்னை, பாரதஅன்னைக்கு தசாங்கம் என்றெல்லாம் பாடுகின்ற சுதந்திரதேவி என்று சொல்லுகின்ற உணர்வை பாரதியார்தான் முதன்முதலாக ஏன் இந்திய நாட்டிலேயே பாடிக்காட்டியவர் என்று பெருமிதமாகச் சொல்லலாம்.என்னுடைய நண்பர் அமெரிக்காவிற்குப் போயிருந்தார். தன்னுடைய பேரனைப் பார்க்க. பேரனை அழைத்துக்கொண்டு நியூயார்க் நகரத்தில் அந்த விடுதலைச் சிலை இருக்கிறது. அந்தச் சிலையைப் பார்த்த உடனேயே அந்த இளம்பிள்ளை இந்த ஊர் கோயில்களைப் பார்த்து வழிபட்ட பழக்கம் இருப்பதனால் தன் இரண்டு கைகளையும் கும்பிட்டு அந்தச் சிலையை வணங்கினான். அது பெரிய கதை. பிரெஞ்சு நாட்டு மக்கள் அன்பளிப்பாகத் தந்தது. உடனே அவர் உடம்பு சிலிர்த்துப் போய், ‘சுதந்திரதேவி நின்னை தொழுதிட மறக்கிலேனே’ இது பாரதியாருடைய தொடர். இந்த நாட்டினுடைய விடுதலையை ஒரு அன்னை வடிவமாகப் பார்த்து ‘சுதந்திரதேவி நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே’ என்று பாடி இந்த நாட்டு உணர்ச்சிக்கு நம்முடைய நரம்புகளில் முறுக்கேற்றி நரம்புகளை இரும்பாக்கி நரம்பையெல்லாம் உணர்வாக்கி என்று சொல்லுவதுபோல பாரதியாருடைய பாடல்தான் ஒரு முழுமையான இந்திய வடிவத்தையே காட்டுகிறது. வாழிய செந்தமிழ் இது நமக்குத் தெரியும். நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம். நம்மோடு கூட இருக்கிறவர்களுக்கெல்லாம் பெயர் உண்டு. வாழ்க நற்றமிழர் இது எங்கு போய் முடிகிறது என்றால் வாழிய பாரத மணித்திருநாடு. வாழிய செந்தமிழ் இது ஒரு பெரிய உரிமை. வாழ்க நற்றமிழர் என்பது உரிமை. இது இரண்டும் கலந்த பெருமை என்பது இந்திய நாட்டு ஒருமை. என்று ஒரு புது நாட்டு உணர்ச்சியை. அதற்கு முன்னால் சங்க இலக்கியங்களில் இப்படி இந்திய நாடு முழுவதையும் காண்கின்ற ஒரு வழக்கம் இருந்ததில்லை. அவர்களுக்கு நாட்டின் எல்லையைச் சொல்வதிலேகூட பல இடங்களில் வேறுபட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அந்தப் பற்று இருந்தது. பாரியினுடைய மலைக்குப் பெயர் பறம்புமலை. அந்தப் பறம்பு மலை தந்த அன்பும், அது விளைந்த விளைச்சலையும் கண்டு அதனுடைய வறம்பில்லாத அன்பை நினைத்துக் கபிலர் இந்த மலையை விட்டு நீங்கும்போது அந்தக் கல்லைப் பார்த்து,
‘ஈண்டு நின்றோற்கும் தோன்றும்
சென்று நின்றோற்கும் தோன்றும் மன்ற
நீ பட்டாங்கு ஈயும் பெருவளம் படுதி நட்டனை மன்னோ!’
எனவே கல்லையும் புல்லையும் பார்த்து கூட இது எங்கள் பகுதியிலே இருந்த கல், எங்கள் பகுதியிலே வளர்ந்த புல் என்று நினைக்கின்ற பழக்கம் போல, பாரதியாருக்கு மனம் எவ்வளவு விரிந்து ‘மன்னும் இமயமலை எங்கள் மலையே’ என்பார்.
2)பாரதியாரின் இளமை பருவத்தைப்பற்றி நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். அவருடைய தந்தை அவரை கணக்குப்பிள்ளையாக ஆக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அவர் பிள்ளைக் கவி ஆகிவிட்டார். அதைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களே….
