POST: 2018-12-08T09:52:24+05:30

தொலைக்காட்சித் தொடரா – தொல்லை பெருக்கும் இடரா ?
============================================

மாலை வேளைகளில் 6.00 மணிக்கு மேல் ஓய்வாக நானும் என் துணைவியாரும் தொலைக்காட்சி நாடகத் தொடர்களைக் காண்பதில் நேரம் செலவிடுவதுண்டு.

நாடகம், நல்லுணர்வுகளைப் புலப்படுத்துவதாகவும், நயமான கருத்துகளை நல் வாழ்வுக்குத் துணை செய்கின்ற வகையில் நடைப்போக்குடையதாக இருக்க வேண்டும்.

எடுப்பவர்களைவிட, நடிப்பவர்களைவிட பார்க்கிறவர்களும் அறிவு சார்ந்தவர்கள் என்ற அச்சமும் நாணமும் அமைய வேண்டும். எப்போதோ மறந்துபோன மூட நம்பிக்கைகளை , குறி சொல்லும் சாமியாரை , கை பார்க்கும் சோதிடரை , அலகு குத்திக் கொண்டு தேர் இழுக்கும் கொடுமையை , தீ மிதிக்கும் வழக்கத்தை ஒவ்வொரு நாடகத்திலும் ஏதேனும் ஒரு மூட நம்பிக்கைக்குத் தவறாமல் ஊட்டம் தருவதாகக் காட்டுவது வெறுப்பைத் தருகிறது.

திருந்த வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இப்படி இழிவான வழக்கங்களுக்கு பொறுக்க முடியாத அளவுக்கு இடந்தருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

ஓரிரவும், பராசக்தியும் ஓராண்டுக்கு மேல் ஒடிய படங்கள் என்ற நினைவிருக்க வேண்டும்.
நாடகம் என்பது நள்ளிரவுச் சத்தமாக மாற்ற வேண்டாம்.

எளிய மக்கள் பார்க்கிறார்கள், அவர்களை ஏமாற்றுவதுதான் எங்கள் இலக்கு என்று பேசுகிற கொடுமையான உரைகளைக் காது கொடுத்து கேட்க முடியவில்லை. எளியவர்கள் அப்படி ஏமாறுகிறவர்கள் இல்லை.

நாடகத்தின் வழியாக நல்ல கருத்துக்களை வழங்கும் அறிவியல் ,ஊடகம் என்பதை நிறுவனத்தார் தெரிந்து பொறுப்போடு அணுக வேண்டும்.

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா
இது கொள்ளையாடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா

இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா
வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா

விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்து விளையாடும்ம்ம்ம்… ஊஊஓ….
விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்து விளையாடும்ம்ம்ம்
மனம் வெந்திடும் தோட்டக்காரனிடம் மிரட்டல் வார்த்தைகளிலாடும்
பல வரட்டு கீதமும் பாடும்
வித விதமான பொய்களை வைத்தது பிழைக்கும் உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா

அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தை குரங்கு தாவும்
அதன் அழகை குலைக்க மேவும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும்
சிலர் குணமும் இதுபோல் குறுகிப் போகும் கிறுக்கு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா
என்ற பட்டுக்கோட்டையாரின் பாடல் பகுத்தறிவுத் தேடலுக்குப் பயன்படும் பொன்வரிகளாகும்.

—– ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *