வாராமல் சென்றாரே சேலம் சண்முகம் !
==========================================
நான் நெருங்கிப் பழகிய மனத்துக்கு நெருக்கமானவராகத் திகழ்ந்த கம்பன் கலைச் செல்வர் நல்லபெருமாள் இல்லத்திற்கு நாள் தவறாமல் சென்று அவரோடு உறவாடி மகிழ்ந்திருக்கிறேன். அங்கே தான் முதன் முதலாக
நண்பர் சேலம் சண்முகம் அவர்களைக் கண்டேன்.
வளி வணிகத்தைப்பற்றியும் வேதியியல் தொழில் முதலீடு பற்றியும் அவர்கள் பேசினார்கள் அப்போது தொடங்கிய உறவு அறிஞர் நல்லபெருமாள் மறைவுக்குப் பிறகு எங்கள் பரிவு தொடர்ந்து வளர்ந்தது.
சேலம் சண்முகம் அவர்கள் ஒரு நல்ல வணிகர். அமைதியானவர்.
அருங்குணங்கள் வாய்ந்தவர். தன் மகனார் பெருமையை எப்போதும் பாராட்டிச் சொல்வார்.
தி.நகரிலேயே அவர் பலமுறை தங்கிச் சென்றிருக்கிறார். நானும் என் துணைவியாரும் மோரீசு நாட்டுக்கு ஒருமுறை சென்றபோது, எங்களுக்குத் துணையாக அவர் வந்திருந்தார். துணையாக வந்தார் என்ற சுமையே சிறிதும் தெரியாமல் எங்களைக் கனிவோடு பார்த்துக் கொண்டதை நினைத்து மனம் நெகிழ்கிறேன்.
மக்களைப் போலவே மரஞ்செடி கொடிகளையும் தன் பிள்ளைகளைப் போல வளர்த்தார். சென்னை வரும்போதெல்லாம் சித்த மருத்துவம், கைமருந்து, துறவியர் யோகம் பற்றியும் என்னுடன் பேசி மகிழ்வார். ஏதோ எனக்கு இவற்றின் மேல் பிடித்தம் வராமலேயே போய்விட்டது.
கடந்த மூன்றாண்டுகளாக மருத்துவமனையும் வீடுமாக நான் இருந்ததால், என்னைக் காணும் வாய்ப்பு அவருக்குக் கிட்டாமல் போயிற்று. வாரத்திற்கு மூன்று முறை தவறாமல் பேசி வந்த தனிப்பெரும் சிறப்புடையவர்.
அண்மையில் கூட என்னோடு பேசியபோது உங்களைப் பார்க்க வேண்டும் என்று மனம் தவிக்கிறது என்றார். அது என்ன நாளைக்கே வரலாமே, நீங்கள் வழங்கிய வேட்டியைத்தான் கட்டிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன். விடை சொல்லும்போது குரல் தழுதழுத்தது. வருகிறேன் என்று சொன்னவர், வராமலேயே சென்றுவிட்டார்.
மோரீசு நினைவுகள் எங்கள் மனத்தைவிட்டு நீங்குவதில்லை.உலக நாடுகள் வலம் வருவதில் அவருக்குத் தணியாத ஆர்வம்.
பாவை விழாவுக்குச் சேலம் சென்றிருந்தபோது , அவர் இல்லத்தில்தான் தங்கியிருந்தேன். அவரும் அம்மாவும் குடும்பமும் சூழ அன்பொழுக விருந்தளித்தார்கள்.
சேலம் தந்த செம்மலை இனி எப்போது காணப்போகிறேன் ?.
—– ஔவை நடராசன்

Add a Comment