எப்போதுமே தந்தை நினைப்பதுபோல பிள்ளைகள் பெரும்பாலும் வளர்வது இல்லை போக்கும் இல்லை.பாரதியாருக்கு அந்தப் பாட்டு வரம் என்பது இளமையிலேயே எப்படியோ வாய்த்தது. அவர் இளம்பருவத்திலேயே பாடல் எழுதினார். காந்திமதி நாதனை பாரதி சின்னப்பயல் என்ற கழ்ச்சியைக் கேட்டிருப்பீர்கள். அவர், எட்டையபுரத்துச் சூழலில் வளர்ந்ததனாலும் அதுவும் நெல்லை பகுதி என்பது தமிழ் வளர்ந்த ஒரு கொல்லைப் பகுதி என்று சொல்லலாம். நெல்லையில் அந்த பொருணை ஆற்றில் வாழ்கின்ற மக்களுக்கு இயல்பாகவே தமிழ்க்காதலும், தமிழார்வமும் பொங்கி வழிந்திருக்கிறது. அவர் எட்டையபுரத்தில் இருந்தது மட்டுமல்லாமல் அவருடைய தந்தையார் அழைத்துக் கொண்டு போனதனால், எட்டையபுரத்தில் இருந்த அந்த குறுநில மன்னனுடைய அவைக்குச் செல்வதும், அங்கு புலவர்கள் வருவதையும் போவதையும் கண்டு அவருக்குத் தமிழார்வம் இயற்கையிலேயே பிறந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அவர் சொல்கிறார். நான் போய் விரும்பியிருப்பதெல்லாம் பாடல் எழுதுவதுதான். என்னைப்போய் படிக்க வைக்கிறார்கள். படிக்க வைத்தால் கூட பரவாயில்லை. என்னை ஆங்கிலக் கல்வி படிக்க வைக்கிறார்கள். தமிழ் படிப்பதற்கு அவர் சொல்கிறார், தொழுது படித்திடடி பாப்பா! என்கிறார். நம்முடைய பிள்ளைகள் அழுதுங்கூட படிக்க மாட்டேன் என்கிறார்.
3)சாதிகள் இல்லையடி பாப்பா! என்று பாடல் பாடியுள்ளார். சாதிகள் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டுமென்று மிகவும் பாடுபட்டிருக்கிறார் பாரதியார். அதைப் பற்றித் தங்கள் கருத்து?…
ஒரு சிந்து பாடுகின்ற கவிஞர் மட்டுமல்ல. ஒரு சீர்த்திருத்தம் விரும்பிய புரட்சிக்கவிஞர் என்று நாம் அவரை அழைத்தால், அதிலே குறையே இல்லை.
சாதிகள் இல்லை. சாதி மதங்களைப் பாரோம். வேதியராயினும் ஒன்றே!
மற்று வேறுகுலத்தினராயினும் ஒன்றே!
சாதிகளைத் தூள் தூளாக்குவோம்.
மண்டும் மதங்கள் அண்டாத நெருப்பு,
அயலார் எதிர்ப்புக்கு அணையாத விளக்கு’
என்று நான் முதலிலேயே சொன்னேன். சாதி வேறுபாடுகளைக் களைந்தால்தான் விடுதலையினுடைய முழுவடிவம் கிடைக்கும் என்று பாடிக்காட்டியவர் பாரதியார்.நிற்பவர்கள் எல்லோரும் அந்தந்த நாட்டு உரிமையோடும் அந்தந்த நாட்டு மக்கள் என்ற பெருமிதத்தோடும் ‘கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர், நம்பற்குரியர் அவ்வீரர்’ என்று சொல்லி, ஆண்பெண் நிகர், சாதிமதம் இல்லாத இனம், சமத்துவ வாழ்வு, அந்த உணர்வினாலே தான், அவர் ரஷ்யாவில் நடந்த புரட்சியைப் பார்த்து, மாகாளி கடைக்கண் வைத்தால் அங்கே! எனவே மாகாளி கடைக்கண் வைத்தால், சமதர்மம் தானாகப் பிறக்கும் என்ற கருத்திலே நம்பிக்கை உடையவர் பாரதியார்.
4)தாங்கள் சிறந்த மொழிபெயர்ப்பாளர், உங்களுடைய பார்வையில் பாரதி எத்தைய மொழி பெயர்ப்பாளர்?…
பாரதியார் தன்னுடைய கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அவர் சொல்கிறார். அந்தப் பாடலை ஒரு முறைக்குப் பலமுறை படித்து அந்தக் கருத்தை மனதிற்குள் அமைத்துக்கொண்டு அதைத் தமிழ் வடிவிலேயே தருவது என்கிற வகையிலேதான் சீன, ஜப்பானிய கவிதைகளை அவரால் மொழிபெயர்க்க முடிந்தது. உபநிடதங்களுடைய சாரத்தையும் வேதங்களுடைய சாரத்தையும் அந்த ஓம குண்டத்தின் அருகில் இருந்து முனிவர்கள் பாடுகின்ற பாடல்களை மொழிபெயர்ப்பது என்கின்ற நுட்பமான மொழிபெயர்ப்பைச் செய்திருக்கிறார். நான் போய் அந்த கூட்டத்தில் அமர்ந்திருந்தேன். Member என்பதற்கு என்ன தமிழ்ச்சொல் என்னவென்பது தெரியவில்லை. ஆங்கிலத்திலே தன்னுடைய கவிதையை மொழிபெயர்க்கின்ற சூழல் வந்தபோது ஆங்கிலப் பாடல்களை மொழிபெயர்க்கத் தொடங்கியபோதும் அவர் சொல்கிறார், நான் இந்த ஆங்கிலப் பாடல்களை மொழிபெயர்க்கும்போதுதான், என்னுடைய தமிழின் அருமை எனக்குத் தெரிந்தது. புதிய சொற்களை என்னால் படைக்க முடிந்தது. மொழிபெயர்ப்பாளர் என்ற வகையிலே அந்த நிகழ்ச்சியை அவர் எழுதுகிறார். Member என்பதற்கு என்ன சொல்வதென்று பார்த்தால், அங்கத்தினர் என்று சொன்னார்கள். Member என்பதற்கு ஆங்கிலத்தில் உறுப்பு என்று பொருள். அப்போது அங்கத்தினர் என்ற சொல் எனக்குப் பிடிக்கவில்லை. உறுப்பினர் என்ற சொல்லை யாரும் சொல்லவில்லை. இப்போதைக்கு Member என்றே எழுதுகிறேன். அந்த மனம் பாருங்கள், ‘யாமறிந்த மொழிகளே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ அதனுடைய பொருளே என்னவென்றால், எனக்கு எவ்வளவு மொழிகள் தெரிந்தாலும்கூட, என்னுடைய தாய்மொழியை நினைக்கின்றபோது, அது எனக்கு வயப்படுவதுபோல மற்றமொழிகள் வயப்படுவதில்லை என்ற கருத்தில் மொழிபெயர்ப்பிலே அவ்வளவு வன்மையோடு இருந்திருக்கிறார்.ஆத்திச்சூடி எழுதுகிறார். குழந்தைப்பாட்டு அது. ஔவையாரைப் போல நான் அறிவிற் சிறந்தவரை நான் காண்பதற்கு இல்லை. வாய்ப்பு இருக்குமானால் ஔவையாருடைய நூல்களையே நாம் மீண்டும் படிக்க வேண்டும் என்று எழுதுகிறார். ஔவையாரைக் கலைமகளின் வடிவம் என்று புனைகிறார். கவலையில்லாமல் ஔவையார் எழுதிய ஆத்திச்சூடியைப் பல இடங்களில் முரண்படுகிறார்.தையற் சொல் கேளேல் ஒரு பாட்டு. பாரதியார் சொல்கிறார்.
தையலை உயர்வு செய்
இன்னொன்று
ஆறுவது சினம்
விடுதலை போருக்கு நிற்கின்றவர்களைப் பார்த்து ஆறுவது சினம் என்று கூறுவது எப்படி பொருந்தும்.
ரௌத்திரம் பழகு
முனைமுகத்து நில்லேல்
இது ஔவையார் சொன்னது.
முனைமுகத்து நில்
வேதப் புதுமை செய்
இது ஔவையார் சொன்னது. உணவை அதிகமாக உண்ணாதீர்கள். பாதியார் நினைக்கிறார், உணவை அதிகம் உண்ணாதீர்கள் என்று சொல்லலாமா? நன்றாக உண்டு கொழுத்து, அவர்கள் தோளும், கையில் வைத்திருக்கின்ற வாளும் அஞ்சாமைக்கு அறிகுறிகளாக இருக்கின்றபோது இது எப்படிப் பொருந்தும்.
ஊண் மிக விரும்பு
இதுபோல ஒரு கருத்தைச் சொல்ல தளர்ச்சியே இல்லாதவர். நான் இப்படி ஒன்று சொல்வதுண்டு.ஆறுவயது குழந்தையா? ஆத்திச்சூடியைக் கொடுங்கள். 10, 12 வயது பையனா? மேல்நிலைப் பள்ளி அளவுக்குச் செல்லுகின்றானா? அவனுக்குப் பாரத நாடு, இந்திய நாடு, விடுதலை என்ற உணர்வான பாடல்களைக் கற்றுக்கொடுங்கள். சரி, அரும்பு மீசையோடு 20, 22 வயதில் வருகின்றனா? அவனுக்குக் காதல் பாடல்களைக் கற்றுக்கொடுங்கள். சரி 40 வயது வந்துவிட்டதா? கவலை வேண்டாம். அவனுக்குத் தமிழ்நாட்டினுடைய பெருமிதம், தமிழ்மொழியினுடைய அழகு, சிறப்பு, காவியங்களுடைய பெருமை, என்று காவியங்களின் பெருமையெல்லாம் எடுத்துக்காட்டுங்கள். கொஞ்சம் சோர்வு வருகிறது 50 வயதுக்கு மேல் என்றால், வேதாந்தப் பாடல்கள் என்ற களஞ்சியத்தையே எழுதியிருக்கிறார். பிறகு உலகத்தைப் பார்க்கின்ற கண்ணோட்டத்தையும் எழுதியிருக்கிறார். ஆக ஆறு வயது குழந்தைமுதல் 60 வயது தாண்டுகின்றவர்கள் வரை அவ்வளவு பேருக்கும் வேண்டிய விருந்துக் குவியல், வண்ணக்களஞ்சியம். எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்பதுபோல அத்தனை கோடி இன்பங்களையும் இந்த பாட்டுச் சிமிழுக்குள் ஊற்றிவைத்த பெருமை பாரதியாரைத்தான் சாரும்.
5)பாரதியினுடைய சக்தி, செல்லம்மா பற்றி சொல்லுங்கள்?…
கவிஞர்களுக்கு மனைவியாக இருப்பது மிகவும் கடினம். ஏனென்றால் கற்பனையில் இருந்துகொண்டு, அவர் வீட்டிற்கு வாங்கிவந்த அரிசியைக்கூட குருவிகளுக்குப் போட்டுவிட்டு வேடிக்கை பார்க்கும் பழக்கம் உடையவர்கள். எனவே அவர்கள் ஆவேசமாகவும் ஒரு மாற்றங்களோடும், ஒரு மனமயக்கத்தோடும், கற்பனை வெள்ளத்தோடும் வாழ்கின்ற கவிஞர்களுக்கு உடன்பட்டு உடனோடு இருக்கினற வாழ்க்கையில் செல்லம்மாள் பாரதிக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு.
6)பாரதியார் உயிரோடு இருந்திருந்தால் இப்போது உள்ள சூழ்நிலையில் எப்படி இருந்திருக்கும்?…
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் இவர் அஞ்சி அஞ்சிச் சாவார் என்பதை மாற்றிவிட்டு, இவர் அடுத்த நாட்டைப் பார்த்து கெஞ்சி கெஞ்சி சாவார் என்று வேண்டுமென்றால் பாட்டு வரிகளை மாற்றிக் கொண்டிருப்பார்.அச்சமில்லை அச்சமில்லை பாடலைக் குழந்தைகள் பாடுகின்றபோது அவர்களுக்குத் தேசபக்தி தோன்றுமில்லையா?…
அச்சம் என்ற ஒரு சொல்லே கிடையாது.
அஞ்சுதல் இல்லை. அமுங்குதல் இல்லை.
அவருக்கு அவ்வளவு பெரிய நிமிர்ந்த தோற்றம். வாழ்வில் அஞ்சாமையைத் தன்னடைய நோக்கமாகக் கொண்டு நெஞ்சுயர்த்தி வாழ்ந்த ஒரு கவியரசர். வானினும் உயர்ந்தன்று, கடலினும் ஆழப்பட்டது, மலையினும் உயர்ந்தது என்பதுபோல நாம் சான்றுகாட்டுவதற்குப் பாரதியாரைத்தான் சொல்லி மகிழவேண்டும்.இளைஞர்கள் தம்முடைய கையில் திருக்குறளை வைத்துக்கொண்டிருப்பதுபோல பாரதியாரையும் வைத்துக்கொண்டு தொடர்ந்து கவிதையைக் கேட்டு மகிழ்கின்ற மனத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.
நன்றி!

Add a Comment